Published:Updated:

“எழுத்தாளர்களுக்கு ரிட்டையர்மென்ட் கிடையாது!”

நீல பத்மநாபன்
பிரீமியம் ஸ்டோரி
நீல பத்மநாபன்

எனக்குச் சிந்தனைமொழி தமிழ்தான். கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தபோது, இங்கிருந்த தமிழர்களுக்குத் திருவனந்தபுரம்தான் தலைநகரம்.

“எழுத்தாளர்களுக்கு ரிட்டையர்மென்ட் கிடையாது!”

எனக்குச் சிந்தனைமொழி தமிழ்தான். கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தபோது, இங்கிருந்த தமிழர்களுக்குத் திருவனந்தபுரம்தான் தலைநகரம்.

Published:Updated:
நீல பத்மநாபன்
பிரீமியம் ஸ்டோரி
நீல பத்மநாபன்

“கதைக் கருவைத் தேடி நான் ஒருபோதும் அலைந்ததில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத் தெரியாத தன்மையில் சிலிர்த்துப் போய் நேரில் காணும், சொல்லிக் கேட்கும் சில கருத்துகளை மட்டும் என் மனம் சுவீகரித்துக்கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப் பற்றிக் கொள்ளும் இந்தக் கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது...” அழுத்தமாகப் பேசுகிறார் நீல பத்மநாபன். தமிழின் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர்.

‘தலைமுறைகள்’, ‘பள்ளிகொண்டபுரம்’, ‘தேரோடும் வீதி’ உள்ளிட்ட 20 நாவல்கள், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என விரிவும் ஆழமும் கூடிய படைப்புகள் இவருடைய பங்களிப்புகள். 2003-ல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுபெற்ற நீல பத்மநாபனுக்கு, 2007-ல் ‘இலை உதிர்காலம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் வாழும், 83 வயதைக் கடந்துவிட்ட அவருடன் தொலைபேசிவழி நிகழ்ந்த உரையாடல் இது.

“இந்தப் புள்ளியிலிருந்து பார்க்கும்போது இலக்கியம் பற்றிய உங்கள் அணுகுமுறையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?”

“நான் எழுதிய படைப்புகள் ஒவ்வொன்றும் என் மனதில் நீண்ட காலம் உழன்று, பிறகுதான் சிறுகதை, நாவல், நாடகம் போன்ற வடிவம் பெறுகின்றன. ‘தலைமுறைகள்’ நாவல் எழுதிய காலத்திலிருந்தே அப்படித்தான். படைப்பு ஒன்றை எழுதி முடிக்கும்போது ‘இனி என்னால் முடியாது’ என்ற அயர்ச்சிக்கு நான் ஆளாவதுண்டு. ஆனால், வாழ்க்கையும் மனிதர்களின் பல்வேறு வகையான அனுபவங்களும் என்னிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஒரு படைப்புக்கான அவஸ்தையை, அலைக்கழிப்பை மீண்டும் என்னுள் ஏற்படுத்திவிடும். கடைசியாக வந்த ‘இலை உதிர்காலம்’ வரை அப்படி உருவானதுதான். எழுத்தாளனைப் பொறுத்தவரை பாம்பு சட்டை உரிக்கிற மாதிரி. ‘தலைமுறை’ நாவல் வெளியாகிப் பரவலான கவனம் கிடைத்தபோது, நான் மீண்டும் அதே பாணியில் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்காது. ‘Don’t imitate yourself’ என்பது நான் எனக்கு அப்போது சொல்லிக் கொண்டது. இன்றுவரை தொடரும் அந்தப் பரிசோதனைதான் இலக்கியம் பற்றிய என்னுடைய அணுகுமுறையின் அடிப்படையாக இருக்கிறது. இதில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை!”

“எழுத்தாளர்களுக்கு ரிட்டையர்மென்ட் கிடையாது!”

“தமிழ், மலையாளம், ஆங்கில மொழிகளில் புலமைபெற்றவர் நீங்கள்; மொழிபெயர்ப்பிலும் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் எழுதுவது தமிழில், வாழ்வது மலையாள நிலப்பரப்பில்... உங்கள் சிந்தனைமொழி என்ன; பல மொழிகள் அறிந்திருப்பது ஒரு படைப்பாளிக்கு பலமா, பலவீனமா?”

“எனக்குச் சிந்தனைமொழி தமிழ்தான். கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தபோது, இங்கிருந்த தமிழர்களுக்குத் திருவனந்தபுரம்தான் தலைநகரம். தமிழ்நாட்டின் மாவட்டங்களில் இருப்பவர்கள் சென்னைக்குச் சென்றுவருவது மாதிரி இங்கிருப்பவர்கள் திருவனந்தபுரத்துக்கு வந்துசெல்வார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மலையாளம் ஆட்சிமொழியான பிறகு இங்கு தமிழ் தொடரமுடியாமல் போனது. என்றாலும், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பில் வழக்கொழிந்துபோன பல அரிய, தூய தமிழ்ச் சொற்கள் திருவனந்தபுரம் பகுதியில் இன்றைக்கும் சர்வசாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருக்கிறது. ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலின் கதாபாத்திரங்கள் எல்லாம் மலையாளிகள்தான்; ஆனால், நான் எழுதியது தமிழில். என் தாய்மொழி தமிழ்தான், அதில்தான் என்னால் எழுதமுடியும். போலவே, பல மொழிகள் தெரிந்திருப்பது கண்டிப்பாக ஒரு படைப்பாளிக்கு பலம் தரும் அம்சம்தான்.”

“உங்கள் சிறுவயது திருவனந்தபுரம், ‘பள்ளிகொண்டபுர’த்தின் திருவனந்தபுரம், இப்போதைய திருவனந்தபுரம் - இந்த நகரம் உங்களில் என்னவாக ஆகி நிற்கிறது?”

“நகரத்தை நடுநாயகமாக வைத்து ஒரு நாவல் எழுத முடியுமா என்ற கேள்வியின் விடையாகவே ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலை எழுதினேன். ஆனால், ‘பள்ளிகொண்டபுரம்’ நாவலில் ‘திருவனந்தபுரம்’ என்ற பெயர் ஒருமுறைகூட வந்திருக்காது. ‘தலைமுறைகள்’ நாவலில் இயங்கிய யதார்த்த வாழ்வை மீறிய ஆன்மிக முடிச்சுகளின் பொருள் எதுவாக இருக்குமென்ற தேடல் ‘பள்ளிகொண்டபுர’த்தில் சற்று விரிவடைந்திருந்ததோ என்று தோன்றுகிறது; காலத்தைப் பற்றிய கவனமும் ‘பள்ளிகொண்டபுர’த்தில் அழுத்தம் பெற்றிருந்தோ என்னமோ. ‘பி.வி.ராமன்பிள்ளை, தகழி சிவசங்கரன் பிள்ளை போன்றோர் எல்லாம் திருவனந்தபுரத்தைப் படைப்புகளில் கையாண்டிருக்கிறார்கள். ஆனால், அதன் ஆன்மாவைக் கைகொண்டவர் நீல பத்மநாபன்தான்’ என்றார் என்.வி.கிருஷ்ண வாரியார்.”

“எழுத்தாளர்களுக்கு ரிட்டையர்மென்ட் கிடையாது!”

“திருவனந்தபுரம் என்றால் தமிழிலக்கியத்தில் நினைவுக்கு வரக்கூடிய, உங்கள் நண்பர் நகுலன் பற்றிய நினைவுகள் என்னவாக இருக்கின்றன...”

“என் இலக்கிய வாழ்வின் ஆரம்ப திசையிலிருந்து ஆங்கிலம் கற்பித்த ஆசான்களாக, நெருக்கமான நண்பர்களாக என்னை வழிநடத்திய இருவர் நகுலனும், ஐயப்ப பணிக்கரும். நான் 1953-ல் பள்ளி இறுதி வகுப்பிலிருந்து இடைநிலை வகுப்புக்காகக் கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து ஆரம்பமான பழக்கம், நெருக்கம். அறுபதுகள் எழுபதுகளில் நகுலனும் ஷண்முக சுப்பையாவும் அவரவர் சைக்கிள்களை உருட்டிக் கொண்டுவர அவர்களுடன் நான் நடந்தவாறு தீராத இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டுத் திருவனந்தபுரம் நகர வீதிகளில் சந்துபொந்துகளில் உலா வந்திருக்கிறோம். நகுலனுடன் ஏறத்தாழ 60 ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருக்கிறேன். நட்பு மட்டுமல்ல... மதிப்பும் மரியாதையும் கொண்ட உறவின் அனுபவச் சிதறல்களை, அவரைவிட 18 ஆண்டுகள் இளைய நண்பனாக - தற்போது 83 வயதான ஒரு வயோதிகன் - ‘நகுலம்’ (விருட்சம் வெளியீடு) என்ற நீள்கவிதையில் பதிவுசெய்திருக்கிறேன்... அவருடைய நூற்றாண்டு நிறைவில் என்றும் சொல்லலாம்!”

“எழுத்தாளர்களுக்கு ரிட்டையர்மென்ட் கிடையாது!”

“இந்தக் காலகட்டத்தில் உங்களுடைய ஒருநாள் என்பது என்னவாக இருக்கிறது?”

“இப்போதெல்லாம் எனக்கு மரணம் பற்றிய சிந்தனைதான் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது; அழைத்தால் வந்துவிடக் கூடியதல்லவே மரணம். நான் ஒரு poor eater. குடி, சிகரெட் எதுவும் பழகியதில்லை. மூச்சுப் பயிற்சி மாதிரியான விஷயங்களைக் கற்றுக் கொண்டு அப்படியே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எழுத்தாளர்களுக்கு ரிட்டையர்மென்ட் கிடையாது. சாகும் வரை மனசு, அப்படியே அலைந்துகொண்டேதான் இருக்கும். கட்டுரை, கதை, நாவல்களுக்கான சங்கதிகள் மனதில் ஊறிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. என்னுடைய இலக்கிய வாழ்க்கை கவிதையில்தான் தொடங்கியது. மீண்டும் இப்போது கவிதையில்தான் வந்து நிற்கிறேன். அதற்காக, கற்பனையில் குறைபாடு ஏற்பட்டுவிட்டது என்றில்லை; வெளிப்பாட்டுக்குக் கவிதையே எளிமையாக இருக்கிறது, அவ்வளவே. எனவே, மனதைச் சூன்யமாக விடாமல், ஆக்டிவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகக் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.”

“நீங்கள் எழுதி அச்சில் வெளிவந்த பக்கங்களின் எண்ணிக்கை 6500-ஐத் தாண்டுகிறது. இலக்கியத்தின் வழி நீங்கள் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டதாக உணர்கிறீர்களா?”

“இத்தனை பக்கங்கள் வரவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு எதையும் எழுதியதில்லை. காலகட்டத்துக்கு ஏற்றவாறு, அந்தக் காலகட்டத்தின் பிரச்னைகளைப் படைப்புகளில் கையாண்டிருந்தேன். வாழ்வின் கடைசிக் காலகட்டத்தை நெருங்கும் மனிதன் தன்னுடைய ஈடுபாடுகளில் ஆர்வம் இழந்திருப்பான். ஈடுபாடுள்ள அம்சங்களைக் கைவிடாமல் இருந்தால், மீதி உள்ள காரியத்தைச் செய்ய மீண்டும் ஒரு ஜென்மம் எடுப்பான் என்பார்கள். ஆனால், எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. எழுதித் திருப்தி ஆகியிருந்தால் அன்றைக்கே நிறுத்தியிருப்பேன். ஆனால், மனதில் எப்போதும் ஒரு restlessness. என்னதான் நாம் தலைகீழாக நின்றாலும், வாழ்க்கை அது பாட்டுக்குப் போய்க் கொண்டேதான் இருக்கும். ஆக, இலக்கியத்தின் வழி நான் சொல்ல விரும்பியதெல்லாம் சொல்லிவிட்டேன் என்றே நினைக்கிறேன். புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism