Published:Updated:

புதுமைப்பித்தன் வாங்கிய சத்தியம்!

புதுமைப்பித்தன்
பிரீமியம் ஸ்டோரி
புதுமைப்பித்தன்

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

புதுமைப்பித்தன் வாங்கிய சத்தியம்!

ஓவியம்: டிராட்ஸ்கி மருது

Published:Updated:
புதுமைப்பித்தன்
பிரீமியம் ஸ்டோரி
புதுமைப்பித்தன்

“அப்பா இறந்துகொண்டிருந்தார். வியர்த்துக் கொட்டும் உடம்பை இரவெல்லாம் துடைத்துக்கொண்டே அம்மா அவரைப் பேசாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தார். ‘கமலா... நான் இறக்கப் போறேன்னு தெரியும், உனக்கும் தெரியும்... எந்த நொடின்னுதான் தெரியாது, சொல்ல வேண்டியதெல்லாம் இப்பயே சொல்லிடுறேன் - நான் போய்ட்ட பிறகு நீ வெள்ளைச் சீலை உடுத்தக் கூடாது, எப்பவும்போல இருக்கணும், தினகரி உன்னைப் பார்த்து பயந்துடக் கூடாது, அவளைப் படிக்க வச்சுப் பட்டதாரியாக்கணும், என்னோட எழுத்துக்கள் உங்க வாழ்க்கைக்கு ஆதாரமா இருக்கணும்... அதனால நீ சென்னைக்குப் போகணும்’ என்று அம்மாவிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். மறுநாள் அப்பா இறந்துவிட்டார், எனக்கு அப்போது இரண்டு வயது ஆகியிருந்தது” - நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரி சொக்கலிங்கம் தன் தந்தையின் இறுதி நிமிடங்களைத் தன் தாய் சொல்லக் கேட்டு நினைவில் பத்திரப்படுத்தியிருக்கிறார்.

தினகரி-சொக்கலிங்கம்
தினகரி-சொக்கலிங்கம்

இப்போது 75 வயதைக் கடந்துவிட்ட தினகரி, தன் தந்தை பயன்படுத்திய நாற்காலி, மேசை, ‘ஷீபர்ஸ்’ பேனா, வெற்றிலைச் செல்லம், காபி டம்ளர் ஆகியவற்றோடு அம்மா கமலாவின் நினைவுகளால் நிறைந்திருக்கும் ‘புதுமைப்பித்தன் நிலைய’த்தில் கணவர் சொக்கலிங்கத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

“எனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் முன்பே அப்பாவின் படைப்புகளை அம்மா எனக்கு வாசித்துக் காட்டத் தொடங்கிவிட்டார். ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’தான் அம்மா எனக்கு வாசித்துக் காட்டிய முதல் கதை. அதில் ‘ஆசைக்கு என்று காலம் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து’ என்று கந்தசாமிப் பிள்ளைக் குழந்தையைக் கடவுளுக்கு அறிமுகப்படுத்துவார். ‘அது வேற யாருமில்லடீ... நீதான்’ என்று அம்மா சிரித்துக்கொண்டே சொன்னது நினைவில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அப்பா என்கிற சொல், அன்பு, அறிவு எல்லாம் எனக்கு அம்மாதான்; அம்மா எனக்குத் தந்தையுமானவள்.” தினகரியின் புன்னகை அளக்கமுடியாத கனத்தைத் தாங்கியிருக்கிறது.

புதுமைப்பித்தனின் உடைமைகள்
புதுமைப்பித்தனின் உடைமைகள்

“அப்பா சத்தியம் வாங்கிக் கொண்டார், அம்மாவும் சத்தியம் கொடுத்துவிட்டார். ஆனால், மறுநாளில் இருந்தே அம்மா வீட்டில் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கிவிட்டது. இப்படியாக நான்கு ஆண்டுகள் திருவனந்தபுரத்தில் பாட்டி வீட்டிலிருந்த நானும் அம்மாவும், அப்பாவின் விருப்பப்படி சென்னைக்கு வந்தோம். திருவல்லிக்கேணியிலும், மயிலாப்பூரிலும் சில காலம் இருந்தோம். பிறகு அப்பாவின் மறைவையொட்டி, தமிழ் எழுத்தாளர்கள் திரட்டிக் கொடுத்த நிதியைச் சேமித்து இந்த இடத்தை வாங்கிக் குடியேறினோம். சென்னையில் வீடு வாங்கவேண்டும் என்பது அப்பாவின் லட்சியமாக இருந்தது. இந்த வீட்டுக்குப் ‘புதுமைப்பித்தன் நிலையம்’ என்றே பெயரிட்டோம்.

‘என் படைப்புகள்தான் உங்க வாழ்க்கைக்கு ஆதாரம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் அப்பா. ஆனால், பதிப்பாளர் ஒருவர் அனுமதியில்லாமல் அப்பாவின் படைப்புகளைப் பதிப்பித்து விற்பனை செய்தார். இதற்காக அம்மா நீதிமன்றப் படியேற வேண்டியிருந்தது. அப்பாவின் படைப்புகளை மீட்க உதவியவர் தொ.மு.சி.ரகுநாதன். முறையாகப் பதிப்பித்து வெளியிட்டவர் ‘ஸ்டார் பிரசுரம்’ ராமனாதன். படைப்புகள் புத்தகமாக வெளியாகும் முன்பே அவர் முன்தொகை வழங்கினார். இருவருக்கும் நாங்கள் என்றென்றைக்கும் நன்றியுடையவர்களாவோம்” என்றபடி மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார்.

 புதுமைப்பித்தன் மனைவி கமலா
புதுமைப்பித்தன் மனைவி கமலா

சட்டென்று மௌனம் கலைந்தவர், “இதுதான் அப்பா எழுதிய ‘ஷீபர்ஸ்’ பேனா, அவர் கையெழுத்துகூட இதில் இருக்கிறது பாருங்கள்” என்று பேனாவைக் கையளித்தார். நவீனத் தமிழிலக்கியத்தின் திசையைத் தீர்மானித்த பேனாவைக் கையிலேந்திய அந்த நொடி எனக்குச் சிலிர்த்தது.

புதுமைப்பித்தன் வாங்கிய சத்தியம்!

“இந்தப் பேனாவுக்கும் ஒரு கதை உண்டு. பூனாவிலிருந்து திருவனந்தபுரம் வந்த அப்பா தன் இறுதி நாள்களை எண்ணிக் கொண்டிருந்தார். மிகக் கொடிய நெருக்கடியில் பண உதவி வேண்டி உறவினர்களுக்குப் பல கடிதங்கள் எழுதியிருக்கிறார். மோசமான உடல்நிலையால், எழுதுவதற்குத் தெம்பில்லாமல் அம்மா கடிதம் எழுத அப்பா கையெழுத்து மட்டும் போட்டிருக்கிறார். அப்படி ஒரு கடிதத்தில் கையெழுத்துப் போடும்போது பேனா தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது. மையெல்லாம் கொட்டி ஒழுகியதைப் பார்த்து, ‘பாரு கமலா... எனக்கு முன்னயே என் பேனா செத்துப்போச்சு’ என்றிருக்கிறார். உடைந்த பேனாவை ‘நிப்’ கூட மாற்றாமல் பாதுகாத்து வைத்திருக்கிறேன்” என்ற தினகரியின் பார்வை சில நொடிகள் பேனாவில் நிலைத்துநின்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism