Published:Updated:

`நான் விவசாயின்னு பெருமையா சொல்வார்!' - கி.ரா-வின் கரிசல் நினைவுகள் பகிரும் சோ.தர்மன்

கி.ராஜ நாராயணன்

கரிசல் பகுதி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், விவசாயம் என, அனைத்து அம்சங்களையும் தன் எழுத்தில் பதிவிட்டவர். கரிசல் வட்டார மொழிக்கு எனத் தனி அகராதியை உருவாக்கியவர் மறைந்த எழுத்தாளர் கி.ராஜ நாராயணன்.

`நான் விவசாயின்னு பெருமையா சொல்வார்!' - கி.ரா-வின் கரிசல் நினைவுகள் பகிரும் சோ.தர்மன்

கரிசல் பகுதி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், விவசாயம் என, அனைத்து அம்சங்களையும் தன் எழுத்தில் பதிவிட்டவர். கரிசல் வட்டார மொழிக்கு எனத் தனி அகராதியை உருவாக்கியவர் மறைந்த எழுத்தாளர் கி.ராஜ நாராயணன்.

Published:Updated:
கி.ராஜ நாராயணன்

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியத்தின் தந்தையாகப் போற்றப்படுபவர் கி.ராஜநாராயணன். `ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் ராமானுஜம்’ என்பதுதான் இவரது இயற்பெயர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள இடைச்செவலில் 1922-ல் பிறந்தவர். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். இவர், அடிப்படையில் ஒரு விவசாயி. கரிசல் பகுதி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், விவசாயம் என, அனைத்து அம்சங்களையும் தன் எழுத்தில் பதிவிட்டவர். கரிசல் வட்டார மொழிக்கு எனத் தனி அகராதியை உருவாக்கியவர். `கோபல்லபுரத்து மக்கள்' என்ற இவரின் நாவலுக்காக 1991-ல் சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.

கி.ராஜ நாராயணன்
கி.ராஜ நாராயணன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தவர், பல விவசாயப் போராட்டங்களில் கலந்துகொண்டு இரண்டு முறை சிறை சென்றவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்சி தடை செய்யப்பட்ட காலத்திலேயே இடைச்செவல் கிராமத்தில் மே தினத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றியுள்ளார். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் சிறப்பு பேராசிரியராகவும், துறையின் தலைவராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய `கரிசல் காட்டுக் கடுதாசிகள்’ மிகவும் புகழ்பெற்றவை. ஆழ்ந்த இசை ஞானம் கொண்ட அவர், குற்றாலம் டி.கே.சிதம்பர முதலியார், காருகுறிச்சி அருணாச்சலம், விளாத்திகுளம் நல்லப்பசாமி, குருமலை லட்சுமி அம்மாள் ஆகியோரிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காசநோயால் பாதிக்கப்பட்டதால் அவரோட உடல் சங்கீதத்துக்கு ஒத்துவரவில்லை. அதனால், எழுத்தின் பக்கம் அவரது கவனம் திரும்பியது. 40 வயதிலிருந்துதான் எழுத்துப் பணியைத் தொடங்கினார். ஆனாலும், அவர் விவசாயத்தைக் கைவிடவில்லை. வயது மூப்பினால் புதுச்சேரியில் நேற்று இரவு காலமானார். இவரின் மனைவி கணபதி அம்மாள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.

கி.ரா-வைப் பற்றி `சூல்’ நாவலுக்காக, `சாகித்திய அகாடமி விருது’ பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனிடம் பேசினோம்.

``தென் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைக் கொண்ட ஊர் கோவில்பட்டி. இவர்கள் அனைவரையும் உருவாக்கியது `கி.ரா’தான். தான் மட்டும் எழுத்தாளனா இருந்தா மட்டும் போதாது.

சோ.தர்மன்
சோ.தர்மன்

எழுத்தில் ஆர்வமுள்ளவர்களையும் எழுத்தாளனாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் `கி.ரா’. புதிய படைப்பாளியை மட்டம்தட்டிப் பேசாமல், குறைகளை சுட்டிக் காட்டி சரி செய்து, எழுதக் கற்றுக் கொடுத்தவர். வாசிப்பு அனுபவம் மட்டுமே உள்ளவர்கள், வாழ்க்கை அனுபவம் கொண்டவர்கள்னு எழுத்தாளர்கள்ல ரெண்டு வகை இருக்கு. இதுல, கி.ரா ரெண்டாவது வகை எழுத்தாளர். அவர் அடிப்படையில் ஒரு மானாவாரி விவசாயி. அவர் எழுத்தாளராக இருந்தபோதிலும், ``நான் ஒரு விவசாயி” எனச் சொல்வதில் பெருமைப்படுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரோட சொந்த ஊரான `இடைச்செவல்’ கிராமம், முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பியுள்ள மானாவாரி விவசாயம் நிறைஞ்ச ஊரு. கம்பு, குதிரைவாலி, சோளம், தினை, சாமை, வரகுன்னு சிறுதானியங்கள் பயிரிடப்பட்டாலும், `நிலக்கடலை’தான் முக்கிய சாகுபடிப் பயிரா இருந்துச்சு. `இடைச்செவல் கடலை’ன்னு சந்தையில் தனி இடத்தைப் பிடிச்சுது. கருத்த கரிசல் மண் நிலமும், வளமான ஆட்டுகிடையும்தான் `செவல் கடலை’யோட சிறப்புக்கு முக்கியமான காரணம். ``எங்க செவலூரு கரிசக்காட்டு கடலைன்னா ஒத்த ரூவா கூட கொடுத்து வாங்குவாங்க”ன்னு பெருமையாச் சொல்லுவார் கி.ரா. அது உண்மைதான். `கோவில்பட்டி கடலைமிட்டாய்’ தயார் செய்ய இடைச்செவல் கடலையை கடலைக்காரர்கள் (கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள்) விரும்பி வாங்குவதைப் பார்த்திருக்கேன்.

கி.ராஜ நாராயணன்
கி.ராஜ நாராயணன்

``மண் வாசனைன்னா... அது, `கரிசக்காட்டு வாசனை’தான். மழைத் தூத்தல்ல நின்னு மூச்சை இழுத்து சுவாசிச்சுப் பாத்தா மணக்கும்னு சொல்லுவார். கோடை உழவு, பொன்னேர் பூட்டுதல், மழை பெய்ய மழைக்கூழ் வழிபாடு, மழையை நிறுத்த மழையனுப்பு வழிபாடு எனக் கரிசல் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த சடங்கு முறைகளையும் பதிவு செய்தவர். மழையை மட்டுமே நம்பியிருக்குற அந்த விவசாயி படும்பாட்டையும், உழைப்பையும் கதை, சிறுகதை, கட்டுரைகள் எனப் பல தளங்களில் பதிவு செய்தவர். ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து தமிழகத்துக்கு வந்து குடியேறிய மக்கள், தரிசு நிலத்தை அயராத உழைப்பால், வளமிக்க சோலையாக மாற்றி பரம்பரை பரம்பரையாக மண்மணத்தோடு வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றிய நாவல்தான் `கோபல்ல கிராமம்’.

`கரிசக்காட்டுல ஒத்த மழை பெய்ஞ்சா போதும்யா... மகசூலு உப்பாக் குவியும்யா’ எனச் சொல்வார். பாரம்பர்ய விதைகளை மட்டும்தான் விதைக்க வேண்டும். ஒட்டுரக, வீரிய விதைகளை விதைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். வீரிய ரக விதைள், ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விளைவுகள், பாதிப்புகளைப் பற்றியும் நிறைய விழிப்புணர்வூட்டும் கட்டுரைகளை எழுதியிருக்கார். ``எள்ளுக்கு ஏழு உழவு”ன்னு ஒரு சொலவடையைச் சொல்லிட்டு அதுக்கு அர்த்தம் கேட்பார். பிறகு அவரே, ``நெல்லு, கரும்பு, சோளம்ன்னு ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரி உழணும். எள்ளு விதைக்குறதுக்கு முன்னால ஏழு தடவ உழணும்டா. அப்பத்தான் மகசூலை அண்ணாந்து பார்க்க முடியும், இல்லேன்னா குனிஞ்சுதான் பார்க்கணும்” என அதற்கான விளக்கமும் சொல்வார். புதுச்சேரியில இருந்தாலும், ஊர்ல உள்ளவங்க யாராவது போன் செஞ்சாக்கூட, நலம் விசாரிச்சுட்டு ``ஊர்ல வெவசாயம் எப்படி இருக்கு”ன்னுதான் கேட்பார்.

கி.ராஜ நாராயணன்
கி.ராஜ நாராயணன்

போன வருசம் பங்குனியில் கி.ராவை சந்திச்சப்போ, ``சித்திரை பிறக்கப்போகுது இந்தப் பயலுவ கோடை உழவடிச்சானுகளா இல்லையா?”ன்னு உரிமையோடக் கேட்டார். ``எனக்கு உடம்பு சரியில்லனுதான் இங்கயே (புதுச்சேரி) கிடக்கேன். இல்லேன்னா ஊருக்கு வந்திருப்பேன்”னு அடிக்கடிச் சொல்வார். அடுத்த வருசம் அவரோட 100-வது பிறந்தநாளை அவரோட கிராமத்துல சிறப்பா கொண்டாடலான்னு சக எழுத்தாளர்கள் நினைச்சிருந்தோம். அதுக்குள்ள எங்களை விட்டுப் பிரிஞ்சுட்டார். ஆனா, அவரோட கரிசல் இலக்கிய படைப்புகள் மூலம் அதே கரிசல் மூச்சுக் காற்றுடன் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். அவரது இறுதிச்சடங்கின்போது, `அரசு மரியாதை செய்யப்படும்’ முதல்வர் அறிவித்துள்ளதை எழுத்தாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரமா பார்க்கிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism