சினிமா
Published:Updated:

காந்தி - ஒரே நேரத்தில் தேவனாகவும் அசுரனாகவும்...

சுனில் கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுனில் கிருஷ்ணன்

காந்தி நமக்கு வியப்பளிப்ப வராக உள்ளார். கிட்டத்தட்ட நடைமுறைச் சாத்தியமில்லாத வாழ்க்கை. இயல்பாகவே காந்தியின் வாழ்வில் பல தருணங்கள் அசாதாரணமானவை;

தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான சுனில் கிருஷ்ணன், அடிப்படையில் ஓர் ஆயுர்வேத மருத்துவர். மகாத்மா காந்தியின் மகத்தான சீடராகத் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் அவர், ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுபெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தொடங்கிய இணையதளம் ‘காந்தி - இன்று.’ இது தமிழில் காந்தியைப் பற்றி அறிவதற்குரிய முதன்மையான தளமாக இன்று விளங்குகிறது. ‘நாளைய காந்தி’ (யாவரும்), ‘ஆயிரம் காந்திகள்’ (நன்னூல் பதிப்பகம்), ‘காந்தியைச் சுமப்பவர்கள்’ (பரிசல்) என காந்தியை மையப்படுத்திய மூன்று நூல்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் சுனில் கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல்...

காந்தி - ஒரே நேரத்தில் தேவனாகவும் அசுரனாகவும்...

`` ‘ரத்தமும் சதையுமாக இப்படி ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என வரும் தலைமுறை நிச்சயம் நம்ப மறுக்கும்’ என்று காந்தி பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியதன் இன்றைய பொருத்தப்பாடு என்ன?”

“காந்தி நமக்கு வியப்பளிப்ப வராக உள்ளார். கிட்டத்தட்ட நடைமுறைச் சாத்தியமில்லாத வாழ்க்கை. இயல்பாகவே காந்தியின் வாழ்வில் பல தருணங்கள் அசாதாரணமானவை; தீரமிக்க நாயகத்தன்மையை வெளிப்படுத்துபவை. ஆனால், தன்னைப் போன்ற சாமானியனால் இயல்வது, நிச்சயம் எல்லோருக்கும் சாத்தியமாகும் என காந்தி கருதினார். காந்திமீது இருக்கும் வியப்பு நம்மிடமிருந்து அவரை அந்நியப்படுத்துகிறது. அன்றாட வாழ்விலிருந்து அவரை வெளியேற்ற போதுமான காரணத்தை அளிக்கும் அந்த வியப்பே, பிறகு திரிந்து வெறுப்பாக மாறுகிறது. இந்த வெறுப்பு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதை எதிர்கொள்ள காந்தி புனையப் படுகிறார். அந்தப் புனைவுக்கு எதிர்புனைவு உருவாகிறது. இன்று நாம் இவ்விரு புனைவுகளின் ஊடாகவே காந்தியை அறிகிறோம். மகாத்மா அல்லது பெண் பித்தர். தியாகி அல்லது சந்தர்ப்பவாதி. ரத்தமும் சதையுமாக ஊசலாட்டங்களுடன் வாழ்ந்த, போராடிய மனிதரைத் தவற விட்டோம். நாம் ஒன்று புனிதப்படுத்துகிறோம்; அல்லது அவதூறு செய்கிறோம். காந்தி ஒரே நேரத்தில் தேவனாகவும் அசுரனாகவும் புனையப்படுகிறார் என்பதுதான் வேடிக்கை.’’

காந்தி - ஒரே நேரத்தில் தேவனாகவும் அசுரனாகவும்...

`` ‘நாளைய காந்தி’, ‘ஆயிரம் காந்திகள்’, ‘காந்தியைச் சுமப்பவர்கள்’ - ஆர்வமூட்டும் தலைப்புகளால் அமைந்த இந்த நூல்களைப் பற்றிச் சொல்லுங்கள்..?’’

“ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ எனக்கு காந்தியை மீள் அறிமுகம் செய்து வைத்த நூல். எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ‘நேற்றைய காந்தி’ என்றொரு முக்கியமான கட்டுரை எழுதியுள்ளார். கவிஞரும் பத்திரிகையாளருமான ஆசை எழுதிய நூல் ஒன்றின் தலைப்பு ‘என்றென்றும் காந்தி.’ அவ்வகையில் ‘நாளைய காந்தி’ என்பது காந்தியைச் சாராம்சப்படுத்தி வருங்காலத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சி.

காந்தியால் தாக்கம் பெற்ற வெவ்வேறு ஆளுமைகளை அறிமுகம் செய்யும் நூல் ‘ஆயிரம் காந்திகள்.’ காந்தியின் சகாவான குமரப்பா தொடங்கி நேரடியாக நான் நன்கு அறிந்த வானவன் மாதேவி வரை பலரையும் பற்றிப் பேசுகிறது.

‘காந்தியைச் சுமப்பவர்கள்’ காந்தியின் இருப்பைப் பேசும் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு நூல். அரசியல்வாதிகள் அல்ல, எழுத்தாளர்களும் கலைஞர்களுமே காந்தியைச் சுமப்பவர்களாக இருக்கிறார்கள். வெவ்வேறு எழுத்தாளர்கள் கதைகளில் காந்தியை எப்படிக் கையாண்டுள்ளார்கள் என்பதைக் காட்டும் இத்தொகுதிக்கு இதுவே பொருத்தமான பெயராக இருக்க முடியும்.”

காந்தி - ஒரே நேரத்தில் தேவனாகவும் அசுரனாகவும்...

``காந்தி வாழ்ந்த காலகட்டத்திலேயே அவரைப் பற்றிக் கதைகள் தமிழில் எழுதப்பட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது...’’

“புதுமைப்பித்தனின் ‘புதிய நந்தன்’ காந்தியின் வருகையை அவதானிக்கும் கதைதான். ராமையாவின் ‘பதச் சோறு’ காந்தி காலத்தில் எழுதப்பட்ட கதை. சி.சு.செல்லப்பா காந்தியத் தாக்கத்தில் பல கதைகளை எழுதியுள்ளார். ‘மணிக்கொடி’ இதழே காந்தியத் தாக்கம் கொண்டதுதான். டி.எஸ். சொக்கலிங்கம், பெ.கோ‌.சுந்தர்ராஜன் என்கிற சிட்டி ஆகியோர் காந்திய இயக்கத்தோடு தொடர்பில் இருந்தவர்கள். சிட்டி காந்தியின் ஆதாரக் கல்வித் திட்டத்தைப் பற்றி ஒரு நூலை 1930களின் இறுதியில் மொழிபெயர்த்துள்ளார். கல்கி ‘தியாக பூமி’ எழுதியுள்ளார். இன்னும் தேடினால் பல கதைகள் கிடைக்கக்கூடும்.

இவற்றுக்கெல்லாம் முன்பு, சுப்பிரமண்ய சிவா 1920களில் எழுதிய நாடகத்தில் திலகரின் மரணத்தறுவாயில் பாரத மாதாவைக் கவனிக்கும் பொறுப்பை காந்தியிடம் ஒப்படைத்துவிட்டுத் திலகர் கண்மூடுவதாக முடியும். காந்தியைக் கேலி செய்யும் பாடல்கள் தென்னாப்பிரிக்கச் சிறுவர்களிடம் புழக்கத்தில் இருந்ததை ஆய்வாளர்கள் பதிவுசெய்கிறார்கள். பாரதி தனது கவிதையில் காந்தியை எதிர் கொண்டிருக்கிறார். நாமக்கல் கவிஞர் எழுதியுள்ளார். காந்திய வழிமுறையைப் பறைசாற்றும் மேடை நாடகங்கள் போடப் பட்டுள்ளன. காந்தியின் மரணத்தின்போது பதிப்பிக்கப்பட்ட ஒப்பாரிப் பாடல்கள் குறித்து அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்திய மொழிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டால், புனைவிலக்கியத்திலும் கவிதையிலும் காந்தி அளவுக்கு அவருடைய வாழும் காலத்திலேயே பதிவான வேறு ஆளுமை இருக்க முடியுமா என யோசிக்கிறேன்.”

காந்தி - ஒரே நேரத்தில் தேவனாகவும் அசுரனாகவும்...

`` ‘காந்தியைச் சுமப்பவர்கள்’ தொகுப்பின் கதைகளில், பாதிக்கும் மேல் காந்தி படுகொலை பற்றியவை என்பது தற்செயலானதா?’’

“கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களில், அவர்கள் காலத்துக்குப் பிறகு ஹிட்லருக்குத்தான் அதிக புனைவுகள் வெளியாகியுள்ளன. ஹிட்லர் அளவிற்கு இல்லையென்றாலும் அவருக்கடுத்த எண்ணிக்கையில் காந்தி புனைவுகளில் கையாளப்பட்டிருக்கிறார். இது ஒரு சுவாரசியமான முரண். ஒருவகையில் ஹிட்லருக்கும் இரண்டாம் உலகப்போருக்குமான முறிமருந்தாக காந்தி திகழ்கிறார்.

காந்தியின் இறுதி நாள்களில் இயல்பாகவே காவிய சோகம் கவிகிறது; அவரது மரணம் மகத்தான வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமான நாடகிய உச்சம். அந்த மரணத்தைப் புனைவுகளின் ஊடாக நிலைநிறுத்துவதும்கூட மனித குலத்துக்கான எச்சரிக்கையின் பொருட்டுதான். புனைவின் வழி அவரது மரணத்திற்கான கூட்டுப் பொறுப்பை இந்தியச் சமூகம் ஏற்கிறது. குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. அடிப்படைவாதம் தலைதூக்கும்போதெல்லாம், அதற்கு நாம் கொடுத்த விலையை காந்தியின் படுகொலை நினைவுபடுத்தி மீண்டும் மீண்டும் மேலெழுந்து வரும்.”

``காந்தி ஏன் புனைவெழுத்தாளர்களின் கனவாக இருக்கிறார், ஒரு புனைவெழுத்தாளருக்கு காந்தியின் வாழ்க்கை வழங்கும் சாத்தியங்கள் யாவை?’’

“காந்தி படைப்பு மனதிற்கு ஒரு உரைகல்லாகப் பயன்படுகிறார் என்பதே காரணமாக இருக்க முடியும். தன் காலத்திலேயே தன் எல்லைகளை உணர்ந்த மாபெரும் நாயகன் காந்தி. ஒற்றைப் பரிமாணமுள்ள தட்டையான மனிதராக அல்லாமல் முரண்பாடுகளின் உருவமாகவே அவர் திகழ்ந்தார். காந்திக்கு இயல்பாகவே சிறிய விஷயங்கள்மீது அதீத கவனம் உள்ளது. நுண்ணிய அவதானிப்புத் திறன் அவரிடம் வெளிப்படுகிறது. இதுவே ‘சத்திய சோதனை’ போன்ற ஒரு ஆக்கத்தை மகத்தான யதார்த்தவாத நாவலாக வாசிக்க இடமளிக்கிறது. மில்லி கிரகாம் போலக் எழுதிய ‘காந்தி எனும் மனிதன்’ ஏராளமான புனைவுத் தருணங்களைக் கொண்டது. ‘பேட்மேன்’ திரைப்படத்தில் வரும் ஹார்வி டென்ட் எனும் பாத்திரம் சொல்லும் வசனம் ஒன்றுண்டு: ‘நீங்கள் இளமையில் மரித்து நாயகனாக ஆவீர்கள் அல்லது நீங்கள் எதிர் நாயகனாக ஆவதைக் காணும் அளவிற்கு நெடுங்காலம் வாழ்வீர்கள்.’ காந்திக்கும் இது பொருந்தும்.”

காந்தி - ஒரே நேரத்தில் தேவனாகவும் அசுரனாகவும்...

``சமகால வரலாற்றிலிருந்து காந்தியை அணுகும் நேரடி வரலாற்று நூல் ஒன்று தமிழில் ஏன் இன்னும் சாத்தியப்படவில்லை?’’

“வரலாற்று நோக்கில் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா அவருடைய காலத்திலேயே திராவிட இயக்கக் கோணத்திலிருந்து காந்தியை மறுவரையறை செய்துள்ளார். சமகால வரலாற்றிலிருந்து காந்தியை அணுகும் அசல் நூல்கள் என ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’, பிரேமின் ‘காந்தியைக் கடந்த காந்தியம்’, அ.மார்க்ஸின் ‘காந்தியும் தமிழ் சனாதனிகளும்’, ப.திருமாவேலனுடைய ‘காந்தியார் சாந்தியடைய’, பழ.அதியமானின் ‘வைக்கம் போராட்டம்’ ஆகிய நூல்களைக் குறிப்பிடலாம். இன்றைய தமிழக மற்றும் இந்திய அரசியல் சூழலில் மத அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராக காந்தியை நிலைநிறுத்த இந்த நூல்கள் முயல்கின்றன. தமிழில் காலத்திற்கு ஏற்ப வரலாற்று காந்திக்கு மறுவிளக்கம் அளிக்கும் பணி நிகழ்ந்தபடியேதான் உள்ளது. ஆனால், குஜராத்தியிலோ ஆங்கிலத்திலோ நிகழ்வதுபோல் ஆய்வுப் பணி எதுவும் இங்கு நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. அதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவே.”