Published:Updated:

தி.ஜா-100: காலத்தைப் படைத்த ஆளுமை தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமன்
பிரீமியம் ஸ்டோரி
தி.ஜானகிராமன்

- சுகுமாரன்

தி.ஜா-100: காலத்தைப் படைத்த ஆளுமை தி.ஜானகிராமன்

- சுகுமாரன்

Published:Updated:
தி.ஜானகிராமன்
பிரீமியம் ஸ்டோரி
தி.ஜானகிராமன்

எழுத்து

முன்னோடித் தமிழ்ச் சிறுகதையாளர்களில் எல்லாத் தரப்பினராலும் ஏற்கப்பட்டவர் தி.ஜானகிராமன். அவருடைய கதைகள் இலக்கியத்தை வாழ்க்கை அனுபவமாகக் கருதும் தீவிரர்கள், வாசிப்பை இன்பமாக எடுத்துக்கொள்பவர்கள், பொழுதுபோக்குச் சுவாரஸ்யத்தை மட்டும் நாடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் ஈடுகொடுப்பவை. இலக்கியத்தரமும் அனைத்துத் தரப்பின் ஏற்பும் கொண்ட கதைகளை எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. தமிழில் மட்டுமல்ல; மற்ற இந்திய மொழிகளிலும் பிற உலக மொழிகளிலும் இதுவே இயல்பான நிலை. இந்த நிலைதான் இலக்கிய வாசிப்பில் படிநிலைகளைத் தீர்மானிக்கிறது. புதுமைப்பித்தன் வாசகர்களும் மௌனி வாசகர்களும் கல்கி வாசகர்களும் இந்தப் படிநிலையைச் சார்ந்தே உருவாகிறார்கள். இவ்வாறான வாசகர்கள் எல்லோராலும் போற்றப்படும் எழுத்தாளராக ஒருவர் கவனம் பெறுவது அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்ற சில எழுத்தாளர்களில் தி.ஜானகி ராமன் முதன்மையானவர். அவரது எந்தச் சிறுகதையும் புரிந்துகொள்ளக் கடினமானது அல்ல; பூடகமானது அல்ல; சிக்கலானது அல்ல. வாசிக்கச் சுவாரஸ்யமானதும் திறந்து கிடப்பதும் சரளமானதும்தான்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.ஜானகிராமனின் அதிகம் பேசப்படும் சிறுகதையான ‘சிலிர்ப்பு' இந்தக் கூற்றுக்கு உதாரணம். பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்குப் போயிருந்த பிள்ளையைத் தந்தை திரும்ப ஊருக்கு அழைத்துவருகிறார். அந்த ரயில் பயணத்தில் நிகழும் சம்பவங்கள்தாம் கதை. ரயிலில் பார்க்கும் அநாதைச் சிறுமியின்பால் அவன் காட்டும் களங்கமற்ற அன்பை அந்த நிகழ்ச்சிகளிலிருந்து தெரிந்து கொள்ளும் தந்தை நெகிழ்ந்துபோகிறார். அவனிடமிருந்து வெளிப்படும் கருணை அவரைச் சிலிர்க்கச் செய்கிறது. அவனை அணைத்துக்கொள்ளும்போது சச்சிதானந்தத்தையே தழுவிக்கொண்டது போலிருந்தது என்ற உணர்வுடன் கதை முடிகிறது. மிக எளிமையாகவும் இயல்பாகவும் எழுதப்பட்ட கதை. வாழ்க்கையின் விள்ளலாகப் பார்க்கும் தீவிர வாசகர் தம் வாழ்வின் அன்புமயமான கணத்தை உருவாக்கிக் கொள்ளவோ, நினைவுகூரவோ கூடும். கதை இன்பத்தை நாடுபவர், பெருமூச்சுடன் வியக்கக் கூடும். பொழுதை நகர்த்த விரும்பியவர், புதிய புன்னகையுடன் அமரலாம். இலக்கியத்தில் சமுதாயச் செய்தியைக் காண ஆசைப்படுபவர், குழந்தைத் தொழிலாளியின் அவல நிலைபற்றிக் கரிசனப்படலாம். இந்த வகையினர் எல்லோராலும் வாசிக்கப்பட்ட கதை இது. அவர்களுக்குரியதை எடுத்துக் கொள்ளும் பாங்கில் எழுதப்பட்ட கதையும்கூட. ‘தி.ஜானகிராமன் கதைகள்' என்று பேசத் தொடங்கியதுமே சுட்டிக்காட்டப்படும் தவிர்க்க இயலாத கதைகளில் ‘சிலிர்ப்பு'ம் ஒன்று. இலக்கியப் பெறுமதி குன்றாமலும் அதே சமயம் பெரும்பான்மை வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுபவையாகவும் அமைந்த கதைகள் தி.ஜானகிராமனுடையவை. இந்த இயல்பு காரணமாகவே அவை வெகுஜனப் பிரபலமும் அடைந்தன. இன்றும் பெருமளவு வாசகர்களால் வாசிக்கப்படுபவையாக இருக்கின்றன.

தி.ஜா-100: காலத்தைப் படைத்த ஆளுமை தி.ஜானகிராமன்

தமிழ்ச் சிறுகதையாளர்களில் தி.ஜானகிராமனை ‘நவீனச் செவ்வியலாளர்' (மாடர்ன் கிளாசிஸ்ட்) என்று குறிப்பிடவே விரும்புகிறேன். இப்படிக் குறிப்பிடுவதே சிக்கலுக்குள் தள்ளுகிறது. செவ்வியலாக இருக்கும் ஒன்று, எவ்வாறு நவீனமானதாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. செவ்வியல் இலக்கியம் ஏற்கெனவே நிலைபெற்றிருக்கும் மதிப்பீடுகளைச் சார்ந்தும் மறுத்தும் இயங்குகிறது. ‘உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல்’ என்பது சிலப்பதிகாரத்தின் காவிய நோக்கங்களில் ஒன்று. கற்பின் கனலியாகவே கண்ணகியின் பாத்திரம் சித்திரிக்கப்படுகிறது. அதை வலுப்படுத்தும் முறையில் காவியம் இயற்றப்படுகிறது. செவ்வியல் மதிப்பீட்டைச் சார்ந்தே அமைகிறது. இது செவ்வியல் போக்கின் இயல்புகளில் ஒன்று. இதற்கு மாறான நிலையை நவீனப் பார்வை முன்வைக்கிறது. சூதில் மனைவியைப் பணயம் வைத்த அண்ணனின் கையை எரிக்க முன்வருகிறது அந்தப் பார்வை. அண்ணனுக்கு அடங்கிய தம்பிமார் என்ற மதிப்பீட்டை அது புறக்கணிக்கிறது. புதிய மதிப்பீட்டை உருவாக்கும் காரணத்தால் நவீனத்தன்மை பெறுகிறது. சிலப்பதிகார உதாரணத்தைச் செவ்வியலுக்கும் பாஞ்சாலி சபதக் காட்சியை நவீன மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டாக முன்னிருத்தலாம். இந்த இரு இயல்புகளும் தனித்தும் ஒன்றுடன் ஒன்று பின்னியும் தி.ஜானகிராமன் கதைகளில் வெளிப்படுகின்றன. அதுவே அவரை நவீனச் செவ்வியலாளர் என்று அடையாளம் காணக் காரணமாகிறது. சில கதைகளில் செவ்வியல் மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். பல கதைகளில் அந்த மதிப்பீடுகளை விசாரணைக்கு உள்ளாக்குகிறார். முதலாம் வகையை விடவும் இரண்டாம் வகையான கதைகளே அவரிடம் அதிகம். அதனாலேயே அவர் இன்றும் நவீனராகக் கருதப்படுகிறார். அவரது கதைகள் நிகழ்கால மனப்பாங்குக்கு இசைந்தவையாக நிலைபெறுகின்றன.

தி.ஜானகிராமனின் ஆரம்பக்காலக் கதைகளில் ஒன்று ‘பசி ஆறிற்று.' அகிலாண்டத்தின் கணவர் சாமிநாத குருக்களுக்குத் தொழில், கோவில் கைங்கரியம். ‘பீரங்கி காதருகில் வெடித்தால்கூட, நெருப்புக் குச்சி கிழிக்கிற மாதிரி இருக்கு’ என்று சொல்லும் அளவுக்குச் செவிடு. மனைவியான தன் குரலையாவது அவர் கேட்டிருப்பாரா என்று அகிலாண்டம் ஆதங்கப்படுகிறாள். அவருடைய நெருக்கத்தை விழைகிறாள். காதுகேளாமைக் குறை சாமிநாத குருக்களை மனைவியின் வேட்கையையும் எதிர்பார்ப்பையும் புரிந்துகொள்ள முடியாத அரை மனிதனாக ஆக்கியிருக்கிறது. ஆணின் அண்மைக்கு ஏங்கும் அகிலாண்டம் எதிர்வீட்டுக்கு வந்திருக்கும் மிலிட்டரிக்காரன் ராஜத்தின் மீது மையல் கொள்கிறாள். அவனுடைய கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நடந்துகொள்கிறாள். அவன் மீண்டும் ராணுவப் பணிக்குத் திரும்புகிறான். அகிலாண்டம் விரகத் துடிப்புடன் குமைகிறாள். இந்த அனுபவத்திலிருந்து மீண்டுவரும் அகிலாண்டத்தின் மனதில், இன்னொரு இளைஞன் சஞ்சலத்தை மூட்டுகிறான். துடிக்கத் துடிக்க அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். பசியுடன் காத்திருக்கும் அவளைப் பரிவுடனும் கனிவுடனும் நம்பிக்கையுடனும் பார்க்கும் கணவன் மீது அவளுக்கு அன்பு சுரக்கிறது. அவருடைய வியர்வையைத் துடைக்கும் நெருக்கத்தில் அவரை உணர்கிறாள். அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவளுக்கு எல்லாப் பசியும் தீர்கிறது.

திருமண உறவால் சிறைப்பட்டுப் போன பெண்ணின் வேட்கையைச் சொல்லும் இந்தக் கதை, கணவனே அடைக்கலம் என்ற நிறுவப்பட்ட மதிப்பீட்டையே வலியுறுத்துகிறது. பெண்ணை மையமாகவைத்து உருவாக்கப்பட்ட செவ்வியல் மதிப்பீட்டை ஏற்கிறது. இந்தக் கதையை தி.ஜானகிராமனின் செவ்வியல் கதை என்று சொல்லலாம். ஏறத்தாழ இதேபோன்ற சந்தர்ப்பத்தைக் கொண்ட இன்னொரு கதை ‘தூரப் பிரயாணம்.' அதில் வெளிப்படுவது செவ்வியல் அடக்கமல்ல; நவீன மனத்தில் மீறல். பாலி திருமணமானவள். பதினைந்து வயது வித்தியாசமுள்ள கணவனுடன் வாழ விதிக்கப்பட்டவள். அவளுக்கும் ரங்குவுக்கும் மறைமுகமான உறவு இருக்கிறது. ஒரு கட்டம்வரை அது தொடரவும் செய்கிறது. ஆனால், அந்த உறவு சிக்கலாகும் கட்டத்தைத்தான் கதை விவரிக்கிறது. அவளுக்காகவே அலுவலக நிமித்தம் என்று சென்னைக்கு வரும் ரங்கு, பழைய உறவின் நினைப்புடன் அவளையே வளைய வருகிறான். ஆனால், நோயாளிக் கணவனின் மீதான அக்கறை அவனிடம் இசைய அவளுக்குத் தடையாகிறது. கணவன்மேலான பச்சாதாபமா, காதலன்மீதான வேட்கையா என்ற கேள்வியின் முன்னால் திகைக்கிற பாலி, கணவன் பக்கமே தன்னை சார்த்திக்கொள்கிறாள். அவளை மூர்க்கமாக நெருங்கும் ரங்குவைப் புறக்கணிக்கிறாள். ‘இனிமே மெட்ராஸ் வரவேண்டாம்’ என்று விலகுகிறாள். கதையின் தொடக்கத்தில் ரங்குவைப் பார்த்துப் பூரித்துப்போய் பால்காரனிடம் இரண்டு ஆழாக்குப் பால் உபரியாக வாங்கும் பாலி, அவன் போன பின்பு வழக்கமான இரண்டு ஆழாக்கு மட்டும் போதும் என்கிறாள். இந்த இடத்தில் கதை முற்றுப் பெற்றிருக்குமானால் தி.ஜானகிராமனை தேர்ந்த கதையாளர் என்று வரையறுத்துவிடலாம். இறுதி வரியே அவரை நவீனமானவராக எடுத்துக் காட்டுகிறது. ‘பாலி வாங்கிக் கொண்ட பாலில் ரங்கு சுற்றிச் சுற்றி வருவதுபோல் இருந்தது’ என்ற வரி கதையை இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. ஆகி வந்த சூழலுக்கு இணக்கமான முடிவையல்ல; பெண்ணின் கலையாத வேட்கை சார்ந்த மீறலைக் காட்டுகிறது.

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

மேற்குறிப்பிட்ட இரு கதைகளும் செவ்வியல் மதிப்பீட்டை ஏற்றும் விசாரித்தும் எழுதப்பட்டவை. இதே மையக் கருவைக் கொண்டு எழுதப்பட்ட ‘மன நாக்கு' தி.ஜானகிராமனை சமகாலத்தவராக்குகிறது. கதையின் மையப்பாத்திரமான ஆண், எட்டு வருடங்களாக மாலியின் தழுவலுக்கு வேட்கையுடன் காத்திருக்கிறான். அவள் உருவாக்கும் நெருக்கமான வாய்ப்புகளைத் தனது தயக்கத்தால் நழுவவிட்டுக்கொண்டே இருக்கிறான். வெறும் அரட்டையிலும் நேர ஒழுங்கைக் கடைப்பிடிக்காமலும் இழந்த நல்வாய்ப்பு, மாலியின் கணவர் இல்லாத தருணத்தில் கிடைக்கிறது. தன்னுடைய நேர விரயத்தால் அதை இழக்கிறான். உடலும் உயிரும் ஏங்கிக் கிடந்த அந்தத் தருணம் கை நழுவிப் போகிறது. தாமதமாக வரும் அவனை மாலியால் கற்பனை செய்து வைத்திருந்த குதூகலத்துடன் ஏற்க முடிவதில்லை. வழக்கம்போல் வியர்த்தமாகிறது அந்தச் சந்திப்பு. மாலியின் நிராகரிப்புக் காரணம் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத அவனுடைய இயலாமை மட்டுமல்ல... அந்த நேரத்தை உருவாக்கிய தன்மீது அவன் காட்டத் தவறிய பரஸ்பர மரியாதையை முன்னிருத்தியது. தான் வெளிப்படையாகக் காட்டும் மன உணர்வை விளங்கிக்கொள்ளாத பலவீனத்தைச் சுட்டுவது. பெண்ணைப் புரிந்துகொள்ள முடியாத ஆண் முனைப்பின் வெறுமையைக் குத்திக் காட்டுவது.

இங்கே எடுத்துக் காட்டிய மூன்று கதைகளை சற்று விளையாட்டாகவே ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். ஆண் - பெண் விழைவைக் கதைப் பொருளாக்கி எழுத தி.ஜானகிராமனுக்கு உந்துதலாக இருந்தவர் கு.ப.ராஜகோபாலன். இந்தக் கதைகளை ஒருவேளை கு,ப.ரா எழுத முடிந்திருக்குமா? ‘பசி ஆறிற்று', ‘தூரப் பிரயாணம்' ஆகிய கதைகளை நிச்சயம் அவரால் எழுதியிருக்க முடியும். ஆனால் ‘மன நாக்கு' கு.ப.ரா-வின் புனைவுலகத்தில் நிகழ்ந்திருக்கவே முடியாது. ஏனெனில், முந்தையவை செவ்வியல் மதிப்பீட்டின் மீது அமைந்தவை. அதனுடன் ஒட்டியோ விலகியோ அவரால் உறவுகொள்ள இயலும். ஆனால், மன நாக்கு முற்றிலும் நவீனமான மனநிலையைச் சார்ந்தது. அவரால் ஊகிக்கக்கூட முடிந்திராதது. அது அவருக்குப் பிந்தைய காலத்தின் துடிப்பைக் கொண்டது. காலத்துடனான இந்தப் பொருத்தப்பாடே தி.ஜானகிராமனை இன்றும் வாசிக்க வலியுறுத்துகிறது.

ஆணும் பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வேட்கையையும் விழைவையும் காமத்தையும் சித்திரித்தவர் தி.ஜானகிராமன். அதுபோன்ற கதைகளே அவரைத் தனித்துவமானவராகவும் விமர்சனத்துக்குரியவராகவும் அடையாளப்படுத்தின. அவை நாசூக்கான காதலையோ விலக்கப்பட்ட காமத்தையோ மையப்படுத்தியவை அல்ல. மாறாக, இந்த விழைவில் காலந்தோறும் ஏற்படும் சிக்கல்களை முதன்மையாகக் கருதியவை. பரஸ்பர ஈர்ப்பின் புலனாகாத மர்மங்களைத் துலக்குபவை. குறிப்பாக, பெண்ணின் அகவுலகை அறிய முனைபவை. விருப்பத்துக்கும் விருப்பத்துக்கு மாறாகவும் விரும்ப முடியாமலும் வாய்க்கிற உறவுக்கு அப்பால், உண்மையான அன்புக்கு ஏங்கும் தவிப்புகளைப் பகிரங்கமாக்குபவை. இந்தக் கதைகளில் வரும் பெண்களில் பெரும்பான்மையினரும் வெளிப்படையானவர்களாகவே இருக்கிறார்கள். அந்த வெளிப்படைத்தன்மை அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது. சமூகம், மரபு, குடும்பம் ஆகிய அமைப்புகள் ஒடுக்கி வைக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறவர்களாகவும் தங்களது உடலும் மனமும் தங்கள் உடைமை என்று முனகல் தொனியிலாவது பிரகடனம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

தி.ஜா-100: காலத்தைப் படைத்த ஆளுமை தி.ஜானகிராமன்

தி.ஜானகிராமன் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் இவை சமுதாயத்திலும் ஓரளவுக்கு இலக்கியத்திலும் விலக்கப்பட்டவை; ஏற்கக் கூடாதவை. ஆனால், காலங்களாக மனித மனம் விரும்புவது கட்டுப்பாடுகளை அல்ல; விடுதலையை. அந்த விடுதலையுணர்வைக் காலத்துக்கு முன்பே எழுதியவர் தி.ஜானகிராமன். அவர் சித்திரித்த பெண்பாத்திரங்களின் செயல்களை இன்று கொஞ்சமேனும் நடைமுறையில் காணலாம். இந்தச் செயல்பாடுகளை ‘நவீனம்' என்று குறிப்பிட்டால், தி.ஜானகிராமனுக்கு நிகரானவர்கள் நவீனரிலும் இல்லை. இலக்கியவாதியின் தனித்திறன் இது என்பதைவிடக் காலத்துடன் அவன் கொள்ளும் பிணைப்பின் விளைவு என்று சொல்வதே பொருத்தம்.

எந்தக் கலைஞனும் அவன் வாழும் காலத்துடன் உறவுகொண்டவனாக இருக்க வேண்டும். இறந்த காலத்தின் குரலாக ஒலிப்பது பொருத்தமற்றது மட்டுமல்ல; பயனற்றதும்கூட. இந்த அளவுகோலை தி.ஜானகிராமன் கதைகளுக்குப் பொருத்திப் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் எழலாம். அவர் கதைகள் எழுதப்பட்ட காலம் நாற்பதாண்டுகளுக்கு முற்பட்டது. கதைகளில் அவர் சித்திரிக்கும் காலம் அதற்கும் முற்பட்டது. அன்று அவர் பார்த்த கிராமங்களும் நகரங்களும் இன்றில்லை. அன்றைய சமூக வாழ்க்கை முறையும் இன்றில்லை. அன்றைய மனிதர்களும் அவர்கள் உருவாக்கிய மதிப்பீடுகளும் இப்போது காலாவதியானவை. இந்த நிலையில் அவரது கதைகளுக்கு இன்று கிடைக்கும் இலக்கிய முக்கியத்துவம் என்ன?

இதற்கான பதிலை இவ்வாறு முன்வைக்கலாம். எந்தக் கலைஞனும் தன் படைப்பில் சம காலத்தை அப்படியே சித்திரிப்பதில்லை. இறந்த காலத்தின் மதிப்பீடுகளும் கருத்துகளும் நிகழ்காலத்தில் ஏற்படுத்தும் முரண்களை விளங்கிக்கொள்ளும் வகையிலேயே எதிர்வினை யாற்றுகிறான். பழைய மதிப்பீடுகளில் என்றென்றும் மனித மனத்தை விரிவடையச் செய்யும் விழுமியங்களை ஏற்கிறான். ஒடுங்கச் செய்யும் கருத்துகளை விமர்சிக்கிறான்; மீறுகிறான். அவற்றை மறுத்துப் புதிய பார்வையை உருவாக்குகிறான். காலத்தின் கைகளிலிருந்து அவர் தேர்வு செய்வது அன்றாட மினுமினுப்பை அல்ல; நிரந்தரமான வெளிச்சத்தையே. அன்றாடச் சம்பவங்களின் சித்திரிப்பிலும் இந்தப் புலப்படாத ஒளியையே அவன் முதன்மையாக்குகிறான். அதைப் புரிந்துகொள்ளும் பயனாளிக்கு (ரசிகனுக்கு, வாசகனுக்கு) அவன் போற்றத் தகுந்தவனாகிறான். அந்தப் படைப்பாளி நிகழ்காலத்துக்கும் உரியவனாகிறான்.

‘இசைப் பயிற்சி' என்ற தி.ஜானகிராமனின் கதை எழுதப்பட்டு அரை நூற்றாண்டுக்கும் மேலாகிறது. எனினும் அது இன்றும் பொருத்தப்பாடு கொண்ட கதையாகவே மிளிர்கிறது. இசைக்கலைஞரான மல்லி, தேர்ந்தெடுத்த பிள்ளைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறார். அவர்களுக்கு அது செவியைத் தாண்டி உணர்வில் ஏறுவதில்லை. ஆனால், அதைக் கேட்டுக் கேட்டு விற்பன்னனாகிறான் குப்பாண்டி. அவனுடைய ஆர்வத்தை மெச்சி அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறார். அவர் சார்ந்த சமூகம் அதை முதலில் கேலி பேசுகிறது. பின்னர் எதிர்க்கிறது. மரபான விழுமியத்தையோ நடைமுறைப் பழக்கதையோ பொருட்படுத்தாமல் மனித மனத்தின் படைப்புத்திறனை மட்டுமே கவனத்தில் வைத்துக்கொண்ட மல்லி, அந்த எதிர்ப்பையும் விலக்கையும் மீறுகிறார். சேரிப் பிள்ளையான குப்பாண்டிக்கு மறுநாள் முதல், வீட்டுக் கூடத்தில் பாடம் கற்்றுத்தருவதாக அறைகூவல் விடுக்கிறார். இந்த மரபு மீறலைச் சித்திரிப்பதில் உருவாகும் வெளிச்சம்தான் தி.ஜானகிராமனைக் கலைஞராக்குகிறது. சமகால மதிப்பீட்டைவிட மானுட விரிவை வரித்துக்கொள்ளும் உணர்வுதான் இன்றும் பொருத்தப்பாட்டுக்கு உரியதாக்குகிறது.

காலத்தை ஒட்டிய உண்மையைத் தேடும் படைப்பாளி, காலத்தை மீறிய ஒன்றையே முன்வைக்கிறான். சமயத்தில் காலத்தை மீறிய ஒன்றையும் இயல்பாகச் சுட்டிக்காட்டவும் செய்கிறான். இதற்கான எடுத்துக்காட்டையும் தி.ஜானகிராமனிடம் பார்க்கலாம். விநோதமான தலைப்பில் (ஸி டீ என் 5 ஆர்*க=ரபெ) அவர் எழுதிய கதை. அன்று ஹாஸ்யக் கதை என்று வெளியிடப்பட்டாலும் இன்று, சமகால அபத்தத்தைக் கூர்மையாக விமர்சிக்கும் படைப்பாகத் தென்படுகிறது.

கணேச சந்திர விஞ்ஞான சாகரன் என்ற அறிவியலாளர் அறியப்படுவது டாக்டர். கோஸ்வாமி என்ற பெயரில். அந்தப் பெயர் ஒரு புராதன மடத்தின் பீடாதிபதியால் அருளப்பட்டது. அவரது ஆய்வு அபாரமானது. பசுஞ்சாணத்திலிருந்து ரயிலை உருவாக்குவது. அந்தக் கோமய ரயில் இயற்கையானது. வேதத்தின் அடிப்படையில் கட்டப்படுவது. பசுவைக் கொண்டாடும் நாட்டில் அதுதான் உசிதமானது. அதற்காக அரசு கோடிக் கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுக்கிறது. திட்டத்தைக் கேலி செய்பவர்கள் தேச பக்தியற்றவர்கள் என்று அரசால் குற்றம் சாட்டப்படுகிறார்கள். திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லி முடக்கப்படுகிறது. ஆனால், திட்டத்தின் பெயரால் கட்டடங்களெழுகின்றன. குமாஸ்தாக்களும் அதிகாரிகளும் உருவாகிறார்கள். அவர்கள் செய்யாத வேலைக்கான சம்பள உயர்வுக்காகப் பணி நிறுத்தம் செய்கிறார்கள். பொய்யான கற்பனையை அங்கீகரிக்காதவர்கள் தேசத் துரோகிகளாக மாற்றப்படுகிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை இது. இன்று எழுத்துப் பிசகாமல் பொருந்திப் போகிறது. தி.ஜானகிராமன் என்ற எழுத்துக் கலைஞரின் தீர்க்க தரிசனம் என்று இதைச் சொன்னால் தவறா?

தி.ஜானகிராமனை நவீனச் செவ்வியளாளர் என்று அடையாளம் காணும் விரிவான முயற்சியின் சிறு முன்னெடுப்பு என்று இந்தக் கட்டுரையைக் குறிப்பிட விரும்புகிறேன். தமது இலக்கிய வாழ்நாளில் அவர் எழுதிய கதைகளின் எண்ணிக்கை 151. இவற்றில் சரிபாதிக் கதைகள் இன்றும் வாசிப்பில் பொருள் தருபவை. புதுமை உணர்வு குன்றாதவை. வெவ்வேறு வகைமையிலானவை. அவற்றை நவீனச் செவ்வியல் ஆக்கங்கள் என்று சிறப்பிப்பது தகும் என்று காலம் இன்று நிரூபித்திருக்கிறது.

பொதுவாக, தமது கதைகளைப் பற்றி அதிகம் பேச விரும்பாதவர்; பேசாதவர் தி.ஜானகிராமன். ஆனால், அவற்றைப் பற்றிப் பொய்யும் சொல்லியிருக்கிறார் என்பது வியப்புக்குரியது. தமது மூன்று சிறுகதைத் தொகுதிகளின் முன்னுரைகளிலும் அதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இவையெல்லாம் ‘இலக்கண சுத்தமான சிறுகதைகள் என்று சொல்லவில்லை நான். சிறுகதைகள் என்றுகூடச் சொல்லவில்லை’ (அக்பர் சாஸ்திரி முன்னுரை). ‘முன்பு ஒரு தொகுதியில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். இவை சிறுகதைகள் என்று சொல்ல நான் துணியவில்லை’. (யாதும் ஊரே). ‘இவை இலக்கண சுத்தமான சிறுகதைகள் அல்ல’ (பிடி கருணை).

தி.ஜானகிராமன் இன்றிருந்தால் வாசக உரிமையுடன் கேட்கலாம். ‘ஏன் இப்படிப் பொய் சொன்னீர்கள் தி.ஜா, உண்மையான இலக்கியவாதியின் பொய், உண்மையைவிட உண்மையானது என்பதாலா என்று!