Published:Updated:

ஆனந்தகுமாரர்களின் மாஸ்டர்

குஞ்ஞுண்ணி மாஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
குஞ்ஞுண்ணி மாஸ்டர்

இலக்கியம்

ஆனந்தகுமாரர்களின் மாஸ்டர்

இலக்கியம்

Published:Updated:
குஞ்ஞுண்ணி மாஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
குஞ்ஞுண்ணி மாஸ்டர்

காலை எழுந்து வானத்தைப் பார்த்தவுடன் `உள்ளே முழுக்க ஆவேசம் / வெளியே முழுக்க ஆகாசம்’ என்னும் கவிதை நினைவுக்கு வந்தது. மலையாள மூத்தகவி குஞ்ஞுண்ணி மாஸ்டர் எழுதியது. அகம் எந்த அளவுக்கு ஆவேசத்தில் மூழ்குகிறதோ அப்போதெல்லாம் ஆகாசத்திற்கும் அதே வண்ணங்கள் வந்துவிடுகின்றன. நம்மை நாமே இயற்கையில் பார்த்துக்கொள்ளும் தருணங்களில் ஒரு சொட்டு மழையோ, ஒரு நல்ல தேநீரோ கிடைத்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இப்போதைய என் மனநிலை இருக்கிறது.

பெரும்பாலும் சந்தோஷமாகவே உணர்கிறேன். எல்லாமும் இனியனவாகத் தோன்றுகின்றன. பக்குவமும் வயதும் கூடக்கூட, நிதானமும் நிம்மதியுமாக நாள்கள் கழிகின்றன. எல்லாச் சுமைகளையும் இறக்கி, மூட்டையாகக் கட்டி என் முன்னால் தொங்க விட்டிருக்கிறேன். அம்மூட்டையை ஒரு குத்துச்சண்டை வீரனைப்போல ஒருவித லயத்துடன் குத்திக்குத்திப் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். `என்னுள்ளே இருந்தபடி நீயென்னென்ன பாடுபடுத்தினாய்’ என்னும் ஆவேசத்தில் ஒன்றிரண்டு குத்து, பலமாக விழுந்துவிடுகிறது.

2006-ல் காலமான குஞ்ஞுண்ணி மாஸ்டரின் கவிதைகள், தொண்ணூறுகளின் பிற்பகுதியில்தான் எனக்கு அறிமுகம். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கவிதைகளை மாத, வார இதழ்களில் வாசித்திருக்கிறேன் என்றாலும், முழுவதுமாக வாசித்ததில்லை. என் முதல் கவிதை நூல் வெளிவந்த தருணத்தில் அதுகுறித்து எழுதிய பூங்காற்று தனசேகர், என் கவிதைகளும் குஞ்ஞுண்ணி மாஸ்டரின் சாயலை ஒத்திருப்பதாக ஒரு வரி எழுதியிருந்தார். அவரிடமே,`குஞ்ஞண்ணி கவிதைகள் கிடைக்குமா’ என்றேன். `தற்போது கைவசமில்லை. யாரிடமாவது இருக்கலாம், நானும் தேடுகிறேன்’ என்றார்.

ஆனந்தகுமாரர்களின் மாஸ்டர்

எதைத் தீவிரமாகத் தேடத் தொடங்குகிறோமோ அது, என்றேனும் ஒருநாள் கிடைக்காமல் போகாதென என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். என் மூன்றாவது கவிதைத் தொகுப்பு வரும்போதுதான் ஒரு பழைய புத்தகக் கடையில் ` குஞ்ஞுண்ணி கவிதைகள்’ நூல் எதேச்சையாகக் கிடைத்தது. பா.ஆனந்தகுமார் மொழிபெயர்த்த நூல் அது.

இடப்பக்கம் மலையாளக் கவிதையை அச்சிட்டு, வலப்பக்கத்தில் தமிழில் பெயர்த்துத் தந்திருக்கிறார். அப்பழைய நூலை எனக்குமுன்னே வாசித்தவர், பெரும்பாலான கவிதைகளில் அடிக்கோடிட்டிருந்தார். மகாரசிகரின் குறியைக் கோடுகள் காட்டிற்று. ஆனாலும், அவ்வளவு பிடித்த, அத்தனை நல்ல புத்தகத்தை அவர் ஏன் தவறவிட்டாரெனத் தெரியவில்லை.

அதிக பிரியமும் ஒருகட்டத்தில் பிடிக்காமல்போகுமோ என்னவோ? தெரியவும் தெளியவும் தொடங்கிய பின்னால் சுவாரஸ்யங்கள் அற்றுவிடுகின்றன. ஆனால், உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ஒரு பொருளுடனோ உயிருடனோ உறவு கொண்டோமென்றால் சலிக்கவே சலிக்காது என்பதுதான் என் அனுபவம். ஈடுபாட்டுடன் ஒருவர்மீது கொள்ளும் காதல், நியாய அநியாயங்களைப் பார்ப்பதில்லை. பிடித்தம் பிரதானமாகிவிட்டால், சந்தர்ப்பவாதியும் சஹிருதயனாகத் தெரிவதுண்டு.

என் கைக்கு வந்த குஞ்ஞுண்ணி கவிதைகள், ஏறக்குறைய 25 ஆண்டுகளாக வாசிக்கப்பட்டு வருகிறது. துக்கமோ, சந்தோஷமோ எதுவென்றாலும் அந்நூலை ஒருமுறை வாசித்துவிடுவேன். நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அதே மனநிலையில் அக்கவிதைகள் என்னுடன் பேசும்.

எதுகுறித்தும் எள்ளல் தொனிக்க எடுத்தெறியும் குஞ்ஞுண்ணி, நவீனக் கவிதைகளின் தொடக்கக்கால வகைமாதிரியை சிருஷ்டித்தவர். `நான் இப்படி இல்லையென்றால் / இந்த பிரமாண்டமும் இப்படியில்லாது போகும் / ஐயோ நானே’ என்றொரு கவிதை. அக்கவிதை பல அடுக்குகளைக் கொண்டது. உருவாக்கப்பட்ட பிரமாண்டங்களுக்கு முன்னால் ஒரு எளியவனின் கேள்வியாக மட்டுமே அது இல்லை. அக்கவிதையின் பின்னால் இயங்கும் தத்துவத்தில் புத்தர் இருக்கிறார்.

ஒருகதை, ஞானமடைந்த புத்தர் சொர்க்க வாசலை வந்து சேருகிறார். ஆகப்பெரும் பிரமாண்டத்தை அடையும் தருணம் அது. ஆனாலும், வாசலுக்குள் நுழையாமல் வந்த வழியையே பார்த்துக்கொண்டிருக்கிறார். `இதற்காகத்தானே இத்தனை ஆண்டுகளாக யாத்திரையும் பிரார்த்தனையும் மேற்கொண்டீர்கள், அப்படியிருக்கையில் உள்ளே வருவதில் என்ன தயக்கம்’ என வாயிற்காப்பாளன் கேட்கிறான். `எல்லோரும் தமக்காக பிரார்த்தனையும் யாத்திரையும் மேற்கொண்டனர். நானோ, எனக்குப் பின்னாலும் பலர் இந்த இடத்தை அடைவதற்காக மேற்கொண்டேன்’ என்கிறார். சொர்க்கத்தைவிடவும் மிகப்பெரிய பிரமாண்டமாகத் தெரியும் புத்தரின் சொற்களில், நானென்னும் அகந்தை அழிகிறது. மற்றவர்களின்மீதான அக்கறையும் அன்பும் மிகுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனந்தகுமாரர்களின் மாஸ்டர்

குஞ்ஞுண்ணியின் கவிதைகள், கொஞ்சம் பழமொழியும் விடுகதையும் கலந்தாற்போன்ற தன்மையை ஏற்படுத்தினாலும், வலுவான சிந்தனைத் தெறிப்புகள் அவற்றிலுண்டு. பொதுச்சமூகத்தின் மனநிலையைக் கேள்விக்குட்படுத்தி, சின்னப் புன்முறுவலையேனும் நம்மிடமிருந்து வரவழைத்துவிடுவார். வள்ளத்தோள், சங்ஙம்புழ ஆகிய இருபெரும் கவி ஆளுமைகளின் சிந்தனைப்பள்ளியைச் சேராதவை அவர் கவிதைகள்.

`குஞ்ஞுண்ணியின் குட்டிக்குட்டிக் கவிதைகள்’ எனும் தலைப்பில் பதி பத்மநாபாவும் சில கவிதைகளை மொழி பெயர்த்தளித்திருக்கிறார். `கேரளத்தில் மார்க்ஸ் இறக்கமாட்டார் / மார்க்சிசம் பிறக்கவுமாட்டாது’ என்னும் கவிதையைப் படித்துவிட்டு, அப்போது என்னைச் சந்தித்துவந்த கம்யூனிஸ்ட் தோழர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். விமர்சனங்களை ஏற்கத் தயங்காத மார்க்சியர்கள், அக்கவிதைக்குப் பதிலாக `காந்திக்கு காந்தியே சீடன் / காந்தி சீடர்க்கு உலகத்தில் எல்லோரும் காந்தி சீடராகணும் / தன்னைத்தவிர எல்லோரும் காந்தியாகணும்’ என்னும் குஞ்ஞுண்ணியின் மற்றொரு கவிதையைச் சொல்வர்.

பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றபிறகு புரட்சியே சாத்தியமில்லை எனச் சொல்லவருவதே முதல் கவிதை. மார்க்சியத்திற்கு மாற்றாகக் காந்தியத்தை முன்வைத்தால் அதிலேயும் சிக்கலிருக்கிறது என்பதாக இன்னொரு கவிதை. இப்படி ஒருவரே இரண்டையும் விமர்சனத்துடன் அணுகியிருக்கிறாரே என்பதுதான் அப்போதும் எனக்கிருந்த ஆச்சர்யம். `புரட்சி எல்லோரும் உற்சாகத்துடன் / நடத்தவேண்டிய விழாவன்றோ’ என்றும் குஞ்ஞுண்ணியே எழுதியிருக்கிறார். ஆதரவு, எதிர்ப்பு இரண்டையும் ஒருவர் ஒரேமாதிரி அணுக சித்தப்பிராப்தம் தேவை. குஞ்ஞுண்ணி பலநேரங்களில் அப்படித்தான் படுகிறார்.

பேராசிரியர் நாச்சிமுத்து `குஞ்ஞுண்ணியின் கவிதைகள் நாராயண குருவின் சுப்ரமணிய கீர்த்தனத்தையும் பட்டினத்தாரின் பாடல்களையும் உள்ளடக்கியவை’ என்றிருக்கிறார். `இத்தினியூண்டு நக்கக் கிடைத்தால் போதும் / அப்பொழுதே போய்விடும் இந்தியனின் புரட்சி’ என்னும் கவிதையும் அவருடையது. ஒன்றுடனான ஒட்டுதலும் உறவுமில்லாது எதையாவது நிறுவமுடியுமா என்னும் கேள்விக்கும் அவர் பதில் வைத்திருக்கிறார். `இருட்டிற்கு ஒரே நிறம் / வெளிச்சத்திற்குப் பலவே’ என்று விவாதங்களைக் கடந்துவிடும் விட்டேத்தியான சுபாவமுடையனவே அவர் கவிதைகள். சமயத்தில், இது ஏதோ ஒரு விடலைத்தனத்தின் வெளிப்பாடு என்றுகூட நினைத்திருக்கிறேன். ஆவேசமாகச் சிந்திக்க முடியாதவர், போகிறபோக்கில் தட்டிவிடுபவை எனவும் எண்ணாமலில்லை.

`எல்லாவற்றையும் சந்தேகி' என்பதிலுள்ள கருத்தியல் நுட்பத்தை வந்தடையாத வயதில் குஞ்ஞுண்ணியை விளங்கிக்கொள்ள சிரமப்பட்டிருக்கிறேன். காலப்போக்கில் என்னை அவர், ஏறிட்டும் நேரிட்டும் பார்க்கவைத்திருக்கிறார். எதையெடுத்தாலும் கேள்வியெழுப்புவதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். கேள்வியைத் தவிர்க்கும் மனம் அவரிடம் இல்லவே இல்லை.

ஒரு ஜென் குரு, பயிற்சி முடிந்த தன் சீடனுக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசளிக்கிறார். அது, வழிவழியாக வரக்கூடிய சம்பிரதாயம். சீடனுக்கோ அப்பரிசை ஏற்பதில் தயக்கமேற்படுகிறது. `எதற்காக இந்தப் புத்தகத்தை எனக்குத் தருகிறீர்கள்’ என்கிறான். அவரோ, `இப்புத்தகம் எனக்கு என் குருவினால் வழங்கப்பட்டது. தற்போது நீயுமே என் நிலையை அடைந்துவிட்டதால் உன்னிடம் ஒப்படைப்பதே சரி’ என்கிறார். எவ்வளவோ மறுத்தும் அப்புத்தகத்தை அவர் திணிக்கிறார். வேறு வழியில்லாமல் புத்தகத்தைப் பெற்ற சீடன், அந்தக் கணமே அதை நெருப்பில்போட்டு எரிக்கிறான். கவலையுற்ற குரு, `என்ன செய்கிறாய்’ என்கிறார். அவன் `உங்களிடம் கற்றதை’ என்று சொல்லிப் பேச்சை நிறுத்திக்கொள்கிறான்.

இந்தக் கதையின் வழியே பெறக்கூடிய உண்மையின் இன்னொருபகுதிதான் குஞ்ஞுண்ணியின் கவிதாவிலாசம். `கற்பித்த பாடங்களை இதயத்தில் ஏந்திய பிறகு புத்தகங்கள் எதற்கு' என்பதும், `புதிதாகக் கற்பிக்க எண்ணுபவன் புத்தகங்களுடன் நின்றுவிடுவதில்லை' என்பதும் கதையின் உள்ளீடு.

புத்தகத்திற்கு மேலேயும் செல்ல வழியிருக்கும்போது மேற்கோள்களுடனும் வலியுறுத்தப்பட்ட கருத்துகளுடனும் நின்று விடுவதை குஞ்ஞுண்ணி தவிர்த்திருக்கிறார். ஒரு குரு தன் சீடனுக்குப் பதில்களைக் கற்றுத்தருவதைக் காட்டிலும் கேள்விகேட்கச் சொல்லித்தருவதே முக்கியம்.

ஆனந்தகுமாரர்களின் மாஸ்டர்

குஞ்ஞுண்ணியின் கேள்விகள், மறுகேள்விகளைத் தோற்றுவிப்பவை. `நாக்கில் எலும்பில்லாதவர்களுக்கு / முதுகெலும்பும் முடங்கிவிடும்’ என்னும் கவிதையை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். அவருடைய முதல் கவிதைநூல் `நான்சென்ஸ் கவிதைகள்’ எனும் தலைப்பில் வந்திருக்கிறது. அறிவிற்கும் ஞானத்திற்கும் இடையேயான கேள்வியை ஒரு கவிஞனால் மட்டுமே கேட்கமுடியும். குழந்தைத்தனமானவை என்று சமூகம் விலக்கியும் ஒதுக்கியும்விடக்கூடிய கேள்விகளை அவன் கேட்கும்போதுதான் ஞானத்தின் சாளரங்கள் திறக்கின்றன. கருத்து, கோட்பாடு என வரையறுத்துக் குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுற்றிச் சுழலாமல் ஒரு சுதந்திரவெளியில் சஞ்சரிக்கும் சக்தியை அவர் கவிதைகள் பெற்றிருக்கின்றன.

முத்தொள்ளாயிரத்தில் ஒரு பாடல்வரும். `அயிற்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்’ என்னும் ஆரம்பவரியை உடைய அப்பாடல் போர் யானையின் வீரத்தை மன்னனுக்குப் பொருத்திச் சொல்வது. அப்பாடலில் அயில்கதவம், எயில்கதவம் என இரு சொற்கள் வந்திருக்கும். அயிலென்றால் ஈட்டி. எயிலெனில் அடுத்துள்ள மதில்சுவர். எதிரிப் படையினர் எளிதாகத் தாக்கமுடியாத காப்பரணாக முதலில் அகழி அமைக்கப்பட்டிருக்கும். அகழியைத் தாண்டிக் கோட்டையை நெருங்கினால் சல்லிசில் திறக்கமுடியாத அயில், எயில் கதவுகள் வரும்.

எதிரிகள் மூர்க்கமாகத் திறக்க யானையைப் பயன்படுத்தும்போது அயில்கதவுகள், அதாவது ஈட்டிகளால் நிரம்பிய கதவின் முன்பகுதி யானையின் முகத்தில் குத்திக் கிழிக்கும். `யானையாலும் திறக்கமுடியாத கதவைத் திறந்து, எதிரியின் அரண்மனையை வெல்லும் ஆற்றல் எம் மன்னனுக்கு உண்டு' என்பதாகப் பாடல் செல்லும். எனக்கு குஞ்ஞுண்ணியின் கவிதைகள், அயில் எயில் கதவுகளைத் திறக்கும் யானையாகவே தோன்றும். தத்துவங்களையும் கோட்பாடுகளையும் முட்டித் திறக்கும் பெரும்பல யானை அது.

இயல்பில் சிந்தனைத்தளத்தில் இரண்டுவகையான பார்வைகளே உள்ளன. ஒன்று, மேலிருந்து கீழ்நோக்குவது. மற்றது, கீழிருந்து மேல்நோக்குவது. இதுவரை உலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து இசங்களையும் இந்த இரண்டிற்குள் அடக்கிவிடலாம். குஞ்ஞுண்ணி, இந்த இரண்டிற்கும் இடையிலான சம நோக்குப் பார்வையைத் தம் கவிதைகள்மூலம் செலுத்தியிருக்கிறார். `அகத்தில் ஒரு கடல் / புறத்தில் ஒரு கடல் / அவைக்கிடையில் என் சரீரப்பெருங்கரை’ என்னும் கவிதையில் அதை விளங்கிக்கொள்ளலாம்.

ஆனந்தகுமாரர்களின் மாஸ்டர்

துடுக்குத்தனமும் குறும்புகளுமே அவர் கவிதைகளின் அடிநாதம். அதேசமயம், அக்கவிதைகள் துலக்கும் தத்துவ தரிசனங்கள் மிக வலுவானவை. என்னை ரொம்பவும் நெருக்கமாக உணர வைத்த இன்னொரு கவிதையுண்டு. அது, மனிதகுலத்தின் போலித் தனங்களைப் பற்றியது. அன்பு, நட்பு, காதல், காமம், ஆசை, அறம் என எதற்கு வேண்டுமானாலும் அதைப் பொருத்திப் பார்த்துத் தெளியலாம். மனிதனின் அடிப்படைச் சிக்கல்களில் ஒன்று, போலித்தனங்களுக்கு ஆட்படுவது. அத்துடன் அது, போலித்தனமென்று தெரியாமலேயே ஆட்படுவதும்கூட.

குஞ்ஞுண்ணி எது போலித்தனம் என்பதையும், தோல்வியென்பதையும் `கபட லோகத்தில் என்னுடைய போலித்தனம் / அனைவரும் காண்பதுதான், என் தோல்வி’ என்னும் மூன்றே வரியில் சொல்லியிருக்கிறார். யோசித்துப்பார்த்தால் போலித்தனங்களை நோக்கியே நம்முடைய அன்றாட வாழ்க்கை நகர்கிறது. சொல்பவர், சொல்லப்படுபவர் இருவருக்குமே போலியான பாராட்டுரைகளில் சந்தோஷம் ஏற்படுகிறது. அதிநுட்பமான உண்மையின் கண்கள் அவர்களுக்கு இறுதிவரை கிடைப்பதில்லை.

மரணக்கட்டிலில் படுத்திருந்த அம்பேத்கர் உடனிருந்த நானக்சந்த் ரட்டுவிடம் `நான் எல்லாவற்றிலும் உண்மையுடன்தானே நடந்துகொண்டிருக்கிறேன். தனி ஆளாக நின்று அவதூறுகளையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறேன். அப்படியிருந்தும் என் சகோதர மக்களில் ஒருசிலர் ஏன் சுயநலத்திற்காகவும் அதிகாரவெறிக்காகவும் என்னை விட்டு விலகினார்கள்’ எனக் கேட்டு விம்மியிருக்கிறார். போலித்தனங்களை நெருங்குகிறவர்கள், உண்மையிடமிருந்து விடைபெறுவது இயற்கையே என அவருக்குத் தெரியாமலில்லை. `ஆனாலும், ஒருநாள் என் மக்கள் என் போராட்டங்களைப் புரிந்து விடுதலையை முன்னெடுப்பார்கள்’ என்றிருக்கிறார்.

ஆனந்தகுமாரர்களின் மாஸ்டர்

விடையளிக்கமுடியாத கேள்விகளின் சதுராட்டத்தை நிகழ்த்துவதுதான் குஞ்ஞுண்ணியின் கவிதைமுயற்சியும். ஆன்மிகத் தேடலிலுள்ள அவருடைய வாழ்க்கைச் சிந்தனை, வேதாந்தத்தின் சாரத்தையும் அதற்கு எதிரான திசையையும் காட்டுகின்றது. கூடையைக் கொட்டிக் கவிழ்க்கிறேன் தேவையானவற்றை எடுத்துக்கொள் என்பதுபோலத்தான். `காலம் இல்லாததாகிறது / தேகம் இல்லாததாகிறது / கவிதையே நீ வரும்போது / நானும் இல்லாமல் போகிறேன்’ என்னும் கவிதையைப் பலமேடைகளில் சொல்லியிருக்கிறேன். ஒரு கவிஞனின் அல்லது எழுத்தாளனின் மிக அந்தரங்கமான உணர்வு அது. அம்பலத்தில் தன்னை நிறுவிக்கொள்ளமுடியாத துக்கத்தின் பரிதவிப்புகள் வெளியே தெரியாதவை.

எழுத்தைத் தொழிலாகவும் வாழ்வாகவும் கொண்டுவிட்ட எனக்கும் எப்போதாவது சோர்வும் அதிருப்தியும் ஏற்படுவதுண்டு. ஒருநல்ல பாடலை யாராவது நிராகரித்தாலோ அல்லது என்மீது ஏதேதோ காரணங்களால் துவேஷத்தைத் துப்பினாலோ உடனே, கவிஞன் என்கிற கவசத்தைக் கழற்றி எறிந்துவிடுவேன். நானும் இல்லாமல் போகிறேன் என்பதுமாதிரியான காரியம் அது. அதற்கும் குஞ்ஞுண்ணியே காரணம்.

அவரே `எழுதி ஈட்டுவது உத்தமம் / உழுது ஈட்டுவது அதி உத்தமம்’ என்று சொல்லிய பிறகு, என் எழுத்தை விமர்சிப்பவர்களைக் கடிந்துகொள்ளத் தோன்றுவதில்லை. உள்ளே ஆவேசமும் வெளியே ஆகாசமும் உள்ளவரை, குஞ்ஞுண்ணியும் என்னுடனே இருப்பார். அழுதுவடியும் பிரேம்குமாராயிருந்த என்னை, உற்சாகம் ததும்பும் ஆனந்தகுமாராக்கிய மாஸ்டருக்கு நன்றியும் வாழ்நாள் வணக்கங்களும்.