Published:Updated:

சென்னை மாநகராட்சி பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

சென்னை, பிப்.15,2011

2011-12ம் ஆண்டுக்கான மாநகராட்சி நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. பழைய வரி விகிதங்களும் உயர்த்தப்படவில்லை. ##~~##

2011-12ம் ஆண்டிற்கான சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் கூட்டம் இன்று மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

முதலில் மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை பற்றிய தொகுப்புரையை மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள்:

* சென்னை பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு தற்போது உள்ள சீருடையுடன், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அணிவதற்கு தலா ஒரு செட் புதிய வெள்ளை சீருடை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

* சென்னை பள்ளிகளின் உயர் நிலை மற்றும் மேல்நிலை மாணவிகளுக்கான சீருடையில்  தற்போதுள்ள துப்பட்டாவுக்கு பதிலாக ஓவர் கோட் வழங்கப்படும்.

* வடசென்னையில் இரண்டு சென்னை மேல்நிலை பள்ளிகளும், தென்சென்னையில் இரண்டு சென்னை மேல்நிலைப்பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் ஓட்டப்பந்தய வீரர்களை உருவாக்குவதற்கு ஓடுதளம் மற்றும் ஆடுகளம் அமைக்கப்படும்.

* கணினி ஆய்வகங்களில் மின் வசதி செய்யப்படும்.

* மாணவ, மாணவியருக்கு பொது அறிவை வளர்க்கும் வகையில் சிறந்த படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.

* புதிய பாடப்பிரிவுகள் கொண்ட சமுதாயக்கல்லூரிகள் தொடங்கப்படும்.

* பிரெஞ்ச் மொழி பாடங்கள் சென்னை பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்.

* உணவு பகுப்பாய்வு கூடங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

* வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு சுகாதார ஆலோசனைகள் வழங்கவும் தடுப்பூசி சிகிச்சை அளிக்கவும் சுகாதார மையம் அமைக்கப்படும்.

* அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் சுகாதார கல்வி அளிக்கும் டிஜிட்டல் போர்டுகள் அமைக்கப்படும்.

* தாட்கோ உதவியுடன் மையான உதவியாளர்கள் மற்றும் மலேரியா தொழிலாளர்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

* நடைபாதை வாசிகள் தங்குவதற்கு சென்னையில் ஒன்பது இடங்களில் இரவு காப்பகங்கள் அமைக்கப்படும்.

* அமரர் ஊர்திகள் மற்றும் அமரர் குளிர்சாதன பெட்டிகளை ஒப்பந்த அடிப்படையில் வெளியாரிடம் இருந்து வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

* வடசென்னையில் ஆதரவற் றோருக்கும், முதியோருக்கும் காப்பகம் அமைக்கப்படும்.

* வளர்ப்பு பிராணிகளை எரிப்பதற்கு மயிலாப்பூரிலும், மூலக்கொத்தளத்திலும் இரண்டு தகன மேடைகள் அமைக்கப்படும்.

* பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படும்.

* பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உதவும் வகையில் மாநகராட்சி மருத்துவமனைகளில் ரூ.500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் கொண்டு வரப்படும்.

* மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் துருப்பிடிக்காத ஆயிரம் குப்பை தொட்டிகள் அமைக்கப்படும்.

* மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* சென்னையில் 50 இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கப் படும்.

* தமிழ் பண்பாட்டை எடுத்துரைக்கும் சிலைகள் மேலும் பல இடங்களில் அமைக்கப்படும்.

* ரிப்பன் மாளிகை அருகே உள்ள விக்டோரியா பொதுக்கூடம் ரூ.3 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்படும். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் இங்கு பொதுமக்கள் பார்த்து ரசிக்க கலை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

* கொடுங்கையூர் கால்வாய் குறுக்கே முத்தமிழ் நகரையும், காவிரி நகரையும் இணைக்கும் வாகனப்பாலம் அமைக்கப்படும்.

* பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடப்பதற்கு உதவும் வகையில் லிஃப்ட் வசதியுடன் கூடிய 5 புதிய பாதசாரி மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

* செம்மொழி பூங்கா அமைந்துள்ள இடம், தி.நகர் ரெங்கநாதன் தெரு மற்றும் பேருந்து நிலையம், புதுக்கல்லூரி அருகே பீட்டர் சாலை, நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை ஆகிய 5 இடங்களில் இந்த புதிய பாதசாரி மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

* தண்டையார் பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் நவீன பூங்கா அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட மொத்தம் 126 திட்டங்களை மேயர் தனது தொகுப்புரையில் அறிவித்தார்.