Published:Updated:

"பார்த்த வேலைக்கு இவ்வளவுதான் பென்ஷனா?" குமுறும் கிராம வங்கிப் பணியாளர்கள்

"பார்த்த வேலைக்கு இவ்வளவுதான் பென்ஷனா?" குமுறும் கிராம வங்கிப் பணியாளர்கள்

"பார்த்த வேலைக்கு இவ்வளவுதான் பென்ஷனா?" குமுறும் கிராம வங்கிப் பணியாளர்கள்

"பார்த்த வேலைக்கு இவ்வளவுதான் பென்ஷனா?" குமுறும் கிராம வங்கிப் பணியாளர்கள்

"பார்த்த வேலைக்கு இவ்வளவுதான் பென்ஷனா?" குமுறும் கிராம வங்கிப் பணியாளர்கள்

Published:Updated:
"பார்த்த வேலைக்கு இவ்வளவுதான் பென்ஷனா?" குமுறும் கிராம வங்கிப் பணியாளர்கள்

நாடு முழுவதும் உள்ள 56 மண்டல கிராம வங்கிகளில் பணியாற்றும் ஒன்றரை இலட்சம் வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கியுள்ளது. மண்டல கிராம வங்கி ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் 323 பாண்டியன் கிராம வங்கிகளில் 1,500 பேரும், 260 பல்லவன் கிராம வங்கிகளில் 900 பேரும், புதுச்சேரி- காரைக்காலில் 40 பாரதியார் கிராம வங்கிகளில் 100 பேரும் என மொத்தம் 620 மண்டல கிராம வங்கிகளில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருகிறார்கள். இந்த வேலைநிறுத்தத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் கிராமப்புற வங்கிசேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

பொதுவான வணிக வங்கிகளுக்கும் இந்த வங்கிகளுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு. இந்த வங்கிகள் மூலமாக சிறு விவசாயிகள், கிராமப்புற மக்கள், அன்றாட வியாபாரம் செய்வோர் போன்ற பிரிவினருக்குக் கடன் வழங்குவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நல்லதிலும் ஒரு கெட்டது என்பதைப்போல, அவசரநிலைக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த வங்கிகள் மூலம் எளிய மக்கள் பிரிவினர் பயன்பெறமுடிவது, குறிப்பிடப்படவேண்டியதாகும். 

இந்த வங்கிகளில் 50% பங்கு மத்திய அரசிடமும் 15% பங்கு மாநில அரசிடமும் 35% பங்கு இந்த வங்கிகளுக்கு நிதியளிக்கும் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி போன்ற பெரிய பொதுத்துறை வங்கிகளிடமும் இருக்கும். முழுக்கமுழுக்க குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு நிதியுதவி செய்வதற்காகவும் அவர்களின் சேமிப்புவங்கியாகவும் இருக்கவேண்டிய கிராமவங்கிகள், சரியாக லாபம் ஈட்டுவதில்லை என்ற காரணத்தால், படிப்படியாக தனியார்மயம் ஆக்கப்படும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பாஜக அரசு வந்தவுடன் ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி இந்த கிராம வங்கிகளின் பங்குகளைத் தனியாருக்குக் கொடுக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. இதுவரை அது நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், எப்போதும் நடைமுறைக்கு வரும்நிலை உள்ளது. இந்த முடிவுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவரும் ஊழியர்  மற்றும் அதிகாரிகள், இப்போது மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். 
இது குறித்து அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜா. மாதவராஜிடம் பேசினோம். 

” அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் கிராம வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால், இந்த வங்கிகளின் கட்டமைப்பை வலுவாக்குவதற்குப் பதிலாக மோசமாக்கிக்கொண்டே செல்கிறது, மத்திய அரசு. வங்கிகளுக்கான மூலதனமானது பெருகக்கூடிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை. போதுமான ஊழியர்களை நியமிக்காமல், காலம் கடத்திவருகிறது. 

அண்மையில் 1,200 பேர் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், தாங்கள் பார்த்துவந்த தகவல்நுட்பத் துறை வேலையை, பொறியாளர் வேலையை விட்டுவிட்டு வந்தவர்கள். எதற்காக அந்த வேலையை விட்டு இங்கு வந்தார்களோ, அதுவே நடக்காமல் போய்விடுமோ என அச்சம் வந்துவிட்டது. 

ஒரே கிளையில் தனித்தனியாக இருக்கவேண்டிய கணினிக் கடவுச்சொல்லை ஒரே ஆளே பயன்படுத்தும் அவலமும் நீடிக்கிறது. அதாவது, எழுத்தர் பணியிடத்தை நிரப்பாததால் அவருக்கு ஒதுக்கப்பட்ட கடவுச்சொல்லை அதிகாரி உள்ளிட்டு, அதன் பிறகு அதே அதிகாரி தனக்குரிய கடவுச்சொல்லை உள்ளிட்டு, வங்கிச் செயல்பாடுகளைச் செய்யும்நிலை இருக்கிறது. 

மெசஞ்சர் போன்ற பணிகளில் இருப்பவர்களை நீண்ட காலமாக மாதம் 5 முதல் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறது. 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அதிகாரிக்கு ஓய்வூதியம் 2.5 ஆயிரம் ரூபாய் என்றால் எப்படி? எனக்குத் தெரிந்து ஒன்றரை இலட்சம் கணக்குகளைக் கையாண்ட அதிகாரி ஒருவர், மளிகைக் கடையில் கணக்கு எழுதுகிறார். பலர் சிட்பண்ட்டில் கணக்கு எழுதுகிறார்கள், ஏடிஎம் காவலாளியாக இருக்கிறார்கள். 

சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம் என்கிறபடி, மற்ற பொதுத்துறை வணிகவங்கி ஓய்வூதியம் தரவேண்டும் என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், அதற்காக ஒரு தனி நிதியத்தை உருவாக்கவேண்டும் என அரசு கையைவிரிக்கிறது. ஏற்கெனவே 30 ஆயிரம் பேர் ஓய்வுபெற்றுவிட்டனர்; விரைவில் அதே அளவுக்கு ஓய்வுபெறும்நிலையில் உள்ளனர். ஒட்டுமொத்த கிராம வங்கிகளுக்கும் சேர்த்து, ஓய்வூதியத்துக்காக நிதியம் உருவாக்க 6- 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவைப்படும். வருவாய் பெருகட்டும்; அதிலிருந்து பிறகு தருவதாக அரசு சொல்கிறது. இப்போதே நிதியத்தை அமையுங்கள்; அதற்கு உரிய வருவாயை ஈட்டித்தருகிறோம் என்கிறோம். 

பணமதிப்பிழப்பு மூலம் முன்னரே முடக்கிவிட்டது. அடுத்து ஜிஎஸ்டி மூலம் சிறு வியாபாரிகளின் முதலீட்டைக் குறைத்துவிட்டது. இப்போது நடக்கும் ஊழல்முறைகேடுகளால் நம்பகத்தன்மையைக் குறைத்துவிட்டார்கள். இந்த நிலையில் வரும் வருவாய், லாபத்தை வைத்து ஓய்வூதிய நிதியம் அமைப்பதாகச் சொல்வது எப்படி சாத்தியமாகும்?” எனப் போராட்டத்துக்கான காரணங்களை பட்டியல்போட்டு விவரித்தார், மாதவராஜ். 

எளிய மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பற்றி ஏராளமாகப் பேசும் இந்த அரசாங்கம், அதை நடைமுறையில் கொண்டுவரவும் ஒத்தாசைபுரியும் நாள், எந்நாளோ?