Published:Updated:

அரசு அதிகாரிகளின் அலட்சியம் - அரசுப் பள்ளியில் இரவைக் கழிக்கும் பழங்குடியினர்

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், யானைக்கு பயந்து இரவு பொழுதை அரசு பள்ளியில் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள காட்டுநாயக்கன் சமூக பழங்குடியினர்.

அரசு அதிகாரிகளின் அலட்சியம் - அரசுப் பள்ளியில் இரவைக் கழிக்கும் பழங்குடியினர்
அரசு அதிகாரிகளின் அலட்சியம் - அரசுப் பள்ளியில் இரவைக் கழிக்கும் பழங்குடியினர்

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், யானைக்குப் பயந்து இரவுப் பொழுதை அரசுப் பள்ளியில் கழிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக் காட்டுநாயக்கர் சமூகப் பழங்குடியினர். தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரேம்பாடி, கண்ணம்பள்ளி பகுதியில், காட்டுநாயக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 7 குடும்பத்தினர், வனப்பகுதிக்கு நடுவே மண் மற்றும் மூங்கில்களால் ஆன வீடுகளில் வசித்து வருகின்றனர். இரவு நேரத்தில் யானைகள் வீடுகளைச் சேதப்படுத்துவது தொடர்வதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவுப் பொழுதைக் கழிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படும்போது, அதைப் பார்வையிட வரும் அதிகாரிகள், புதிதாக வீடுக் கட்டித் தருவதாக உறுதியளித்து செல்வது மட்டும் தொடர் கதையாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி பொம்மி கூறுகையில், “ இப்பகுதியில் காட்டுநாயக்கர் பழங்குடி குடும்பத்தினர் பலர் வசித்துவந்தனர். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியம்மை தாங்கி பலர் இறந்ததையடுத்து, பெரும்பாலான குடும்பத்தினர் நிலம்பூர், கையுண்ணி, மங்கரா உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். நியாய விலை அரிசியும், காடுகளில் இருந்து கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருள்களையும்  உண்டு, நாங்கள் வாழ்ந்துவருகிறோம். ஆண்கள் கூலி வேலைக்குச் செல்கின்றனர். எங்களுக்கு வசிப்பதற்கான வீடு அத்யாவசியத் தேவையாக உள்ளது ” என்றார்.

இதுகுறித்துப் பேசிய பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் நடராஜன்,“ இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இப்பகுதியில் காட்டுநாயக்கர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் வசித்துவந்தனர். கூட்டமைப்பு சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான், தற்போது வசிக்கும் 7 குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு பெற்றுக் கொடுத்தோம். மண் மற்றும் மூங்கிலால் இவர்கள் கட்டியுள்ள வீடுகளை இரவு நேரத்தில் யானைகள் சேதப்படுத்திவிடுகின்றன. இங்கிருந்த 7 வீடுகளில் தற்போது 3 வீடுகள் இடிந்தும் இடியாத நிலையிலும் உள்ளன. மீதி வீடுகளை யானைகள் துவம்சம் செய்து அடையாளம் இல்லாமல் செய்துவிட்டன. இவர்களுக்குத் தேவையானவை குறித்து அரசியல் தலைவர்களோ, அதிகாரிகளோ கண்டுகொள்வது கிடையாது. அடிப்படைத் தேவைகுறித்து பல முறை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, சேரம்பாடி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது தொடர்பான கள ஆய்வு செய்ய, கலெக்டர் வந்தபோது, காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கலெக்டரிடம் அடிப்படை வசதி வேண்டும்; வீடுக் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர். கலெக்டரும், தாசில்தாரிடம் 15 நாள்களில் இப்பிரச்னையைச் சரிசெய்யும்படி உத்தரவிட்டார். ஆனால், 4 மாதம் 15 நாள்கள் கழிந்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. அதிகாரிகள் கள ஆய்வுகூட செய்யவில்லை. அரசுத் துறையில் வேலை செய்யும் அதிகாரிகள், பழங்குடியினர் என்பதால் அவர்களின் தேவைகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.மேலும், இவர்கள் வசிக்கும் பகுதி, வெண்ரோத் எஸ்டேட்டுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. சங்க நிர்வாகிகள் மூலம் எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசியபோது, அரசு சார்பில் கடிதம் கொடுக்கும் பட்சத்தில், இங்கு வசிக்கும் 7 குடும்பத்தினருக்கும் தாங்கள் வீடுக் கட்டித் தருவதாக உறுதியளிக்கின்றனர். ஒரு சாதாரண அனுமதிக் கடிதம் அளிக்க தாசில்தாரால் முடியும், ஆனால் பழங்குடியினர் என்பதால் செய்ய மறுக்கின்றனர், ” என்றார்.