Published:Updated:

`நாசாவுக்குத் தேர்வான நெல்லை மாணவி - வறுமையால் அமெரிக்கா செல்வதில் சிக்கல்!

பி.ஆண்டனிராஜ்
`நாசாவுக்குத் தேர்வான நெல்லை மாணவி -  வறுமையால் அமெரிக்கா செல்வதில் சிக்கல்!
`நாசாவுக்குத் தேர்வான நெல்லை மாணவி - வறுமையால் அமெரிக்கா செல்வதில் சிக்கல்!

நாசாவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்குத் தேர்வான நெல்லை மாணவி, தனது குடும்ப வறுமை காரணமாக அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கோரி மாணவி சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ராமச்சந்திரன். அவர் அங்குள்ள தனியார் மில்லில் கூலித்தொழிலாளியாக உள்ளார். அவரின் மனைவி சிவகாமசுந்தரி. இவர்களுக்கு பரமேஸ்வரி, முப்பிடாதி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். முத்த மகள் பரமேஸ்வரி, பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். இளைய மகள் முப்பிடாதி, வீரவநல்லூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறு வயது முதலாகவே ஆய்வுகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும் முப்பிடாதி, இளம் விஞ்ஞானி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். தற்போது வரையிலும் வேளாண் துறை சார்ந்த ஆய்வுகளில் தன்னார்வமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாணவர்களுக்கான போட்டிகளை நடத்தியது. 

இந்தியாவிலிருந்து 3000 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், முப்பிடாதியும் பங்கேற்றார். `செவ்வாய் கிரகத்தில் ஏலியனைச் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால்?’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது. அதில் ஆர்வத்துடன் பங்கேற்ற முப்பிடாதி, ஏலியனைச் சந்தித்தால் அதன் உதவி பெற்று பல்வேறு ஆய்வுகளை நடத்த இருப்பது குறித்தும் செவ்வாய் கிரகம் பற்றியும் விரிவாக கட்டுரை எழுதி இருந்தார். 

அந்தக் கட்டுரையானது நாசா விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகளால் சிறந்த கட்டுரைக்கான பட்டியலில் 4-வது இடம் பிடித்தது. முதல் 3 இடங்களில் தேர்வானவர்களை நாசா அமைப்பு முழுச் செலவையும் செய்து, வரும் 27-ம் தேதி நடக்க இருக்கும் அடுத்தகட்டப் போட்டிக்கு அழைத்துச் செல்கிறது. 4-வது இடம் பிடித்த முப்பிடாதிக்கு ரூ.30,000 மட்டுமே நாசா அமைப்பு செலவு செய்கிறது. எஞ்சிய 1.70 லட்சம் மதிப்பிலான தொகையை சொந்தமாக செலவு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது.

அடுத்தகட்டப் போட்டியில் தேர்வானால், அடுத்த 10 வருடங்களுக்கு இலவசமாக அமெரிக்காவில் தங்கி, கல்வி கற்கும் வாய்ப்பை நாசா அமைப்பு வழங்க இருக்கும் நிலையில், மாணவி முப்பிடாதியால் அடுத்தகட்டப் போட்டிக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரால் 1.70 லட்சம் ரூபாய் புரட்டுவதில் சிரமம் இருப்பதால் அவரால் போட்டியில் பங்கேற்க இயலாத நிலைமை உருவாகியுள்ளது. 

அதனால், முப்பிடாதி இன்று தனது தாய் சிவகாமசுந்தரியுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தார். அதில், தன் குடும்ப வறுமை காரணமாக அமெரிக்கா செல்வதற்காக தொகையை திரட்டுவதில் சிரமம் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் அதற்கான உதவியைச் செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா, மாணவி முப்பிடாதிக்கு உரிய உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.