Published:Updated:

கோவையின் மையமான கரும்புக்கடையில் ஏ.டி.எம்-க்கு 3 கி.மீ. அலைச்சல்!

கோவையின் மையமான கரும்புக்கடையில் ஏ.டி.எம்-க்கு 3 கி.மீ. அலைச்சல்!
கோவையின் மையமான கரும்புக்கடையில் ஏ.டி.எம்-க்கு 3 கி.மீ. அலைச்சல்!

சம்பந்தம் இல்லாமலும், பயனளிக்காத திட்டங்களுக்கும் பல நூறு கோடிகள் கொட்டப்படும் நிலையில், கோவையின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், வங்கி என்று அனைத்து அடிப்படை தேவைகளுக்காகவும் நீண்ட ஆண்டுகளாகப் போராடி வருகிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தலைநகர் சென்னைக்கு அடுத்த மெட்ரோ நகரம், ஸ்மார்ட் சிட்டி, தொழில் நகரம் என்று கோவையின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், கோவையில் உள்ள பெரும்பாலான குளங்கள் பல நூறு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டு, அலங்காரப்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிய அளவில் தண்ணீர் பிரச்னை ஏதும் இல்லாத கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நல்ல சாலை வசதிகள் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதி சாலைகள் 60 கோடி ரூபாய் செலவிலும், ஆர்.எஸ்.புரம் திவான்பகதூர் சாலை 25 கோடி ரூபாய் செலவிலும் மாதிரி சாலைகளாக மாற்றப்பட இருக்கின்றன. மக்களுக்குப் பயனே இல்லாத காந்திபுரம் மேம்பாலம் 195 கோடி ரூபாயில் சீரமைப்பு என்று ஏராளமான திட்டங்கள் கோடிகளில் புரண்டுகொண்டிருக்கின்றன.

இப்படி, சம்பந்தம் இல்லாமலும் பயனளிக்காத திட்டங்களுக்கும் பல நூறு கோடிகள் கொட்டப்படும் நிலையில், கோவையின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், நூலகம், வங்கி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்காமல் மிகவும் போராடிக்கொண்டிருக்கிறது. உக்கடம் அருகே உள்ள கரும்புக்கடை பகுதிதான் அது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதுடன், 1980-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் அதிகளவில் குடியேறிய பகுதியும் இதுதான். துப்பாக்கி ஏந்திய போலீஸார் எப்போதும், இந்தப் பகுதியின் நுழைவாயிலில் வரவேற்றபடி நின்று கொண்டிருப்பார்கள். டிஜிட்டல் இந்தியாவில், பாமர மக்களையும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாற, பிரதமர் மோடி வலியுறுத்தி வரும் நிலையில், ஏ.டி.எம்-க்குச் செல்லவேண்டுமானால்கூட, இப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்ய வேண்டும்.

இதுபற்றி சமூக ஆர்வலர் அப்துல் ஹக்கீம், ``அரசுப் பள்ளி தொடங்கினால் 2 ஆயிரம் மாணவர்கள் சேருவார்கள். ஆனால், அரசுத் தரப்பில் ஆரம்பப் பள்ளியை தரம் உயர்த்தாததால், இங்கிருக்கும் வியாபாரிகளே சேர்ந்து 3 தனியார் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். மேலும், டெய்லரிங் உள்ளிட்ட பயிற்சிகளை நாங்களே வழங்கி வருகிறோம். அரசியல் கட்சி, அமைப்புகள் என்று பல்வேறு வகையில், பல்வேறு அரசுத் துறைகளில் மனு கொடுத்து விட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு நிறைய வியாபாரிகள் உள்ளனர். அரசின் மானியம் பெறுவது தொடங்கி, பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்கு வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், முன்னோடி வங்கி நிர்வாகத்தைச் சந்தித்து கோரிக்கை வைத்தோம். `வங்கி அமைக்க இடம் இல்லை' என்றார்கள். மெயின் ரோட்டிலேயே, வங்கிக்கு இடம் கொடுத்து, அவர்கள் கேட்கும் விதத்தில் கட்டித் தருகிறோம் என்று சொல்லிய பின்னரும், வங்கித் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

சிறுபான்மையினர் அதிகம் வசிப்பதால், இப்பகுதியில் வங்கி தொடங்க யோசிக்கின்றனர். கடன் வசூல் செய்வதில் பிரச்னை என்றால், ஜமாத்தை வைத்து வாங்கித் தருகிறோம் என்றும் சொல்லிவிட்டோம். வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்ட விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களை எல்லாம் விட்டுவிட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை கடன் பெறுவதற்காக வங்கி கேட்கவில்லை. அடிப்படை வசதிகளுக்காகத்தான் கேட்கிறோம். வங்கி, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால், பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். சாலைகளும் சரியில்லை. தொலைவில் உள்ள வங்கிகளுக்குச் சென்றுவருவதால், நேரம்தான் வீணாகிறது" என்றார்.

``கரும்புக்கடை என்பது நகரப்போர்வை போர்த்தப்பட்டிருக்கும் ஒரு கிராமம்தான். நகரத்துக்குண்டான எந்த அடிப்படை வசதிகளும் இங்கில்லை. இங்கு நடுத்தர குடும்பத்தினர்தான் அதிகம். 70 ரூபாய் இல்லாமல் அரசு மருத்துவமனைக்குப் போக முடியாது. அந்த 70 ரூபாய்கூட இல்லாத மக்கள்தான், இங்கு அதிகம் இருக்கின்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட இங்கு வசதி இல்லை. இன்றைய சூழலில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கும் வங்கிச் சேவை அவசியம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், இங்கு எந்தவொரு வங்கியின் கிளையும் இல்லை. தற்போது, இங்கு மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், பேருந்து பிடித்து வங்கிக்குச் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. வண்டி இல்லாமல் யாரும் வெளியில் செல்ல முடியாது. குடும்பத்துடன் நேரம் செலவிட ஒரு பூங்கா வேண்டும். சரியான சாலைகள் இல்லை. அவசரக் காலங்களில், ஆம்புலன்ஸ்கள் இங்கு அவ்வளவு எளிதாக வந்துவிட்டுப் போக முடியாது.

அடிப்படைத் தேவைகள் இந்தப் பகுதியிலேயே கிடைக்குமானால், வீட்டில் உள்ள ஆண்களை எதிர்பார்க்காமல் நாங்களே சென்று தேவையான பொருள்களை வாங்கிக் கொள்வோம். கடைகளுக்குச் செல்ல வேண்டுமானால்கூட ஆண்களை நம்பியே இருக்க வேண்டியிருக்கிறது. எங்கள் பகுதியை விட்டு, அருகில் உள்ள இடங்களுக்குப் பெண் குழந்தைகளைப் படிப்பதற்கு வேறு இடங்களுக்கு அனுப்புவதிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன" என்கிறார் சஜீனா என்ற பெண்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி பயின்று வரும் அப்துல் ஹக்கீம், ``நான் 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில்தான் வசித்து வருகிறேன். இந்தப் பகுதி பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக, அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. வங்கிகள் இல்லாததால், இந்தப் பகுதி மக்களுக்குப் கல்விக் கடனும் கிடைப்பதில்லை. இதன்காரணமாக இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், உயர் கல்விக்குச் செல்ல முடியாத நிலைதான் தொடர்கிறது. தற்போது, சூழ்நிலை கொஞ்சம் மாறி வருகிறது.

ஒவ்வொரு முறையும் எங்கள் பகுதிக்கு வரும் அதிகாரிகள், வழக்கம்போல் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்ப்பார்கள். ஆனால், நடவடிக்கைகள் ஏதும் இருக்காது. அதிகாரிகளும், தற்போது அரசியல்வாதிகள் மாதிரி பேச ஆரம்பித்து விட்டனர். சிறுபான்மையினர் என்பதால், எங்களைப் புறக்கணிக்கிறார்களோ என்ற ஐயம் எங்களுக்கு ஏற்படுகிறது" என்றார்.

கோவை மாநகராட்சியில் அதிக நெரிசல் கொண்டப் பகுதியாக கரும்புக்கடை இருக்கிறது. கிட்டத்தட்ட 55 ஆயிரம் மக்கள் இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர். சாரமேடு பகுதியில் இருக்கும் ஆரம்பப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, 100 மாணவர்களுக்கு ஒரே ஓர் ஆசிரியர்தான் இருந்தார். தற்போது, 100 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்கள் இருக்கின்றனர். 3 வகுப்புகள்தான் உள்ளன. இத்தனை மாணவர்களுக்கும் ஒரே ஓர் சமையலர்தான் இருக்கின்றார். காம்பவுண்ட் சுவரும் இல்லை.

கால்பந்து உட்பட பல்வேறு விளையாட்டுகளில் இந்தப் பகுதி மாணவர்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர். ஆனால், அந்த மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஒரு மைதானம்கூட இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என்பதால், இந்த மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கு நூலகம் இல்லை. இந்தப்

பகுதியில் நூலகம் வேண்டும் என்று கேட்டதற்கு, `நூலகம் செயல்பட வாடகை இல்லாத கட்டடம் வேண்டும்; நூலகம் நிரந்தரமாகச் செயல்பட 5 முதல் 10 சென்ட் காலிமனை, நூலக ஆணைக்குழுவுக்கு இலவசமாகப் பத்திரப்பதிவு செய்து, அன்பளிப்பாகத் தருதல் வேண்டும். 20 ஆயிரம் மதிப்புள்ள தளவாடங்கள் நன்கொடையாக வேண்டும், தலா ரூ.60 செலுத்தி 200 பேர் நூலக உறுப்பினர்களாகச் சேரவேண்டும்' என்று நீண்ட பட்டியலுடன் அரசுத் தரப்பில் பதிலளித்துள்ளனர். இப்படிச் சம்பந்தம் இல்லாமலும், சப்பைக் கட்டு பதில்களுமே கரும்புக்கடை மக்களுக்குப் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக கோவை கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``இப்படி ஒரு விஷயமே நீங்கள் சொல்லித்தான் தெரியும். விசாரிக்கிறோம்" என்றனர்.

கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார், ``அந்தப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையருடன் கலந்தாலோசித்து, மேலிடத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

`அனைத்துப் பகுதிகளிலும், சரிசமமான வளர்ச்சியே ஆரோக்கியமான முன்னேற்றம். குறிப்பிட்டப் பகுதியை மட்டும் புறக்கணிப்பது, ஜனநாயக அடிப்படையிலானது அல்ல' என்பதைத் தமிழக அரசும், ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு