Published:Updated:

`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்!

நவீன் இளங்கோவன்
`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்!
`வெளியே தலை காட்ட முடியல' - மோசடி நிறுவனத்தால் கண்ணீர் வடிக்கும் பொதுமக்கள்!

‘அதிக வட்டி தருவதாகக் கூறி, அப்பாவி மக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து எங்களுடைய பணத்தை திரும்பப் பெற்றுத் தாருங்கள்’ எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ‘டிஸ்க் அக்ரோ டெக்’ என்னும் நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் இயங்கி வந்திருக்கிறது. ‘எங்களுடைய நிறுவனத்தில் சேமிப்புத் திட்டங்களுக்கு அதிக வட்டி கொடுக்கிறோம்’ என ஏஜெண்டுகளை வைத்துச் சம்பந்தப்பட்ட நிறுவனம் மக்களிடம் ஆசையைத் தூண்டியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் மக்களைச் சேர்க்கும் ஏஜென்ட்டுகளுக்கு 10 சதவிகிதம் வரை கமிஷன் கொடுக்கப்படும் என்று நிதி நிறுவனம் ஆஃபர்களை அள்ளி வீசியிருக்கிறது. இதைக் கேட்டு தமிழகம் முழுக்க களத்தில் இறங்கிய லட்சக்கணக்கான ஏஜென்ட்டுகள், மக்களிடம் அதிக வட்டி ஆசையைத் தூண்டி சேமிப்புத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய வைத்திருக்கின்றனர். ஆரம்பத்தில் சேமிப்புத் திட்டம் முடிந்ததும் ஒழுங்காக பணத்தைக் கொடுத்த நிதி நிறுவனம், ஒரு கட்டந்துக்கு மேல் பணம் தராமல் காலம் தாழ்த்தியிருக்கிறது. பணத்தை முதலீடு செய்த மக்கள், ஏஜென்ட்டுகளின் கழுத்தைப் பிடித்தப் பின்னர்தான் விவகாரம் பெரிதாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தை நம்பி கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாயைப் பொதுமக்கள் முதலீடு செய்த விஷயம் அதன் பின்னர் தான் தெரிந்திருக்கிறது. உடனே பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர். வழக்கின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் சொத்துகளை விற்று பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணத்தை செட்டில் செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருந்தும் தற்போது வரை எங்களுடைய பணம் கிடைக்கவில்லை எனப் பணத்தை இழந்த பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரளாக வந்து புகார் மனு அளித்தனர்.

இது சம்பந்தமாக புகார் கொடுக்க வந்த ஈரோட்டைச் சேர்ந்த ஏஜென்ட் வீராசாமி என்பவரிடம் பேசினோம். ‘ஏஜென்டுகளுக்கு அதிக கமிஷனும், முதலீடு செய்யும் மக்களுக்கு அதிக வட்டியும் கிடைக்கும் என்பதால் பலரும், ‘டிஸ்க் அக்ரோ டெக்’ என்னும் நிறுவனத்தில் சேர்ந்தோம். ஈரோட்டில் என்னைப்போல ஏஜென்ட்டுகள் மட்டும் கிட்டத்தட்ட 12,000 பேர் இருக்கின்றனர். நாங்கள் பொதுமக்களிடம் வசூல் செய்து சுமார் 32 கோடி ரூபாயை, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறோம். அந்தப் பணத்தை வைத்து அந்த நிதி நிறுவனம் பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை சேமிப்புத் திட்டம் முடிந்தவுடன் பணத்தை செட்டில் செய்த நிறுவனம், ஒரு கட்டத்துக்கு மேல் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்தது. இதனால், பணத்தை முதலீடு செய்த மக்கள் ஏஜென்டுகளாகிய எங்களிடம் சண்டை போடத் தொடங்கினர். பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை நாங்கள் அப்படியே சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் தான் கொடுத்திருக்கிறோம். நாங்கள் சல்லிப் பைசா கூட தொடவில்லை. ஆனால், பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் எங்களை நச்சரித்தும், மிரட்டியும் வருகின்றனர். இதற்குப் பயந்து வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்ற நிலையில் இருக்கிறோம். இது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடைய சொத்தை விற்று, மக்களுக்குப் பணத்தை செட்டில் செய்யச் சொல்லி உத்தரவிட்டது நீதிமன்றம். ‘பணத்தை முதலீடு செய்தவர்களின் விவரங்கள் பதியப்பட்ட சாப்ட்வேர் காலாவதியாகிவிட்டது. பணம் கொடுத்தவர்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை’ எனச் சம்பந்தப்பட்ட நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, இது சம்பந்தமாக நீதிமன்றம் அமைத்த குழுவுடன் பேசி, மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பணத்தை பெற்றுத்தர வேண்டும்” என்றார்.