Published:Updated:

அமைச்சர், மாவட்டச் செயலாளர் இடையே மோதல் - ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.7 கோடி டெண்டர் ஒத்திவைப்பு!

அமைச்சர், மாவட்டச் செயலாளர் இடையே மோதல் - ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.7 கோடி டெண்டர் ஒத்திவைப்பு!
அமைச்சர், மாவட்டச் செயலாளர் இடையே மோதல் - ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.7 கோடி டெண்டர் ஒத்திவைப்பு!

அமைச்சர் மணிகண்டன் - மாவட்டச் செயலாளர் முனியசாமி இடையேயான மோதலால் ராமேஸ்வரம் நகராட்சியில் ஏழுகோடிக்கான டெண்டர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ராமேஸ்வரம் நகராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணிக்கான ரூ.7 கோடி மதிப்பிலான டெண்டர் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு வந்தன. ஆனால், இன்று நடைபெற இருந்த டெண்டர், நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது. இது ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில் மேலும், அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் - அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் முனியசாமி இடையேயான மோதல்தான் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் என்கிறார்கள் விவகாரம் அறிந்தவர்கள். 

``7 கோடி ரூபாய்க்கான டெண்டருக்கு இன்றே கடைசித் தேதி. ஆன்லைனில் ஒப்பந்தப் புள்ளி கோரியவர்கள் நேரடியாக வந்து டி.டி மற்றும் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். இதற்காக நகராட்சி ஆபீஸில் ஒரு டெண்டர் பாக்ஸ் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், கடைசி நாளான இன்று அந்தப் பாக்ஸ் வைக்கப்படவில்லை. ஆனால், அமைச்சர் மணிகண்டன் தரப்பு ஆட்கள் 8 பேரிடம் மட்டும் ஒப்பந்தப் புள்ளிக்கான ஆவணங்களை அதிகாரிகள் வாங்கிக்கொண்டனர்.

மற்றவர்களிடம் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆதரவாளர்களான எங்களிடமும் ஒப்பந்தப் புள்ளி ஆவணங்களை வாங்க அதிகாரிகள் மறுத்தனர். மறுத்தது மட்டுமல்லாமல் நிர்வாக காரணங்களுக்காக டெண்டரை ஒத்திவைப்பதாகக் கூறி ஒருதலைப்பட்சமாக நடந்து வருகிறார்கள். மேலும், எங்கள் ஆட்களை ஒப்பந்தப் புள்ளி கோரவிடாமல் அமைச்சருடைய ஆட்கள் தடுக்கிறார்கள்" என்கின்றனர் மாவட்டச் செயலாளர் ஆதரவாளர்கள். இதுதொடர்பாக குழந்தையம்மாள் என்பவர் நகராட்சி ஆணையருக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார். 

பரமக்குடி நகராட்சியில் ரூ.5 கோடி டெண்டர் விடப்படும் போதும் இதே போன்று நடந்ததாகவும், அதற்குப் பழி தீர்க்கும் வகையிலேயே அமைச்சருடைய ஆட்கள் இப்படிச் செயல்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. பதற்றமான சூழலை தவிர்க்கவே, டெண்டர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுஒப்பந்தப் புள்ளிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி மோதலால் ராமநாதபுரம் மாவட்டம் அ.தி.மு.க-வினர் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.