Published:Updated:

காவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்

சி.ய.ஆனந்தகுமார்
காவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்
காவிரியில் சாயப்பட்டறை கழிவுகள்... ஆதாரத்தோடு அதிரவைத்த திருச்சி விவசாயிகள்

காவிரி ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகளைத் திறந்துவிடுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

காவிரி ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகளைத் திறந்துவிடுவதாகவும் இதனால் மனிதர்களுக்கும் விவசாயப் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வாட்டர் பாட்டிலில் சாயப்பட்டறை கழிவுகள் கலந்த நிறம் மாறிய தண்ணீருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் கொடுத்தனர்.

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவரான புலியூர் நாகராஜன் தலைமையில் வயலூர் ராஜேந்திரன் புங்கனூர் செல்வம் உள்ளிட்ட விவசாயிகள், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணியிடம் மனு கொடுத்தனர்.

நம்மிடம் பேசிய புலியூர் நாகராஜன், ``காவிரி மற்றும் அதன் கிளை வாய்க்கால் உய்யங்கொண்டான் வாய்க்கால், கட்டளை வாய்க்கால் உய்யக்கொண்டான், அய்யன் கால்வாய் உள்ளிட்ட பாசன வாய்க்கால்கள் திருச்சியை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றன. இந்த நிலங்களுக்குப் தண்ணீர் கிடைக்கும் பாசன வாய்க்கால்களில் கடந்த 20 நாள்களுக்கு மேலாகப் பச்சை பசேலென தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஈரோடு சாயப்பட்டறை கழிவுகளை அப்படியே காவிரியில் திறந்துவிடப்பட்டதால், இப்படி தண்ணீர் நிறம் மாறி வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் குளிக்கும் பொது மக்களுக்கு அரிப்புகள், தடிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இந்தத் தண்ணீரை விவசாய நிலங்களுக்குப் பாய்ச்சுவதால் சம்பா பயிர்களின் வளர்ச்சி குன்றியுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இப்போது கழிவுகள் கலந்த தண்ணீரை ஆய்வுக்காக அனுப்பி இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

தற்போது காவிரியில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தலாமா கூடாதா என்பது குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். அதற்குச் சோதனைக்கு அனுப்பட்ட தண்ணீரின் ஆய்வின் முடிவை விரைவாகப் பெற்று அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் மிகவும் பாதிக்கப்படுகிறது விவசாயிகள்தான். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றார்.

காவிரியில் சாயப்பட்டரைக் கழிவுகள் கலப்பதால் சம்பா பயிர்கள் பாதிக்கப்படுவது என்கிற குற்றச்சாட்டு விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.