Published:Updated:

`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை!

JAYAVEL B
`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை!
`கலைஞரை ஏமாத்திடலாம், ஆனால் தளபதியை ஏமாற்ற முடியாது' - தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை!

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டன. அ.தி.மு.க சார்பில் நேற்று பூத் கமிட்டி அமைத்து பணிகளைத் தொடங்கிதையடுத்து, தி.மு.க-வினரும் இன்று தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததன் விளைவாக, சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தார். இந்த வழக்கில் ‘சபாநாயகரின் தகுதி நீக்கம் செல்லும்’ மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டன. திருப்போரூர் எம்.எல்.ஏ கோதண்டபாணி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே ஓர் அ.தி.மு.க எம்.எல்.ஏ மட்டுமே இருக்கிறார். திருப்போரூர் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் களத்தில் இறங்கி இருக்கின்றன. திருப்போரூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் நேற்று 75 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. வாலாஜாபாத் கணேசன், எஸ்.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் குமரவேல் உள்ளிட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஒவ்வோர் ஊராட்சி சார்பாகவும் 5 பேர் வந்தனர். பூத் வாரியாகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுத் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து தி.மு.க தரப்பிலும் கழகச் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் எனக் கட்சியினருக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் விளக்கிக் கூறினார். “அ.தி.மு.க காரங்க வேலையைத் தொடங்கிட்டாங்க. நம்ம ஆட்கள் எல்லாம் ரெண்டு நாள்ல வேலையைத் தொடங்க வேண்டும். காஞ்சிபுரம் பகுதியில் அ.தி.மு.க-வினர் மணல் கடத்தல் செய்கிறார்கள். அவர்களை போலீஸ் பிடிப்பதில்லை. எம்சாண்ட் லாரிகளைப் பிடித்து வழக்கு தொடர்கிறார்கள். மலேசியா மணல் டெண்டரை அ.தி.மு.க-வினர் விற்பதற்காக எம்சாண்ட் மணல் லாரிகளை பிடிக்கிறார்கள். அமைச்சருக்குச் சொந்தமான 200 லாரிகளில் மணல் திருட்டு நடைபெறுகிறது. இப்படிப்பட்ட கொள்ளைக்கார ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்றால் இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்.

இது வாழ்வா, சாவான்னு முடிவு செய்யுற தேர்தல். இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியலன்னா வேட்டியை அவிழ்த்து வைக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். அடுத்தது நாடாளுன்ற தேர்தல் வருகிறது. அதில் இந்தத் தேர்தலைவிடப் பெரிய தியாகத்தை நாம் செய்ய வேண்டும். ஸ்டாலின் முதலமைச்சர் ஆகணும்னு சொன்னால், உயிரைக் கொடுத்தாவது இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். பூத் வேலை கொடுத்தால் பூத்துக்குள்ளதான் இருக்கணும். பக்கத்து ஊருக்குப் போகக்கூடாது. ஒவ்வோர் ஊராட்சியிலும் அதிக வாக்கு வாங்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த ஊராட்சி செயலாளருக்கு இருக்கிறது. கலைஞரை வேணும்னா நாம ஏமாத்திடலாம், தளபதியை ஏமாற்ற முடியாது. நாம் என்ன வேலை செய்கிறோம் என அவருக்குத் தெரியும்” எனக் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

திருப்போரூரில் தி,மு.க-வும் களமிறங்கியதைத் தொடர்ந்து ஏரியா கரை வேட்டியினரால் களைகட்டத் தொடங்கிவிட்டது.