Published:Updated:

அபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள்! - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

அபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள்! - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
அபராதம் கட்டுவதற்காக பிச்சை எடுத்த விவசாயிகள்! - திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

போராடிய விவசாயிகளுக்கு நீதிமன்றம் விதித்த அபராதத்தைக் கட்டுவதற்கு மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய விவசாயிகள் போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாகவே காட்சியளித்தது.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அனந்தபுரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றிய செபஸ்டின் மேரி ஸ்டெல்லாவை அக்டோபர் 15-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் தாக்கியதாக கூறி, தெற்கு ரயில்வே உத்தரவின் பேரில் ரயில்வேகேட் நிரந்தரமாகப் பூட்டப்பட்டது. இதனால்  புள்ளம்பாடி பேரூராட்சியில் இருந்து முள்ளால்செம்பரை, விநாயகபுரம், திண்ணியம் மற்றும் பூண்டி மாதா கோயிலுக்குச் செல்லவும், இப்பகுதியில் அமைந்துள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் தங்கள் மூலப்பொருள்களை எடுத்துச் செல்லவும் புள்ளம்பாடி-முள்ளால் சாலையைப் பயன்படுத்தி வந்த அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இதைத் தொடர்ந்து, மூடப்பட்ட ரயில்வே கேட்டைத் திறந்திட வலியுறுத்தி, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், விவசாயிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கையில்லை. ரயில்வே நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து, பூட்டிய ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி கடந்த 17-ம் தேதி புள்ளம்பாடி காமராஜர் சிலை முன்பு லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு, புள்ளம்பாடி பாசன வாய்க்கால் சங்கப் பிரதிநிதி சகாதேவன், பெண்கள், விவசாயிகள் என 500-க்கும் அதிகமானோர் ஊர்வலமாகச் சென்று புள்ளம்பாடி ரயில்வே கேட் அருகே நெடுஞ்சாலை மற்றும் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால், அவ்வழியாகச் செல்லும் பேருந்துகள் புள்ளம்பாடி ரயில்வே கேட் பகுதியில் நிறுத்தப்பட்டது. மேலும், கடலூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயில் புள்ளம்பாடி ரயில் நிலையத்திலும், மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற வைகை அதிவிரைவு ரயில் லால்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. ரயில் போக்குவரத்து மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படவே, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.  அதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன்  என்பவர் அளித்த புகாரின் பேரில், லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன், அய்யாக்கண்ணு, சகாதேவன், உட்பட 98 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்று மாலையே திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர்  அனைவருக்கும் பிணை வழங்கினார். இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முதன்மைப் பொறியாளர் விஜய்சுந்தர், மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை திறந்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் 3,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு சம்மன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தம் வழக்கு பதிவு செய்யப்பட்ட 98 பேருக்கும் ரூபாய் 3 லட்சம் வரை  கட்ட வேண்டும் என்பதால், விவசாயிகளால் அவ்வளவு பணம் கட்டமுடியாது என்பதால்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திரண்டு வந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென சட்டையைக் கழட்டி, கையில் துண்டை ஏந்தி மக்களிடம் யாசகம் கேட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து  அதிகாரிகள் அய்யாக்கண்னு உள்ளிட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதியாக அய்யாக்கண்ணு, ``புள்ளம்பாடி அருகே உள்ள ஆனந்தபுரம் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றும் பெண் ஊழியர், ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதைப் பார்த்த மற்றொருவர் அதுகுறித்து கேட்க அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்தப் பெண் ஊழியர் காயம் அடைந்துள்ளார். அதையடுத்து, மர்மநபர் தன்னைத் தாக்கியதாக அந்தப் பெண் ஊழியர் கூறவே, ஆனந்தபுரம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.  இதனால் பாதிக்கப்பட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம்.  நடவடிக்கையில்லை.  இதனால்தான் நாங்கள் ரயில் மறியலில் ஈடுபட்டோம். இதில் 500 பேருக்கு மேல் கலந்துகொண்டோம். போராட்டத்தில் கலந்துகொண்ட எங்கள் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு அழுத்தம் தந்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட நான் உட்பட  98 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ஜாமீனில் வெளியே விடப்பட்டாலும், இப்போது,  நீதிமன்றத்திலிருந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொருவரும் ரூபாய் தலா 3,000 அபராதம் கட்ட வேண்டும் என நீதிமன்ற சம்மன் வந்துள்ளது. மொத்தமாக 3 லட்சத்துக்கும் மேல் வருகிறது. அபராதம் கட்டும் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை என்பதால், மக்களிடம் பிச்சை எடுத்தாவது அபராதப் பணத்தைக் கட்டலாம் என்றுதான் இந்தப் போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டத்தில் எங்களுக்கு 1000 ரூபாய் கிடைத்தது. மேலும், இதுதொடர்பாக ரயில்வே டி.ஆர்.எம். அலுலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளோம்” என்றார்.

விவசாயிகளின் போராட்டத்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாகவே காட்சியளித்தது.