Published:Updated:

பேருந்துகள் இயங்கவில்லை; கடைகள் அடைப்பு -குமரி பா.ஜ.க `பந்த்' காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பேருந்துகள் இயங்கவில்லை; கடைகள் அடைப்பு -குமரி பா.ஜ.க `பந்த்' காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பேருந்துகள் இயங்கவில்லை; கடைகள் அடைப்பு -குமரி பா.ஜ.க `பந்த்' காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலையில் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, குமரி மாவட்டத்தில் பா.ஜ.க நடத்தும் பந்த் காரணமாகப் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


சபரிமலைக்குச் சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை பத்தனம்திட்டா எஸ்பி யதீஷ் சந்திரா தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், நிலக்கல் மற்றும் பம்பையின் போக்குவரத்துப் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என எஸ்பி கேட்டது பா.ஜ.க-வினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், சபரிமலையிலிருந்து பொன்.ராதாகிருஷ்ணன் புறப்பட்டபோது, அவருடன் வந்த காரை வழிமறித்து போலீஸார் சோதனைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வுகளைக் கண்டித்து, குமரி மாவட்ட பா.ஜ.க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று பந்த் அறிவித்துள்ளது. நேற்றிரவு சில பஸ்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. இதையடுத்து, இன்று குமரி மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாததால், வெளியூர் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். மேலும், கேரளப் பேருந்துகள் குமரிமாவட்டத்துக்குள் வராமல் எல்லை வரை இயக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பா.ஜ.க பந்த் காரணமாக குமரி மாவட்டத்தில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.