Published:Updated:

`காலை உணவுக்காக 12 மணிவரை காத்திருந்தோம்!’ - முதல்வர் விசிட்டால் நொந்துபோன மக்கள்

விகடன் விமர்சனக்குழு
`காலை உணவுக்காக 12 மணிவரை காத்திருந்தோம்!’ - முதல்வர் விசிட்டால் நொந்துபோன மக்கள்
`காலை உணவுக்காக 12 மணிவரை காத்திருந்தோம்!’ - முதல்வர் விசிட்டால் நொந்துபோன மக்கள்

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட ஹெலிகாப்டரில் கடந்த 20-ம் தேதி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோசமான வானிலை காரணமாகக் கீழே இறங்க முடியாமல் திரும்பிச் சென்றார். அதனால் இன்று ரயில் மூலமாக அதிகாலை 5 மணிக்கு வந்திறங்கிய முதல்வருக்கு அதிகாரிகளும் அமைச்சர்களும் வரவேற்பளித்தனர்.

காலை சிற்றுண்டிக்குப் பிறகு, நாகை ஒன்றிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் ராமபுரம், விழுந்தமாவடி, காமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இடிந்து கிடக்கும் வீடுகளையும் விழுந்து கிடக்கும் மரங்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன் பின்னர், வேட்டைக்காரனிருப்பு புயல் பேரிடர் மையத்தில் தங்கியிருந்த மக்களைச் சந்தித்தார். ``எல்லாத்தையும் இழந்துவிட்டோம். முதலில் நாங்கள் வசிக்க வீடு வேண்டும்" என்று கேட்ட மக்களுக்கு விரைவில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார். இதுநாள்வரை காலை 9 மணிக்கே முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு வழங்கி வந்தார்கள்.

ஆனால், இன்றோ முதல்வர் வந்த பிறகு தருவதாகச் சொல்லி அனைவரையும் கட்டிப்போட்டார்கள். 12 மணி வரை சாப்பிடாமல் குழந்தைகள் துவண்டுபோனார்கள். முதல்வர் வந்தபின் உணவைச் சுவைத்து பார்த்து பின், அந்த ஊரில் இருந்த அ.தி.மு.க தலைவர் ஆதிமூலத்துக்கு பொங்கலும் சட்டினியும் வழங்கினார். ``முதலமைச்சர் இடிந்து கிடக்கும் எங்கள் வீடுகளையும் வந்து பார்க்கல. அவரிடம் எங்கள் குறைகளையும் சொல்லவில்லை. எப்போதும் காலை 9 மணிக்கே பொங்கல் தருவார்கள். இன்று முதல்வர் வந்ததால் பொங்கலோடு கொஞ்சம் சட்னி சேர்த்து 12 மணிக்குக் கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்" என்றனர் அம்மக்கள்.

நாலுவேதபதி, புஷ்பவனம், பெரிய குத்தகை ஆகிய கிராமங்களைப் பார்வையிட்டு தோப்புத்துறை வந்த முதல்வர் அங்கு காலை முதல் நின்றுகொண்டிருந்த மக்களை காரில் இருந்தபடியே கையெடுத்து கும்பிட்டுச் சென்றார். இதனால் வெகுண்டெழுந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். "எல்லாத்தையும் இழந்து அநாதையாக இருக்கிற எங்களைப் பார்த்து ஒரு ஆறுதல் வார்த்தை சொல்ல முதல்வருக்குத் தான் முடியல. இத்தனை அமைச்சர்களில் ஒருவராவது இறங்கி எங்களிடம் இரண்டு வார்த்தை பேசிச் சென்றால் என்ன? இதைக்கூடச் செய்ய முடியாமல் எதற்குத்தான் இங்கு வந்தார்கள்?’’ என்று திடீர் சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் சீர்காழி டி.எஸ்.பி சேகரும் மயிலாடுதுறை டி.எஸ்.பி வெங்கடேசனும் சமாதானப் பேச்சு நடத்தி, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அழைத்து வருவதாக வாக்குறுதி கொடுக்கவே, சாலை மறியல் கைவிடப்பட்டது.

வேதாரண்யத்தில் மதிய உணவை முடித்த முதல்வரும் அமைச்சர்களும் அதன்பின் ஆதனூர், ஆயக்காரன்புலம், வாய்மேடு ஆகிய ஊர்களில் திரட்டி வைக்கப்பட்டிருந்த மக்களிடம் ``உங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து தருகிறோம்" என்று கூறி பறந்து சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் வேட்டி, புடவை, பால்பவுடர், சோப் என 27 பொருள்கள் அடங்கிய பை கொடுக்கும்பணி இன்று தொடங்கியுள்ளன. யார், யார்க்கு என்னென்ன வகையில் இழப்பு என்பதைக் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தருவதற்கும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது" என்றார்