Published:Updated:

`மின்சாரம் இல்லை, பரீட்சைக்கு படிக்க முடியலை' - எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பிய மாணவி!

`மின்சாரம் இல்லை, பரீட்சைக்கு படிக்க முடியலை' - எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பிய மாணவி!
`மின்சாரம் இல்லை, பரீட்சைக்கு படிக்க முடியலை' - எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப்பில் கடிதம் அனுப்பிய மாணவி!

மின்சாரம் இல்லாததால், தேர்வுக்குப் படிக்க முடியவில்லை. படிப்பதற்காவது உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளமங்கலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன் தொகுதி எம்.எல்.ஏக்கு வாட்ஸ்அப் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். 

குளமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட ஆலங்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இன்னும் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் உள்ளது. புயல் தாக்கி 20 நாள்களுக்கு மேலாகியும் இங்குள்ள கிராமங்களில் இன்னும் மின்சாரம் எட்டிப்பார்க்கவில்லை. இதனால், அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, தற்போது அரையாண்டுத்தேர்வு துவங்கி உள்ள நிலையில், மின்சாரம் இல்லாமல், படிக்க முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், குளமங்கலம்  வடக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும்  அபிநிஷா (16) என்ற மாணவி  ஆலங்குடி எம்.எல்.ஏ-க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘‘ஐயா கடந்த ஒரு மாத காலமாக குளமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவில் மின்சாரம் வரவில்லை. இதனால், படிப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. மாணவர்களாகிய எங்களுக்கு அரையாண்டுத் தேர்வு இன்று முதல் ஆரம்பம் ஆகி உள்ளது.

நாங்கள் அனைவரும் படிப்பதற்கு வசதியாக வெகுவிரைவில் மின்சாரம் வழங்க  மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ இப்படிக்கு, உண்மையுள்ள பள்ளி மாணவர்கள் என்றும், பள்ளி மாணவர்கள் 12 பேரின் கையொப்பம் போடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை அந்த மாணவியின் தந்தையின் செல்போன் மூலம் எம்.எல்.ஏ-வின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளனர்.  இதுகுறித்து, ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதனிடம் பேசினோம்,  ‘வாட்ஸ்அப்பில் மாணவியின் கடிதம் வந்ததைப் பார்த்தேன். இதுகுறித்து, உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆலங்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களில் இன்னும் முழுமையான மின்சாரம் கிடைக்கவில்லை. புயல் பாதித்ததில் இருந்து 15 நாள்கள் மின் இணைப்புகள் சரிசெய்யும் பணி வேகமாக நடைபெற்றது. தற்போது, வெளியூர் பணியாளர்கள் தங்களது  ஊர்களுக்குச்  சென்றதால், மின்  இணைப்புகள் சரிசெய்யும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மின்சாரம் கிடைக்காத கிராமங்களைக் குறிப்பிட்டு மின்விநியோகம் கொடுக்க மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்