Published:Updated:

சிட்டிசன் அத்திப்பட்டி கிராமம் மாதிரிதான் எங்க கிராமமும்... - முத்தன்பள்ளம் மக்கள் வேதனை! #Gaja

சிட்டிசன் அத்திப்பட்டி கிராமம் மாதிரிதான் எங்க கிராமமும்... - முத்தன்பள்ளம் மக்கள் வேதனை! #Gaja
சிட்டிசன் அத்திப்பட்டி கிராமம் மாதிரிதான் எங்க கிராமமும்... - முத்தன்பள்ளம் மக்கள் வேதனை! #Gaja

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முத்தன்பள்ளம் கிராம மக்கள் கஜா புயலின் தாக்குதலால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், மீண்டும்  இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் போராடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது முத்தன்பள்ளம் கிராமம். இங்கு 26 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், 2 ஓட்டு வீடுகள் தவிர மீதமுள்ள 24 வீடுகள் குடிசை வீடுகள். 

புயலுக்குப் பிறகு 4 பேரின் குடும்பங்களின் குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கி உள்ளனர். இங்கு, முறையான சாலை வசதி இல்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் நேரடியாகச் சென்று பார்க்கவில்லை. அரசின் நிவாரணங்கள் ஏதும் சென்றடையவில்லை.

24 நாள்கள் ஆகியும் மின்சாரம் இல்லை. தற்போது, விவசாய வேலையும் இல்லாததால், வருமானமின்றி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

முத்தன்பள்ளம் மக்களிடம் பேசினோம், `சிட்டிசன் படத்துல வர்ற அத்திப்பட்டி கிராமம் மாதிரிதான் எங்க ஊரு. எங்க ஊருக்கு அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியர் அலுவலக வாசலில் பல முறை ஏறி இறங்கி இருக்கிறோம். ஆனாலும், எங்க ஊருக்கு மாற்றம் ஏதும் வந்தபாடு இல்லை.  

கடைத்தெருவுக்கு போகணும்னா கூட 3 கி.மீ தூரம் நடக்க வேண்டும். ரொம்ப வருஷமா, நடந்துதான் போறோம். நடந்தேதான் பள்ளிக்கூடத்துக்கு போகுணும்கிறதால, பல பிள்ளைங்க படிப்பை நிறுத்திருச்சுங்க. இப்ப, 2 வருஷத்துக்கு முன்னால தான், ஊர்மக்களா சேர்ந்து, குறிப்பிட்ட தூரத்துக்கு டூவிலர் போற மாதிரி மண் சாலை அமைச்சோம். 

மழை பெய்தால் அதுவும் போக முடியாது. இப்ப புயலுக்குப் பிறகு இன்னும் ரோடு மோசம். பிள்ளைங்க திருப்பூர் கம்பெனிகளில் வேலை பாக்குதுங்க எங்களுக்கு விவசாய வேலை. இதை வைத்துத்தான் பிழைப்பு நடத்திக்கிட்டு இருந்தோம்.

கஜா புயல் தாக்கியதில் இருந்து எங்கேயும் வெளியில் செல்ல முடியலை. விவசாய வேலைகள் இல்லை. சாப்பிட அரிசி இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை. ரொம்பவே கஷ்டப்படுகிறோம். சில தன்னார்வலர்கள் வந்து நிவாரணப் பொருள்கள் கொடுத்தனர்.

ஆனால், நாங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும், சாலை வசதி இல்லாததைக் காரணம் காட்டி அமைச்சர், அதிகாரிகள் யாரும் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அரசின் நிவாரணம் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் மட்டுமே மிச்சம்’ என்கின்றனர்.