Published:Updated:

`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்!’ - ரங்கராஜ் பாண்டே

`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்!’ - ரங்கராஜ் பாண்டே
`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்!’ - ரங்கராஜ் பாண்டே

தந்தி டி.வி-யில் இருந்து ராஜினாமா செய்தது ஏன் என மீண்டும் ஒருமுறை விளக்கமளித்துள்ளார் ரங்கராஜ் பாண்டே.

பிரபல பத்திரிகையாளரும், தந்தி டி.வி-யின் தலைமை செய்தி ஆசிரியருமான ரங்கராஜ் பாண்டே தந்தி டி.வியில் ராஜினாமா செய்தார்.  'தந்தி டி.வி' ரங்க ராஜ் பாண்டே என்று கூறினால்தான் பலருக்கு அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு அந்தச் சேனலில் இருந்து புகழ்பெற்ற அவர், திடீரென ராஜினாமா செய்ததும், அவர் குறித்து நிறைய வதந்திகள் பரவியது. அவர் புதிதாக ஒரு சேனல் தொடங்க இருப்பதாகவும், மற்ற சேனலுக்குச் செல்கிறார் என்று பல வதந்திகள் பேசப்பட்டது. ஆனால், அந்த வதந்திகளை மறுத்த பாண்டே, ``நான் தந்தி டி.வி-யில் இருந்து விலகி உள்ளேனே தவிர, பத்திரிகையாளர் என்ற என் கடமையில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து இதே துறையில் இருந்து, இது தொடர்பான பணிகளை மட்டுமே செய்ய உள்ளேன். 

நான் பதவி விலகியதற்கு எந்தப் பெரிய காரணமும், சிக்கலும், குழப்பமும் இல்லை. இது, நான் நீண்ட நாள்களாக யோசித்து எடுத்த முடிவுதான். தினசரி ஒரே வேலையைச் செய்வதால் ஏற்பட்ட அயர்ச்சியின் காரணமாக, அதிலிருந்து வெளியில் வரும் முயற்சிதான் இது. வேறு எந்தக் காரணமும் இல்லை. அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் நோக்கிலும் என் ராஜினாமா உள்ளது. என் ராஜினாமா முழுவதும் நல்லதுக்காகவே வித்திடும் என நினைக்கிறேன்" என்று விளக்கம் கொடுத்தார். இந்த விளக்கத்துக்கு பின்பும் அவரது ராஜினாமா  குறித்து தொடர் வதந்தி பரவவே, தற்போது மீண்டும் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில், ``ஏற்கெனவே சொன்னதுபோலவே தந்தி குழுமத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்பது எனது நோக்கமில்லை. தினசரி வேலையில் வெளியே வர வேண்டும் என்கிற முயற்சிதான். என்னுடைய முடிவுக்கு 90 சதவிகிதம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் கிடைத்தது. எல்லோரும் நிறைய அக்கறையோடு அழைத்துக் கேட்டார்கள். அனைவரது அக்கறைக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அதேபோல் நிறைய மீம்ஸ்கள் வருகிறது. அது ஒருவகையில் ஜாலிதான். நீங்கள் வளர்த்த பிள்ளை நான். நீங்கள் மீம்ஸ் போடாமல் வேறு யார் போடுவது. அதேநேரம் நான் அந்த டி.வி-க்குப் போகிறேன்; இந்த டி.வி-க்குப் போகிறேன் எனப் புரளிகள் நிறைய வருகின்றன. இதில் எதிலும் உண்மையில்லை. நான் இதுவரை எந்த டி.வி-யிலும் சேரவில்லை. 

உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுவரைக்கும் பண்ணாத ஒன்றைப் புதிதாக பண்ண வேண்டும் என யோசித்து வருகிறேன். உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் முடிவுகள் எடுப்பேன். அதேபோல் நான் பா.ஜ.க-வில் சேரப்போகிறேன், ரஜினியின் கட்சியில் இணையப்போகிறேன் எனக் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் தான் இங்கே இருக்கிறேன். நான் அடுத்து என்ன பண்ணப் போகிறேன் என்பதில் இன்னும் ஒரு தெளிவான முடிவு எடுக்கவில்லை. ராஜினாமா செய்து மூன்று நாள் தானே ஆகிறது. இன்னும் நேரம் இருக்கிறது. நிதானமாக முடிவு எடுக்கலாம் என இருக்கிறேன். நான் எங்கு சேர்ந்தாலும் உங்களுக்குக் கண்டிப்பாக தெரிவிப்பேன். முதல் தகவல் உங்களுக்குத்தான். அது நான் உங்களுக்குச் செய்யும் நியாயம்" என்று பேசியுள்ளார்.