Published:Updated:

சடலத்தைச் சாலையில் புதைக்கும் மக்கள்..! - சுடுகாடு இல்லாமல் தவிக்கும் கிராமம்

நாட்டில் உள்ள ஒவ்வோர் ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப ஏதாவது தீர்க்கப்படாத பிரச்னைகள் நிலவிக்கொண்டே இருக்கும். அவை அனைத்துமே அம்மக்களின் வாழ்வாதாரம் சார்ந்து ஏதாவதொரு சிக்கலையும் உண்டாக்கியிருக்கும்.

சடலத்தைச் சாலையில் புதைக்கும் மக்கள்..! - சுடுகாடு இல்லாமல் தவிக்கும் கிராமம்
சடலத்தைச் சாலையில் புதைக்கும் மக்கள்..! - சுடுகாடு இல்லாமல் தவிக்கும் கிராமம்

நாட்டில் உள்ள ஒவ்வோர் ஊரிலும், கிராமத்திலும் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப ஏதாவது தீர்க்கப்படாத பிரச்னைகள் இருந்துகொண்டேதான் இருக்கும், அந்தவகையில் சுடுகாடு இல்லாமல் தவிக்கும் கிராமம் ஒன்று உள்ளது.

அவை அனைத்துமே அம்மக்களின் வாழ்வாதாரம் சார்ந்து ஏதாவதொரு சிக்கலையும் உண்டாக்கியிருக்கும். ஆனால் திருப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு தங்களின் வாழ்வாதாரத்தையும் தாண்டிய ஒரு பிரச்னை பல வருடங்களாக அந்தப் பகுதி மக்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. அரசிடம் உதவியை எதிர்பார்த்து அலுத்துப்போய்விட்டார்கள் அந்தப் பகுதி மக்கள்.

திருப்பூர் அருகே அமைந்துள்ள ராமப்பட்டினம் கிராமத்தில்தான், சுடுகாடு வசதி முறையாக இல்லாமல், இறந்துபோனவர்களின் உடல்கள், சாலைகளின் ஓரத்திலேயே புதைக்கப்பட்டு வரும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. இந்த அவலநிலை கடந்த 60 ஆண்டுகளாக அந்தப் பகுதி மக்களை வாட்டி வதைக்கும் பிரச்னையாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட சிவன்மலை ஊராட்சியில் அமைந்திருக்கிறது ராமப்பட்டினம் கிராமம். இந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், பல வருடங்களாகவே இந்தக் கிராம மக்களுக்குச் சுடுகாடு வசதி என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்போரின் உடல்கள், இக்கிராமச் சாலைகளின் ஓரத்திலேயே புதைக்கப்பட்டு, அங்கேயே காரியம் செய்ய வேண்டிய நிலை நீடிக்கிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இந்தக் கிராம மக்களின் வேதனையை அதிகப்படுத்தியிருக்கிறது.

ராமப்பட்டினம் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவரிடம் பேசினோம், ``அந்தக் காலத்தில் ஊருக்குள்ள கொஞ்சம் குடும்பங்கள்தான் இருந்தன. வீட்டோடு சேர்த்து காடு, கரைன்னு இருந்துட்டதால எங்க முன்னோர்களுக்கும் பிற்காலத்தில் இதுவெல்லாம் ஒரு பிரச்னையாகும்னு தோணாமல் போயிடுச்சு. ஆனால், காலப்போக்கில் ஊருக்குள்ள மக்கள்தொகை அதிகமாகிடுச்சு. காலி இடங்களே இல்லாத அளவுக்கு நிலைமை இப்போ ரொம்பவே மாறிப்போயிடுச்சு. இப்போ எங்களுக்குச் சுடுகாடு பிரச்னைதான் மிகப்பெரிய பிரச்னையா இருக்குது. இப்போதெல்லாம் ஊருக்குள்ள ஒரு மனுஷன் செத்தான்னா, அவர் இறந்துபோன வருத்தத்தைவிட அவர் பிணத்தை எப்படி அடக்கம் பண்ணலாம்ங்கற வருத்தம்தான் எல்லார்கிட்டேயும் அதிகமாக இருக்கும். அதுக்காக ஒவ்வொரு தடவையும் சடலத்தை வெச்சிக்கிட்டு கடும் போராட்டமே நடத்திக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு வேறுவழி தெரியலை. அதனால்தான் சாலை ஓரங்களில் பிணத்தை அடக்கம் பண்ணிட்டு இருக்கோம்.

ஆனால், அதிலேயும் எங்களுக்குப் பல பிரச்னைகள் இருக்கு. இப்போ ஒருபக்கம் பிணத்தை அடக்கம் பண்ணப்போனா, அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் நிலத்தோட சொந்தக்காரர் இங்கெல்லாம் பிணத்தைப் புதைக்கக் கூடாதுன்னு தடுக்க வருவார். அப்புறம் சடலத்தைத் தூக்கிட்டு வேறு ஒரு இடத்தைத் தேடிப் போகணும். அங்கேயும் யாராவது எதிர்ப்புத் தெரிவிப்பாங்களோன்னு பயத்தோடவும், யோசிச்சிக்கிட்டேவும்தான் போக வேண்டியிருக்கு. நாட்டுல எத்தனையோ வளர்ச்சிச் திட்டங்களைக் கொண்டு வந்துட்டாங்க. ஆனால் எங்களுக்கு நிம்மதியா ஒரு பிணத்தை அடக்கம் பண்ணக்கூட இப்போ வரைக்கும் ஒருவழி கிடைக்கலை. எம்.எல்.ஏ, வட்டாட்சியர், கலெக்டர்னு நாங்க மனு கொடுக்காத அதிகாரிங்களும் இல்லை. ஆனால் இதுவரைக்கும் எங்கள் கிராமத்தோட சிக்கலைப் புரிஞ்சுகிட்டு யாருமே நடவடிக்கை எடுக்க முன்வரலை" எனப் பரிதாபத்துடன் தெரிவித்தார்.

``சடலத்தைப் புதைக்கும் இந்தச் சாலையின் வழியாகத்தான் பள்ளி மாணவர்களும், பாதசாரிகளும் அனுதினமும் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அச்சத்துடனேயே இந்த வழியைக் கடந்துகொண்டு இருக்கிறோம். இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் இது நீடிக்கப்போகிறதோ" என்று பெருமூச்சு விடுகிறார்கள் இப்பகுதி மாணவர்கள்.

திருப்பூர் மாவட்டம் ராமப்பட்டினம் கிராம மக்களின் நிலையை உணர்ந்து, அவர்களின் தேவையைச் செய்துகொடுக்க அரசு முன் வரவேண்டும்...