Published:Updated:

வாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்

வாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்
வாட்ஸ்அப் `கேங்ஸ்டர்' குரூப் - ஆடியோவை விட்டு ரவுடிகளைத் தெறிக்கவிட்ட கோவில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்

கோவில்பட்டியில் பழிக்குப் பழி வாங்குவதற்காக இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் ரவுடிகளுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் இசக்கிராஜா என்பவர் எச்சரிக்கை விடுத்துப் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் திரைப்படம், பாடல்கள் சி.டி-க்களை விற்பனை செய்து வந்தார். இவருடைய மகன் அப்துல்லா திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு, இதே பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் காந்தாரி என்பவரின் மகன்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் இருவரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அப்துல்லாவை வெட்டிப் படுகொலை செய்தனர். இதைத் தொடர்ந்து தன் மகனை கொன்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைக் கொலை செய்ய வேண்டும் என்று முகம்மது ரபீக் முடிவு எடுத்தாக கூறப்படுகிறது. இதற்காக கோவில்பட்டி மற்றும் வெளியூரைச் சேர்ந்த ரவுடிகள் மற்றும் கூலிப்படைகள் மூலமாக திட்டமிட்டு காந்தாரியின் மற்றொரு மகன் கருப்பசாமியை மூன்று மாதம் கழித்து சாத்தூரில் அரசுப் பேருந்தில் வைத்து கூலிப்படையினர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக, முகம்மது ரபீக் மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளிவந்த முகம்மது ரபீக் மீண்டும் கூலிப்படையினர் மூலம் கடந்த 2017 ஆகஸ்ட்டில் ஆம்புலன்ஸ் டிரைவர் காந்தாரியை வெட்டிப் படுகொலை செய்தார். இந்த வழக்கிலும் முகம்மது ரபீக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருக்கும் இசக்கிராஜா, கோவில்பட்டியைச் சேர்ந்த கற்பகராஜா, ராஜதுரை ஆகிய இருவரை ஒரு வழக்கில் விசாரணை செய்தபோது அவர்களது  செல்போனை வாங்கிப் பார்க்கும்போது `அப்துல்லா சண்டியர்' என ஒரு வாட்ஸ்அப் குரூப் துவக்கப்பட்டு இருப்பதையும், அதில் உள்ள குறுஞ்செய்திகள், ஆடியோக்களைப் பார்த்துள்ளார். காந்தாரி குடும்பத்தில் உள்ள மற்றவர்களை கொலை செய்ய `அப்துல்லா சண்டியர்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் ஒன்றை ஆரம்பித்து, அதில் இளைஞர்கள் பலரையும் அதில் இணைத்து, அவர்களை மூளைச் சலவை செய்து கொலை சம்பவங்களை அரங்கேற்ற திட்டம் தீட்டியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், முகம்மதுரபீக் மற்றும் அவரது கூட்டாளி உலகு என்ற உலகுராஜ் ஆகியோருடன் கூட்டணி வைத்திருப்பவர்களுக்கு எச்சரித்து அதே வாட்ஸ்அப் குரூப்பில் அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில்,  ``ஏலேய் ஜவஹர்..,  கற்பகராஜா, ராஜதுரை ரெண்டு பேரையும் தூக்கிட்டேன். இப்போ ரெண்டு பேரும் என் கஷ்டடியிலதான் இருக்கானுங்க. சண்டியர்னு ஏதாவது குரூப் ஆரம்பிச்சீங்க கோவில்பட்டியில் ஒருத்தன் இருக்க மாட்டீங்க. எல்லாத்தையும் ரிமாண்ட் பண்ணிடுவேன். நான் இசக்கிராஜா எஸ்.ஐ., புரியுதா? கொலை செஞ்சுட்டு அலைஞ்சா பெரிய இவுங்களா? அந்த முகம்மது ரபீக், உலகுராஜா அவங்க ரெண்டு பேரும் ஓடி ஒழிஞ்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க ரெண்டு பேரையும் தூக்கிடுவேன். பாய்க்கு (முகம்மது ரபீக்) ஆளை வெட்ட தைரியம் இல்லை. அதனாலதான் உங்களை மூளைச்சலவை செஞ்சுட்டு இருக்கான். ஒழுங்கா உங்க குடும்பத்தையும் பொழப்பையும் பாருங்க. இந்த ஆடியோவை முகம்மது ரபீக்கிற்கும், உலகுராஜாவுக்கும் அனுப்புங்க” எனச் சொல்லி எச்சரித்துள்ளார்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இசக்கிராஜா, பஸ் நிலையத்தில் சிகரெட் பிடித்த அரசு பஸ் ஓட்டுநரை தாக்கியதாக எழுந்த பிரச்னை காரணமாக, கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை மீண்டும் இங்கு பணியமார்த்த வேண்டும் என பொதுமக்கள், சமூக அமைப்புகள் கோரிக்கை வைத்து வால் போஸ்டர்களை ஒட்டினர். இதைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2013 -ம் ஆண்டு உலக பாக்ஸிங் சாம்பியன் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.