Published:Updated:

அரசின் நிவாரண பால்பவுடரை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்? - 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

அரசின் நிவாரண பால்பவுடரை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்? - 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
அரசின் நிவாரண பால்பவுடரை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்? - 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மஞ்சுக்காடு கிராமத்தில் அரசு நிவாரணமாக வழங்கிய பால்பவுடரை சாப்பிட்டதால், 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,மயக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 7பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கறம்பக்குடி அருகே மஞ்சுக்காடு கிராமத்தில் நேற்று நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது. காலையில் நிவாரணபொருட்கள் வழங்கிய நிலையில் மாலையில் இந்த ஊரைச்சேர்ந்த முருகானந்தம், ரங்கம்மாள், கவியரசன், சுகந்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே, சிகிச்சைக்காக அனைவரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், கோபமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு பூட்டுப் போட்டு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 7பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்றுவருகின்றனர். அரசு நிவாரணமாகக் காலாவதியான ஆவின் பால்பவுடரை வழங்கியதாகவும், அதனைத் தெரியாமல் சாப்பிட்டதால் தான் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த ஊர்மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கறம்பக்குடி போலீசார் தீவிர விசார ணை நடத்தி வருகின்றனர்.