Published:Updated:

குழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு!

குழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய  அமைப்பு!
குழந்தை ஹரிணிக்காக 92 நாள்களாக போராடும் நாடோடி தம்பதியை தேற்றிய அமைப்பு!

 "ஹரிணி காணாமல் போய் இன்னையோட 92 நாள் ஆவுது. எல்லா வகையிலும் போலீஸூம்,நாங்களும்,மீடியாவும் தேடியாச்சு. அதனால்,ஹரிணி பாப்பா கிடைக்கிறப்ப கிடைக்கட்டும். நீங்க போலீஸ் ஸ்டேஷன் முன்னாடியே முடங்கி கிடக்காம பழையபடி பொழப்ப பார்க்க போங்க" என்று ஹரிணியின் பெற்றோரான நாடோடி இன தம்பதியை தெம்பூட்டி அனுப்ப அறிவுரை வழங்கி இருக்கிறார்கள் இணைந்த கைகள் அமைப்பினர்.

இரண்டு வயது நிரம்பிய ஹரிணி பாப்பாவை பற்றி விகடன் இணையதள வாசகர்களுக்கு அதிக அறிமுகம் கொடுக்க தேவையில்லை. காஞ்சிபுரம் மாவட்டம்,மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன்,காளியம்மாளின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. கடந்த 90 நாள்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்க போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில ஹரிணி காணாமல் போக,பதறிப்போன அந்த தம்பதி,அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது. அதோடு,'ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம்' என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். இந்நிலையில்,கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு,'ஹரிணியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' என்று அறிவித்தனர். அதை சமூக வலைதளங்களில் பரப்புவதோடு,மாவட்டவாரியாக அதை நோட்டீஸாக அச்சடித்து விநியோகித்து வருகிறார்கள். இந்த தகவல்கள் அனைத்தையும் விகடன் இணையதளம்தான் தொடர்ந்து செய்தியாக பதிந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை மூன்று தனிப்படைகள் அமைத்து ஹரிணியை தேடி வருகிறார்கள். இருந்தாலும் ஹரிணி பற்றி நம்பிக்கை தரும் எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.  இதற்கிடையில்,காளியம்மாள் எட்டு மாத இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமப்பதால், ஹரிணி காணாமல் போன துக்கத்தோடு அவர் இருப்பது அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். இந்நிலையில்தான்,'ஹரிணி கிடைக்கும்வரை நகரமாட்டோம்' என்று அணைக்கட்டு காவல்நிலையத்தின் முன்பே கதி என்று கிடக்கும் அந்த தம்பதியை மனரீதியாக தெம்பூட்டி பழையபடி தொழில் செய்ய அனுப்ப சம்மதிக்க வைத்திருக்கிறார் இணைந்த கைகள் அமைப்பினர். அவர்களது ஆட்டோவில் இருந்த பாசி மணிகள், பிளாஸ்டிக் பொம்மைகள் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தும் வீணாகிவிட்டதால், ரூ,50,000 செலவில் தேவையான பொருள்களை வாங்கி அவர்கள் தொழில் செய்ய உதவவும் அந்த அமைப்பு முடிவு செய்திருக்கிறது.

இதுபற்றி, நம்மிடம் பேசிய இணைந்த கைகள் அமைப்பைச் சேர்ந்த சலீம், "ஹரிணி பற்றி அறிந்துகொள்ள நாங்க கொடுத்த ஒரு லட்ச ரூபாய் அறிவிப்பு, காவல்துறை தனிப்படை, மீடியா என்று எவ்வளவோ முயற்சி செஞ்சாச்சு. எந்த முன்னேற்றமும் இல்லை. 'ஹரிணி இனியும் கிடைப்பாங்குறது சந்தேகம்தான்'ன்னு அணைக்கட்டு காவல்நிலையத்திலேயே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா,வெங்கடேசனும், காளியம்மாளும் ஹரிணி கிடைக்கும்வரை இங்கிருந்து போகமாட்டோம்ன்னு அணைக்கட்டு காவல்நிலையத்திலேயே இருக்காங்க. அவங்க தொழில் செஞ்சு 92 நாள் ஆவுது. சும்மாவே நின்னதால், ஆட்டோ ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது. ஆட்டோவுல விற்பனை செய்ய அவங்க வச்சுருந்த பொருள்களும் வீணா போச்சு. அதைவிட,சோத்துக்கு காசில்லாம,அல்லாடி பட்டினியாவே பணியிலும், வெயிலிலும் அந்த ஜோடி அங்கே இருக்காங்க. காளியம்மாள் வயித்துல அடுத்த குழந்தையை சுமப்பதால்,இப்படி அவங்க உடலாலும், மனதாலும் இப்படி தங்களை வதைப்பது காளியம்மாள் உயிருக்கே ஆபத்தாக முடியும். அவரது ரெண்டாவது குழந்தைக்கும் ஆபத்து வரும். அதனால்,அவர்கள் இருவரிடமும்,'குழந்தையை பற்றி எல்லா பக்கும் தகவல் பரப்பியாச்சு. ஹரிணி கிடைச்சுட்டா'ன்னு உலகம் முழுக பல தமிழர்கள் அடிக்கடி போன் போட்டு கேட்கிறாங்க. ஹரிணி எப்படியும் கிடைச்சுடுவா. ஆனா,அதுக்காக நீங்க இப்படி இருப்பது,தீர்வாகாது. அதனால்,பழையபடி வேலைக்கு போங்க'ன்னு கொஞ்சம் கொஞ்சமா பேசி,அவங்க மனசை கரைச்சு,ஒருவழியா சம்மதிக்க வச்சுட்டோம்.

ஆட்டோவுல இருந்த பொருள்கள் வீணா போனதால, ரூ.50000 ஒதுக்கி அவங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி தர இருக்கிறோம். 92 நாள் சும்மாவே நின்னதால், அந்த ஆட்டோ ஸ்டார்ட் ஆகமாட்டுங்குது. அதையும் சரிபண்ணி தர இருக்கிறோம். அவங்க தொழில் செய்ய நாலு இடம் போனாங்கன்னா, ஹரிணி பற்றிய நினைப்பு கொஞ்சம் மறையும். மனப்பாரமும் குறையும். யாராச்சும் மெக்கானிக்குகள் இந்த ஆட்டோவை சரிபண்ணி கொடுத்தா நல்லா இருக்கும். 'பெண் குழந்தை'ன்னதும் அதை கள்ளிப்பால் ஊத்தி கொல்ல நினைக்குற இதே தமிழகத்தில்தான்,இப்படி ஒரு பெண் குழந்தைக்காக இந்த தம்பதி வேலையை மறந்து,சோறு தண்ணியை மறந்து,நல்ல தூக்கம் இல்லாம,வயித்துல வளரும் ரெண்டாவது குழந்தையை பற்றியும் நினைக்காம கிடப்பது எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கு. இந்த உண்மையான பாசப்போராட்டத்திற்காகவே ஹரிணி பாப்பா சீக்கிரம் கிடைப்பா. கிடைக்கனும்னு இதை படிக்கிற எல்லோரும் அவரவர் வணங்குற சாமிகளை வேண்டிக்குங்க" என்றார்.