Published:Updated:

`நிலத்தடி நீரின் உவர்ப்புத்தன்மையை போக்க 50 லட்சம் செலவில் வாய்க்கால் விஸ்தரிப்பு’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

`நிலத்தடி நீரின் உவர்ப்புத்தன்மையை போக்க 50 லட்சம் செலவில் வாய்க்கால் விஸ்தரிப்பு’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
`நிலத்தடி நீரின் உவர்ப்புத்தன்மையை போக்க 50 லட்சம் செலவில் வாய்க்கால் விஸ்தரிப்பு’ - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 "நிலத்தடி நீரின் உவர்ப்புத்தன்மையை மாற்ற் 50 லட்சம் செலவில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் விஸ்தரிக்கப்படுகிறது" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றியம் காளிபாளையம் பகுதியில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் ரூ.50 லட்சம் மதிப்பில் விஸ்தரிக்கும் பணியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ``நெரூர் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாப்புலர் முதலியார் விஸ்தரிப்பு வாய்க்கால் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த விஸ்தரிப்பு வாய்க்கால் 6 கி.மீட்டர் நீளமுடையது. கருப்பம்பாளையம் ரொட்டிக்கடை முதல் வேடிச்சிபாளையம் வரை 3 கி.மீ நீளம் ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஏற்கனவே தூர் வாரப்பட்டு அப்பகுதி காளிபாளையத்திலுள்ள குளத்தில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள பெரிய காளிபாளையம் முதல் வேடிச்சிபாளையம் வரை 3 கி.மீ நீளத்தை ரூ.50 லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணிகள் ஏற்கெனவே துவக்கி வைக்கப்பட்டது. இப்பணிகளை முடித்து சின்னகாளிபாளையம் பகுதியிலுள்ள 3 குளங்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இதன்மூலம், இடையே உள்ள 5,000 ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. மேலும், இப்பகுதியிலுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதுடன் நீரின் உவர்ப்புத்தன்மை நீங்கி நன்னீராகும் வாய்ப்பு அதிகமுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நன்மை பயக்கும் வகையில் இந்தப்பணி அமையும்" என்றார்.

மொத்தம் 6 கிலோமீட்டர் நீளமுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில் 3 கி.மீ தூரம் ரூ.3.50 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 கி.மீட்டர் நீளமுள்ள வாய்க்கால் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. பாப்புலர் முதலியார் வாய்க்காலை சீரமைக்க ஆகும் ரூ.53.50 லட்சம் தொகை, போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த நிதியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியடைந்துள்ளனர் அப்பகுதி விவசாயிகள்.