Published:Updated:

``ஆலைகள் இருந்தால் கழிவுகள் வரத்தான் செய்யும்!" - முன்னாள் அமைச்சர் செம்மலை

``ஆலைகள் இருந்தால் கழிவுகள் வரத்தான் செய்யும்!" - முன்னாள் அமைச்சர் செம்மலை
``ஆலைகள் இருந்தால் கழிவுகள் வரத்தான் செய்யும்!" - முன்னாள் அமைச்சர் செம்மலை

``ஆலைகள் என்று இருந்தால், கழிவுகள் வரத்தான் செய்யும். ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக அதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று நிருபர்கள் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டியளித்ததுள்ளார்.

கரூர் மாவட்டத்துக்கு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்குழுத் தலைவர் சட்டப்பேரவை உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஈஸ்வரன், சண்முகம், பாண்டியன், சக்திவேல் ஆகிய 5 பேரும், தி.மு.க கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் கோவி.செழியன், பிச்சாண்டி, மஸ்தான் ஆகிய 3 பேர்கள் என 8 எம்.எல்.ஏ-க்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதலில், கரூர் காகிதபுரம் டி.என்.பி.எல் ஆலையில் அதிகாரிகளுடன் ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பத்திரிகையாளர்களும் ஆய்வுக்குழுவுடன் ஆலைக்குள் செல்ல முயல, பாய்ந்து வந்த காகித ஆலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். 'உங்களுக்கு உள்ளே செல்ல அனுமதில்லை. ஆய்வு முடிந்ததும், ஆய்வுக்குழுத் தலைவர் வெளியே வந்து உங்களிடம் பேட்டி தருவார்' என்று உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அங்கே வந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கொதித்துப் போனார்கள். ``ஆலையிலிருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் பதினைந்து வருடங்களுக்கு மேலாக பாசன வாய்க்கால்களில் திறந்துவிட்டு, 50,000 ஏக்கர் நிலங்களில் நடந்த விவசாயத்தை அழித்து, தரிசாக்கிவிட்டார்கள். ஆலைக்குள் அனுமதியின்றி பல ராட்சத போர்வெல்களைப் போட்டு தண்ணீரை இழுத்து, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீரை அதலபாதாளத்துக்கு அனுப்பிவிட்டார்கள். கேஸ் போட்டும், அவர்கள் பண்ணும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்தமுடியவில்லை. எங்களை ஆலைக்குள்ளும் அனுமதிப்பதில்லை. இந்த ஆய்வுக்குழுவின் ஆய்வைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர்களாகிய உங்களையாவது உள்ளே அனுப்புவார்கள். உள்ளே நடக்கும் கொடுமையை நீங்களாவது வெளிப்படுத்துவீர்கள் என்று நினைத்தோம் அதுவும் முடியாம போச்சே" என்று தலையில் கைவைத்துக் கொண்டனர்.

 ஒருவழியாக ஆய்வை முடித்துக்கொண்டு வெளியே வந்த ஆய்வுக் குழுத் தலைவரான முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கரூர் டி.என்.பி.எல் ஆலையில் தயாரிக்கப்படும் காகிதம் சர்வதேச அளவில் சிறந்து விளங்கி வருகிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள்கூட, நமது டி.என்.பி.எல் ஆலையில் தயாரிக்கப்படும் காகிதத்தை வாங்கி வருவது நமது நிறுவனத்துக்குப் பெருமை. நவீன இயந்திரங்கள் பயன்பாட்டோடு டி.என்.பி.எல் ஆலை சர்வதேச தரத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆலையில் நீண்ட நாள்களாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், அரசு நிதிநிலையைப் பொறுத்து விரைவில் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணியாளராக்கப்பட அரசுக்கு இந்த ஆய்வுக்குழு பரிந்துரை செய்யும்" என்றார்.
 

அப்போது நிருபர்கள் அவரிடம், ``காகித ஆலையிலிருந்து வெளியேறும் கழிவால், விவசாய நிலங்கள் சுமார் 50,000 ஏக்கர் பாதிப்படைவதாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதற்குத் தீர்வு உண்டா" என கேள்வி எழுப்பியதற்கு, ``ஆலை என்று இருந்தால் கழிவுகள் வரத்தான் செய்யும். ஆனால், அதனால் பாதிப்பு ஏற்படாத வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள குழு பரிந்துரை செய்யும்" என்று சொல்ல, அது நிருபர்களை முணுமுணுக்க வைத்தது. இதைக்கேட்ட விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் கொதித்துப் போயினர். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத சட்டமன்ற ஆய்வுக்குழுவினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் சிசிச்சையின் தரம், புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரியின் கட்டடப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அதன்பின், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை ஊழியர்களுடனான அனைத்துத்துறை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினர்.