Published:Updated:

கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம்; ரத்த தானம் செய்த வாலிபர் தற்கொலை முயற்சி!

கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம்; ரத்த தானம் செய்த வாலிபர் தற்கொலை முயற்சி!
கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம்; ரத்த தானம் செய்த வாலிபர் தற்கொலை முயற்சி!

சிவகாசி கர்ப்பிணிப் பெண்ணுக்கு தானம்செய்த ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று இருந்த விவகாரத்தில் தொடர்புடைய வாலிபர், தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த பெண், டிரைவர் ஒருவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். ஒரு குழந்தை உள்ள நிலையில், அந்தப் பெண் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சாத்தூர் மருத்துவமனைக்குச் சென்ற இவருக்கு, ரத்த அணுக்கள் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை சாத்தூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இப்பெண்ணுக்கு செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி இந்த ரத்தத்தை தானம் கொடுத்தவர் வெளிநாடு செல்வதற்காக ரத்தப் பரிசோதனை செய்தபோது, அதில் ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஏற்கெனவே தான் ரத்த தானம் செய்த சிவகாசி ரத்த வங்கிக்குச் சென்று, தனது ரத்தம் யாருக்குச் செலுத்தப்பட்டது என்பது குறித்து விசாரித்ததுடன், தனது ரத்தத்தில் ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ள விவரத்தையும் கூறியுள்ளார். அப்போது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அந்த கர்ப்பிணிப் பெண்ணின் ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.  அதில், அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிவகாசி ரத்த வங்கியின் தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தை தானம் செய்த அந்த வாலிபர், இரண்டு தினங்களுக்கு முன் தனது சொந்த ஊரான கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரத்திற்கு வந்துள்ளார். தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று அந்த வாலிபர்  தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதை அறிந்த அவரது உறவினர்கள், அந்த வாலிபரை கமுதி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த வாலிபர் தற்போது மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.