Published:Updated:

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் - 601 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு!

'தூத்துக்குடியில்  இயங்கும் விமானநிலைய விரிவாக்கத்திற்காக விமான நிலைய ஆணையம் கேட்ட  601 ஏக்கர் நிலம்,  விமானநிலைய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது' என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி தெரிவித்துள்ளார்.

 தூத்துக்குடி மாவட்டம்,  வாகைக்குளத்தில் இயங்கிவரும் விமான நிலையம், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் இயங்கிவருகிறது. இந்த விமானநிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றும் விதமாக, அதன் விரிவாக்கத்திற்காக 601 ஏக்கர் நிலம் மாநில அரசிடம் கேட்கப்பட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  கடைசித் தவணையாக  190 ஏக்கர் நிலம் தூத்துக்குடி  விமானநிலையத்தின் இயக்குநரிடம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி, “தூத்துக்குடியில் இயங்கிவரும் விமான நிலையத்தை பன்னாட்டு தரத்தில் உயர்த்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவ்வகையில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக 601 ஏக்கர் நிலம் தேவை என கேட்கப்பட்டது. அதற்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவந்தது.  ஏற்கெனவே,  410 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. கடைசித் தவணையாக 190 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.  இதன்மூலம், விமான நிலைய ஆணையம் தரப்பில் கேட்கப்பட்ட 601 ஏக்கர் நிலம் முழுமையாக ஒப்படைக்கபட்டுவிட்டது.

இதையடுத்து, விமான நிலையத்தின் இயக்குநர் சுப்பிரமணியன் பேசுகையில், “தூத்துக்குடி விமான நிலையம், பன்னாட்டு அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தற்போது, தினமும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு  5 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானநிலையதின் ஓடு பாதை, 1350 மீட்டர் நீளம் மற்றும் 30 மீட்டர் அகலத்துடன் உள்ளது. இந்தப் பரப்பில் சிறிய விமானம் மட்டுமே நிறுத்திவைக்க முடிகிறது. எனவே, பெரிய விமானங்கள் நிறுத்திவைக்கும் வகையில் கூடுதலாக, 315 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் ஓடுபாதையை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, இரண்டு விமானம் மட்டுமே நிறுத்திவைக்கப்படும் நிலையில், 5 விமானம் நிறுத்திவைக்கும் வகையில் விமானங்கள் நிறுத்துமிடத்தை நீட்டிக்கவும், பழுதான விமானங்களை நிறுத்திவைக்க தனித் தளமும் அமைக்கப்பட உள்ளது. இங்கிருந்து புறப்படும் விமானத்திற்காக, 300 பயணிகள் காத்திருக்கும் வகையிலும், தரை இறங்கும் விமானத்தின் 300 பயணிகள் என ஒரே நேரத்தில் 600 பயணிகள் அமரும் வகையில், காத்திருப்போர் அரங்கு கட்டப்பட உள்ளது. இதில் கழிவறை, சிற்றுண்டியகமும் அடங்கும்.

இதுதவிர, விமான நிலையத்தைச் சுற்றிலும் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடைவெளிப் பகுதியில் உள்ள மின் கோபுரம், தொலைபேசி சிக்னல் கோபுரம் ஆகியவை அகற்றப்படும். இத்துடன், வல்லநாடு மலையடிவாரத்தில் சிக்னல் கோபுரமும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கூடுதலாக 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்தித் தந்திட, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். இப்பணிகள்  ரூ.500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது" என்றார்.