Published:Updated:

`கானகத்துக்குள் கரூர்’, `எண்ணெய் பிழியும் எந்திர மையம்’ -அசத்தும் கரூர் வேளாண்மைத்துறை!

`கானகத்துக்குள் கரூர்’, `எண்ணெய் பிழியும் எந்திர மையம்’ -அசத்தும் கரூர் வேளாண்மைத்துறை!
`கானகத்துக்குள் கரூர்’, `எண்ணெய் பிழியும் எந்திர மையம்’ -அசத்தும் கரூர் வேளாண்மைத்துறை!

கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் `கானகத்துக்குள் கரூர்' என்ற மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தையும் எண்ணெய் பிழியும் எந்திரங்கள் கொண்ட மையத்தையும் செயல்படுத்தி அசத்தி இருக்கிறது வேளாண்மைத்துறை.

கரூர் மாவட்டத்தில் அதிகம் மரங்கள் இல்லாததால், மழை குறைந்து வறட்சி மிகுந்த மாவட்டமாக உள்ளது. அதோடு, மானாவாரி நிலங்களை அதிகம் கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. இங்கே மானாவாரியாக எள், கடலை, ஆமணக்கு என்று எண்ணெய் வித்துகள் கொண்ட பயிர்களை அதிகம் பயிர் செய்கிறார்கள். இப்படி அந்த விவசாயிகளுக்கு மழையை அதிகப்படுத்தி சிறப்பான வெள்ளாமைக்கு வழி வகுக்கவும், அவர்கள் விளைவிக்கும் எண்ணெய் வித்துள்ள பயிர்களை எண்ணெயாகப் பிழிந்தெடுக்கவும் சிறப்பான திட்டங்களைக் கரூர் வேளாண்மைத்துறை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் எண்ணெய் பிழியும் எந்திர மையம் அமைத்தது.

கரூர் மாவட்ட வேளாண்மைத்துறையின் சார்பில் ரூ.10 லட்சம் அரசு மானியத்துடன் சேர்த்து ரூ.13.91 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் பிழியும் மையத்தைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஈசநத்தம் பகுதியில் இந்த எண்ணெய் பிழிந்தெடுக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 
 

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் பேசுகையில், ``வேளாண்மைத்துறையின் நீடித்த நிலையான மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி உழவர் உற்பத்தியாளர் குழுவின் மூலம் ரூ.3.91 லட்சம் வழங்கப்பட்டு, அதனோடு அரசு மானியமாக ரூ.10 லட்சம் பெறப்பட்டு, மொத்தம் ரூ.13.91 லட்சம் மதிப்பீட்டில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், எண்ணெய் பிழியும் எந்திரம், எண்ணெய் வடிகட்டும் எந்திரம் மற்றும் எண்ணெய் நிரப்பும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சுத்தமான, சுகாதாரமான முறையில் இங்கு கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய் பிழிந்து தரப்படவுள்ளது. எனவே, விவசாயிகளும் பொதுமக்களும் இந்த மையத்தை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல, கரூர் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. `கானகத்துக்குள் கரூர்' என்ற அடிப்படையில் அதிக அளவில் ஆலம், அரசு, பனை மற்றும் நாட்டு மரங்களை நடவு செய்ய இந்தத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் பொதுமக்களும் அதிக அளவில் மரக்கன்றுகளை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும்" என்றார். தங்களுக்குப் பயன்படும் இந்தத் திட்டங்களால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.