Published:Updated:

`விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மோடிக்கு வாக்களிக்கமாட்டோம்’ - பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்!

`விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மோடிக்கு வாக்களிக்கமாட்டோம்’ - பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்!
`விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மோடிக்கு வாக்களிக்கமாட்டோம்’ - பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்!

`மேக்கே தாட்டூவில் சட்டத்துக்குப் புறம்பாக அணை கட்ட அனுமதி கொடுக்கிறோம்' என தெரிந்தே மத்திய அரசு செய்கிறது. இதனால், தமிழகம் போராட்டக் களமாக மாறி வருகிறது" என்று விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

"

கர்நாடக மாநிலம் மேக்கே தாட்டூவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது. இதற்கு, மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. இதனால், காவிரி நதியை நம்பி வாழும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பல்வேறு விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களிலும், ரயிலிலும் இன்று ஓசூர் சென்று, அங்கிருந்து மேக்கே தாட்டூ அணை கட்டும் இடத்தில் முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இந்தக் குழு கரூர் மாவட்டம், மேட்டுமகாதானபுரம் அருகே வந்தபோது, காவிரி நதிநீர் பாசன விவசாயிகள் நலச் சங்க தலைவர் ராஜாராம் அவர்களுக்கு வரவேற்பு அளித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், "மேக்கே தாட்டூவில் அணை கட்டுவது சட்டத்துக்குப் புறம்பானது என தெரிந்திருந்தும், மத்திய அரசு அணை கட்ட அனுமதி அளித்துள்ளது.

இதனால், தமிழக விவசாயிகள் அச்சத்திலும், கோபத்திலும் உள்ளனர். எங்களுக்கு வாழ்வதற்கே நம்பிக்கை இல்லாத ஒரு நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. கர்நாடக முதல்வர் குமாரசாமி மேக்கே தாட்டூவில் அணையைக் கட்டி, தமிழகத்தை அழிக்கப் பார்க்கிறார். ஆனால், காவிரி நீர்  கடலில் கலக்கிறது, எனவே, அந்த நீரை தடுப்பதற்காக அணை கட்டுவதாக பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது உண்மைக்குப் புறம்பானது. ஒருவேளை உண்மையாக இருக்குமேயானால், கிருஷ்ணகிரி மாவட்டம், ராசிமணல் பகுதியில் இந்த அணையை கட்ட வேண்டும். தமிழக அரசு கட்டும் இந்த அணைக்கு கர்நாடக அரசு ஒத்துழைக்க வேண்டும். அதே சமயம், மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்க வேண்டும். கர்நாடகாவில் காவிரிப் பாசனப் பகுதிகளில் உள்ள 15 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றதற்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இந்த அணையைக் கட்ட வேண்டுமென அடம் பிடிக்கிறார்.

அதேசமயம், அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களை காவல்துறையை வைத்து அடக்கிவிட்டு, அணையை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, கர்நாடகா பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து மேக்கே தாட்டூ பகுதியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருக்கிறோம், தமிழக அரசு ராசிமணல் பகுதியில் அணை கட்டும் பணியைத் தொடங்க வேண்டும். நாளை காலை 10 மணிக்கு ஓசூர் பகுதியில் இருந்து மேக்கே தாட்டூ நோக்கி சென்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணற்ற விவசாயிகள் கலந்துகொள்கிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை மட்டுமல்ல, அவர்களைச் சந்திக்கவே மறுத்து வருகிறார் பிரதமர் மோடி. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்யமாட்டேன் எனக் கூறுவதோடு, அவர்களை `தற்கொலை செய்துகொள்ளுங்கள்' என சொல்லாமல் சொல்கிறார். எனவே, வரும் தேர்தலில் மோடிக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம். எங்களது போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது" என்றார் ஆக்ரோஷமாக!