Published:Updated:

`நான் வளர ஆசிரியர்தான் காரணம்’ - கரூர் அருகே விருந்து வைத்து அசத்திய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர்!

`நான் வளர ஆசிரியர்தான் காரணம்’ - கரூர் அருகே விருந்து வைத்து அசத்திய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர்!
`நான் வளர ஆசிரியர்தான் காரணம்’ - கரூர் அருகே விருந்து வைத்து அசத்திய ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர்!

தனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும், தனது பகுதியைச் சேர்ந்த நேர்மையான ஓய்வுபெற்ற ஐ.ஜியையும் அழைத்து வித்தியாசமான தனது விவசாயத் தோட்டத்தில் பாராட்டு விழா நடத்தி அவர்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் ஒருவர்.

கரூர்  கே.வி.பி நகரில் வசிப்பவர் ஓய்வுபெற்ற காவல்துறை ஆய்வாளர் மனோகரன். இவருக்கு க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள வேட்டையார்பாளையத்தில் ஜெய்கவின் இயற்கை வேளாண் பண்ணை என்ற பெயரில் ஆறு ஏக்கரில் தோட்டம் உள்ளது. அந்தப் பகுதி முழுவதும் பாலைவனம் போல் காட்சியளிக்க, இவரது பண்ணை மட்டும் பச்சை பசேல் என பசுமை போர்த்தியுள்ளது.

நம்மாழ்வார் மீதுள்ள ஈடுபாட்டால், கடந்த பதினைந்து வருடங்களாகவே இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இந்த பண்ணையில்தான் தனக்கு மேல்நிலை வகுப்பில் பாடம் எடுத்த 10 முன்னாள் ஆசிரியர்களையும், தனது பகுதியை ஒட்டியுள்ள தர்மகோடங்கிப்பட்டியைச் சேர்ந்த சமீபத்தில் மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்து ஓய்வுபெற்ற பாரியையும் அழைத்து பாராட்டி, அவர்களை நெகிழ வைத்திருக்கிறார் மனோகரன். இவர் அருகில் உள்ள சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1972-73 ம் வருடம் 11 ம் வகுப்பு படித்துள்ளார். 


 

அப்போது தன்னோடு படித்த மாணவர்களை அழைத்துதான் தனது பண்ணையில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த நினைத்திருக்கிறார். ஆனால், திடீரென தனக்கு பாடம் எடுத்த முன்னாள் ஆசிரியர்கள் 10 பேரையும், நேர்மையாகவும், துடிப்பாகவும் செயல்பட்டு ஓய்வுபெற்ற பாரியையும் அழைத்துப் பாராட்டும் நிகழ்ச்சியாக மாற்றி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கரூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சூர்யபிரகாஷ், கோவை வேளாண் பல்கலைக்கழக ஆர்கானிக் துறை துறைத்தலைவர் முனைவர் சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அதோடு, தனது நண்பர்கள் 25 பேர், கிராம மக்கள் என்று 100 பேர்களை விழாவில் திரட்டினார். 10 முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஜி பாரி ஆகியோர்களுக்கு சால்வை போர்த்தி, சந்தனமாலை போட்டு கௌரவித்ததோடு, நினைவுப் பரிசையும் வழங்கி சிறப்பித்தார். அதோடு, சைவம், அசைவம் என்று அறுசுவை விருந்தையும் அவர்களுக்கு

வழங்கி, ஓடி ஓடி பரிமாறினார். தங்களது முன்னாள் மாணவர் தங்களை இப்படி மரியாதை செய்வதைப் பார்த்து உண்மையில் 10 முன்னாள் ஆசிரியர்களும் நெக்குருகிப் போயினர். பாரியும், இயற்கை விவசாயம் மீதான மனோகரனின் ஆர்வத்தையும், தனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மீதான அவரது குருகாணிக்கையும் பற்றி மெச்சிப் பேசினார். அதோடு, மனோகரனின் பண்ணையிலிருந்த உயிர்வேலியின் பயன்கள், நெல்லி, கொய்யா, மாங்காய் உள்ளிட்டவற்றின் சத்துகள் குறித்தும் சிறப்பாகப் பேசினார். பாரி, டி.ஆர்.ஓ மற்றும் 10 ஆசிரியர்களையும் தனது பண்ணையில் மரக்கன்று நட வைத்தார்.


 

இதுகுறித்து, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான மனோகரனிடம் பேசினோம். ``நான் இந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்ததற்கு காரணம் ஆசிரியர்கள்தான். விவசாயத்தில் இன்னைக்கு இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் நம்மாழ்வார்தான். அதேபோல், என் பண்ணைக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த பாரி காவல்துறையில் உயர்பதவியில் இருந்தும் கண்ணியமாகவும்,நேர்மையாகவும் செயல்பட்டது பாராட்ட வேண்டிய விஷயம். அதனால், அவர்களை அழைத்துப் பாராட்ட நினைத்தேன். உண்மையில் அவர்கள் என் தோட்டத்துக்கு வந்து, என்னைதான் நெகிழ வைத்துவிட்டனர்" என்றார்.