Published:Updated:

அரைக் கிலோ கஞ்சாவால் கைது! காவல்நிலையத்தில் உயிரிழந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர்!

அரைக் கிலோ கஞ்சாவால் கைது! காவல்நிலையத்தில் உயிரிழந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர்!
அரைக் கிலோ கஞ்சாவால் கைது! காவல்நிலையத்தில் உயிரிழந்த அ.தி.மு.க கிளைச் செயலாளர்!

மதுரை அருகே விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட விசாரணைக் கைதி திடீரென உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர் கொந்தளித்தனர்.

மதுரை மாவட்ட எஸ்.பி. தலைமையிலான காவல்துறை சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்யப்பட்டு வருவதற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், கொட்டாம்பட்டி பகுதியில் அதிக அளவு கஞ்சா விநியோகம் செய்யப்படுவதாக எஸ்.பி தலைமையிலான தனிப்பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. 

நத்தம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க கிளைச் செயலாளரான சின்ன வெள்ளையனை கைது செய்து அவரிடமிருந்து அரைக் கிலோ கஞ்சா ரூ.26,000 பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் நேற்றிரவு ஒப்படைத்துவிட்டு தனிப்பிரிவு போலீஸார் வெளியேறினர். அதன் பிறகு சிறிது நேரத்தில் காவல் நிலையத்தினுள்ளே இருந்த சின்ன வெள்ளையனுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதையறிந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றபோது சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் மேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தபோது உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. விசாரணைக் கைதி காவல் நிலையம் வந்தடைந்த சிறிது நேரத்திலே உயிரிழந்ததது காவல்துறையினர் மீது  சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபர் காவல்துறையினர் தாக்கியதால் இறந்தாரா அல்லது உடல்நலக்குறைவால்  உயிரிழந்தாரா என்று பிரேதப் பரிசோதனைக்குப் பின்புதான் தெரியவரும் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவம் கொட்டாம்பட்டி மற்றும் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.