Published:Updated:

`நாட்டுக்கோழி இனத்தை அழிக்க நடக்கும் சதியே சேவல்கட்டுக்குத் தடை!’ - கொந்தளிக்கும் கரூர் நாம் தமிழர் கட்சி

`நாட்டுக்கோழி இனத்தை அழிக்க நடக்கும் சதியே சேவல்கட்டுக்குத் தடை!’ - கொந்தளிக்கும் கரூர் நாம் தமிழர் கட்சி
`நாட்டுக்கோழி இனத்தை அழிக்க நடக்கும் சதியே சேவல்கட்டுக்குத் தடை!’ - கொந்தளிக்கும் கரூர் நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு அளவில் புகழ்பெற்ற கரூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்வலசில் சேவல்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டி கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் சேவல்களுடன் மனு அளித்தனர்.

இயக்குநர் வெற்றிமாறன் எடுத்த `ஆடுகளம்' என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு சேவல்கட்டு விளையாட்டைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. பொங்கல் பண்டிகை வந்துவிட்டால், தமிழ்நாடு முழுக்க ஜல்லிக்கட்டு நடைபெறுவதுபோல் சேவல்கட்டும் நடைபெறும். ஆனால், சேவல்கட்டு மூலம் சூதாட்டம் நடத்துகிறார்கள், சண்டை வருகிறது என்று பல இடங்களில் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து வந்தனர். சில வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லூர் பிரசித்திபெற்றதைப் போல சேவல்கட்டுக்கு கரூர் மாவட்டம் பூலாம்வலசு பிரசித்தபெற்ற ஊர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள இந்த ஊரில் சேவல்கட்டு நடத்த சில வருடங்களாக கரூர் மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

கடைசியாக சில வருடங்களுக்கு முன்பு இங்கே பொங்கல் திருநாளன்று சேவல்கட்டு நடந்தபோது, சேவலின் காலில் கத்தியைக் கட்டி விளையாடியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட நிர்வாகம் சேவல்கட்டு நடத்த அனுமதி மறுத்து வந்தது. அதோடு, கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக சேவல்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆட்சித்தலைவர் அன்பழகனை சந்தித்து, `பூலாம்வலசில் சேவல்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன், ``தமிழரின் பாரம்பர்ய சேவல்கட்டு நடத்த கரூர் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடையை விலக்கி, வரும் பொங்கல் தினத்தன்று அரசு சேவல்கட்டு நிகழ்ச்சியை நடத்த முன்வர வேண்டும். இதை கோரிக்கை மனுவாக கலெக்டரிடம் அளித்துள்ளோம். அழிந்து வரும் நாட்டுக் கோழி இனத்தை அழிப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணருகிறோம். ஏற்கெனவே நடத்தப்பட்டதுபோல சேவல்கட்டு நடத்தி நாட்டுக் கோழி இனத்தைக் காப்பதற்கும், தமிழர் பண்பாட்டை வளர்ப்பதற்கும் கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதையும் மீறி அனுமதி மறுக்கப்பட்டால், தடையை மீறி சேவல் கட்டு நடத்தி தமிழரின் பாரம்பர்யத்தைக் காப்போம். இதை தமிழக அரசுக்கு எச்சரிக்கையாக விடுக்கிறோம்’’ என்றார்.