Published:Updated:

‘குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண் கர்ப்பம்’ - தனியார் மருத்துவமனை மீது புகார்

‘குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண் கர்ப்பம்’ - தனியார் மருத்துவமனை மீது புகார்
‘குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண் கர்ப்பம்’ - தனியார் மருத்துவமனை மீது புகார்

திருப்பூரில், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையைத் தவறாகச் செய்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தம்பதியர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்கள்.

‘குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெண் கர்ப்பம்’ - தனியார் மருத்துவமனை மீது புகார்

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார்கள் அந்த  தம்பதியர். கணவர் பெயின்டராகவும், மனைவி பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாகவும் பணியாற்றிவருகிறார்கள். இத்தம்பதிக்கு  இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2013 - ம் ஆண்டு திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதற்காகச் சென்றிருக்கிறார்கள். 39 வயது நிறைந்த அப்பெண்ணுக்கு, அந்த மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கு அதன்பிறகு அவ்வப்போது வயிற்று வலி தொந்தரவு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக உடல்ரீதியான பிரச்னைகள் மேலும் அதிகரிக்கவே, சந்தேகமடைந்த தம்பதியர் தனியார் ஸ்கேன் மையத்துக்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள். அதில், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மற்றொரு மருத்துவமனைக்குச் சென்று சோதித்துப் பார்த்ததிலும் அப்பெண் கர்ப்பமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் அதிர்ந்துபோன தம்பதியர், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொண்ட தனியார் மருத்துவமனைக்கு உடனடியாகச் சென்று முறையிட்டிருக்கிறார்கள். ஆனால், அந்த மருத்துவமனை நிர்வாகம் உரிய பதில் எதுவும் அளிக்காமல் தம்பதியரை புறக்கணித்துள்ளது. இதனால் வேதனையடைந்த தம்பதியர், தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது பிரச்னைகுறித்து புகார் மனு அளித்திருக்கிறார்கள். தனியார் மருத்துவமனை நிர்வாகத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகப் பெரும் மன வருத்தத்தில் தவிக்கிறார்கள் தம்பதியர்.