Published:Updated:

நகராட்சி குடிநீர் தொட்டியில் 3 நாள்களாக மிதந்த ஆண் சடலம்; அதிர்ச்சியில் உறைந்த ராமநாதபுரம்

நகராட்சி குடிநீர் தொட்டியில் 3 நாள்களாக மிதந்த ஆண் சடலம்; அதிர்ச்சியில் உறைந்த ராமநாதபுரம்
நகராட்சி குடிநீர் தொட்டியில் 3 நாள்களாக மிதந்த ஆண் சடலம்; அதிர்ச்சியில் உறைந்த ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி குடிநீர் தொட்டியில் 3 நாட்களாக அழுகிய நிலையில் ஆண் உடல் மிதந்த நிலையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. சுமார் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த குடிநீர் தொட்டியில் நாள்தோறும் காவிரி குடிநீர் ஏற்றப்பட்டு நகரின் பிரதான பகுதிகளுக்குக் குடிநீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இன்று காலை குடிநீர் திறப்பதற்காக நகராட்சி ஊழியர் அங்கு சென்றுள்ளார். அப்போது மேல் நிலை தொட்டியின் கீழ்ப் பகுதியில் ரத்த கறை காணப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகில் பிளேடும் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தொட்டியின் மேல் ஏறிப் பார்த்துள்ளார். அப்போது குடிநீர் தொட்டிக்குள் ஆண் ஒருவரின் உடல் மிதந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இதுகுறித்து பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், தீயணைப்புத் துறையினர்  உதவியுடன் தண்ணீர் தொட்டியினுள் அழுகிய நிலையில் மிதந்த உடலை மீட்டனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில், ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு பகுதியில் புத்தகக் கடை நடத்திவரும் சுதாகர் என்பவரின் உடல் அது எனத் தெரியவந்தது. கைப்பகுதியில் அறுபட்ட காயத்துடன் கிடந்த உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த சுதாகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து வீட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படும் நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை இரவே அவர் உயிர் இழந்திருக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சடலம் மிதந்த குடிநீரை நகராட்சி நிர்வாகம் கடந்த 3 நாள்களாக மக்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளது. இதனால் இந்த நீரைப் பருகிய பொதுமக்கள் தங்களுக்கு பாதிப்பு ஏதும் நேருமோ என அச்சமடைந்துள்ளனர். மேலும், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த குடிநீர் தொட்டி அமைந்துள்ள பகுதி முறையான பாதுகாப்பின்றி சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாக இருந்து வருவதாகவும், இதை நகராட்சி அதிகாரிகள் முறையாகக் கண்காணிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.