Published:Updated:

‘7 மணிநேரத் தொடர் சிலம்பாட்டம்; அசத்திய குட்டீஸ்’ - மதுரையில் புதிய உலக சாதனை முயற்சி

‘7 மணிநேரத் தொடர் சிலம்பாட்டம்; அசத்திய குட்டீஸ்’ - மதுரையில் புதிய உலக சாதனை முயற்சி
‘7 மணிநேரத் தொடர் சிலம்பாட்டம்; அசத்திய குட்டீஸ்’ - மதுரையில் புதிய உலக சாதனை முயற்சி

மதுரையில் உலக சாதனைக்காக இருவர் 7 மணிநேரம் தொடர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர். 

'தென்னிந்திய சிலம்பம் அகாடெமி'யின்மதுரை மாவட்டத்தலைவர் எம்.எஸ்.ஜவகர், திருச்சி காவல்படை ஆய்வாளர் அரவிந்த் ஆகிய இருவரும் இணைந்து மதுரைக் கல்லூரி மைதானத்தில் இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.இவர்கள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தொடர்ந்து 7 மணிநேரம் சிலம்பம் சுழற்றினர். மேலும் மதுரை, திருச்சி, சீர்காழி, தூத்துக்குடி, நாமக்கல், சேலம், சென்னை, பெங்களூரூ எனத் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் சிலம்பப் பயிற்சிபெறும் 250 மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களை மாவட்ட வாரியாகச் சுழற்சி முறையில் அனுமதித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒருமணி நேரமென மாணவர்களும் தொடர் சிலம்பாட்டத்தை நிகழ்த்தினர். நடுவர் குழு இந்தச் சாதனை முயற்சியை முழுமையாய்ப் பதிவு செய்துகொண்டது.

அரவிந்திடம் பேசினோம். "பல மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கிறோம்.என்னுடைய காவல்பணிக்குப் போக மீதமிருக்கும் நேரத்தில் சிலம்பப் பயிற்சிகள் எடுக்கிறேன்" என்றார்.

எம்.எஸ்.ஜவகர் பேசுகையில், "மக்களிடம், குறிப்பாக மாணவர்களிடம் சிலம்பம், தற்காப்புக்கலை குறித்த விழிப்பினை ஏற்படுத்துவதற்காக தான் இந்த முயற்சியில் இறங்கினோம்" என்றார்.

இந்தச் சாதனை முயற்சியின் பங்களிப்பாக ஜூனியர் சீனியர் எனப் பலர் கலந்துகொண்டனர். குழந்தைகள் சோர்வடையாமல் இருக்க, பாடல்கள் ஒலிக்கச் செய்வதும், மைக்கில் பேசி உற்சாகப்படுத்துவதுமாய் இருந்தனர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அந்தக் களம் முழுக்கவே உற்சாகமும் வேகமும் சற்றும் குறையாமலே இருந்தது. ஒவ்வொரு முறையும் 'என்ன டயர்டா?' என மைக்கில் உரக்கக் கேட்கப்படும் போதெல்லாம் 'நோ....சார்' என பாட்டுச்சத்தம் மீறி கூட்டொலி எழும்பியது.

தனக்கான சுற்றில் கால் பிசகிவிட.. ஓய்வெடுக்க அனுப்பப்பட்டச் சிறுவனிடம், ''சூர்யா, கால்வலி ஒகேயா? அடுத்த பேட்ஜ்ல சேர்ந்து சுத்தலாமா?" என்றதும், யோசிக்காமல் "ம்ம்.. ரெடி சார்" எனத் துள்ளி எழுந்தான்.தங்கள் சுற்றினை முடித்துக் கொண்டு ஓய்வாய்க் கூடியமர்ந்து 'செல்ஃபி'க்கொண்டிருந்தவர்களுள் எல்கேஜிக்கான வயதினரிடம் பேசினோம். டாக்டர் ஆவதே ஆக்ஷயாஸ்ரீ உடைய கனவாம். குருபிரசாத், காவல்துறையில் சேரப்போகிறாராம். மோத்தீக்சன், சயின்டிஸ்ட். இந்த குட்டிச்சுட்டீஸ்கள் சென்னை யுத்த வர்ம சிலம்பப்போர்க்கலை அகாடெமியில் 'சிலம்பம்' மு.சண்முகம் மாஸ்டரிடம் பயிற்சிபெறும் மாணவர்கள். ஒன்றரைமாதப் பயிற்சியிலேயே தற்போது சாதனைக்களம் கண்டிருக்கின்றனர்.

திருவில்லிப்புத்தூர் காவியதர்ஷினிக்கு 6 வயது. சிலம்பம், பரதம் எனக் கற்கும் இவர், துடுக்காக மின்னுகிறார். சிலம்பத்தையே பரத அபிநயங்களோடு பின்னி ஆடி, அனைவரையும் மயக்குகிறார்."இப்போதான் கத்துக்கிறா. சிலம்பத்துல இவளுக்கு ரொம்ப ஆர்வம்." என்கிறார், தந்தை செல்வகுமார்.

பெங்களூரு இனியாழ். இந்தச் சாதனை நிகழ்வில் இவரது பெயர் அடிக்கடி உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. கலை மீதுள்ள பிடிப்பால், மாநிலம் கடந்து இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக் குடும்பத்துடன் வந்திருக்கிறார். அவரது பெற்றோரான கார்த்திக் - ஷர்மிளா தம்பதியர், "இவ ஸ்கூல் போகலை, பெங்களூருவில ஹோம் எஜூகேஷன் தான். ரொம்ப சுட்டி. ஓரிடத்தில உக்காந்து கத்துக்க விரும்ப மாட்டா. நாங்களும் அவ போக்கிலேயே அவளுக்கான கல்வியைத் தர முயற்சிக்கிறோம். சிலம்பம்ன்னா இவளுக்கு இஷ்டம். பறை, வெஸ்டர்ன், கிளாசிக் நடனங்கள் கத்துக்கிறா" என்று இனியாழின் காதல்களை வரிசையாய்ச் சொன்னார்கள்.நடுவர் குழுவில் ஒருவரான ஏ.ஜெட்லியிடம் பேசியதில், "வெற்றிகரமான இந்த முயற்சியை உலக சாதனைக்குப் பரிந்துரைத்து அனுப்பி வைப்போம்" என்றார்.