Published:Updated:

பண்டைய நீர் இறைக்கும் கருவிகள்... இசை, போர்க் கருவிகள்..!- கரூரில் பாரம்பர்ய கிராமியத் திருவிழா

பண்டைய நீர் இறைக்கும் கருவிகள்... இசை, போர்க் கருவிகள்..!- கரூரில் பாரம்பர்ய கிராமியத் திருவிழா
பண்டைய நீர் இறைக்கும் கருவிகள்... இசை, போர்க் கருவிகள்..!- கரூரில் பாரம்பர்ய கிராமியத் திருவிழா

கரூரில் `இது நம்ம கிராமம்' என்ற பெயரில் பாரம்பர்ய முறையில் பொங்கல் கிராமியத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் விதமாக நாட்டு மாடு வகைகள், மண்பாண்ட வகைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


 

கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில்தான் இத்தனை விஷயங்களும் அரங்கேறின. அரியவகை பொருள்களான பயன்பாடு அற்றுப்போன கடந்த ஒரு நூற்றாண்டாகப் பயன்படுத்தி வந்த தமிழர் பயன்படுத்தும் பொருள்களான மரச்சிற்பங்கள், 40 வகையான இசைக் கருவிகள், அரியவகை புகைப்படங்கள், பயன்பாடற்றுப் போன நீர் இறைக்கும் கருவிகள், போர்க்கருவிகள், வானொலி வகைகள், தொலைபேசி வகைகள், அஞ்சறைப்பெட்டி, முதுமக்கள் தாழி, விவசாயக் கருவிகள் ஆகியவை செயல்முறை விளக்கங்களோடு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தொடர்ந்து பசுமை பாரம்பர்ய உணவு வகைகள், இயற்கை உணவு வகைகளான கம்பு, கேழ்வரகு, திணை, கொள்ளு, சோளம், வல்லாரைச் சாறு, தூதுவளைச் சாறு, முருங்கைச்சாறு போன்ற அரிய வகை உணவுப் பொருள்களும் இந்த கிராமியத் திருவிழாவில் வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நல்லசிவம், கவிஞரும், எழுத்தாளருமான சசிக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாகப் பாரம்பர்ய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் ஆலோசகர் பழனியப்பன், ``பாரம்பர்யத்தை மீட்டெடுப்பதற்காக இதுபோன்ற கிராமியத் திருவிழா எங்க பள்ளியின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, பொதுமக்கள் பலரும் ஆர்வமாகக் கலந்து கொண்டு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரிய வகை பொருள்களை பார்வையிட்டனர். இப்போது உள்ள பெரியவர்களுக்கே நமது பாரம்பர்யப் பொருள்களும், உணவு வகைகளும், தொன்மையான கலைகளும் மறந்து போய்விட்டன. மாணவர்களுக்கும், இப்போதைய தலைமுறைக்கும் அதுபற்றிக் கொஞ்சமும் தெரியாத நிலையே உள்ளது. அதனால், உலகமே வியக்கத்தக்க பல பாரம்பர்ய விஷயங்களை கொண்டது நமது தமிழ்ச் சமூகம் என்பதையும், அவற்றை மீட்டெடுக்க மாணவர்களை தயார்படுத்தவும் இத்தகைய கிராமியத் திருவிழாக்கள் அவசியம்" எனத் தெரிவித்தார்.