Published:Updated:

`சேவல் சண்டையை அனுமதிக்கணும்!’ - 30 கி.மீ மாரத்தான் ஓடிய பூலாம்வலசு இளைஞர்

`சேவல் சண்டையை அனுமதிக்கணும்!’ - 30 கி.மீ மாரத்தான் ஓடிய பூலாம்வலசு இளைஞர்
`சேவல் சண்டையை அனுமதிக்கணும்!’ - 30 கி.மீ மாரத்தான் ஓடிய பூலாம்வலசு இளைஞர்

கரூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற பூலாம்வலசு கிராமத்தில் சேவல் கட்டு என்கிற சேவல் சண்டை நடத்த அனுமதிக்க வேண்டி இளைஞர் ஒருவர் பூலாம்வலசில் இருந்து கரூருக்கு 30 கிலோ மீட்டர் தூரம் தனி ஒருவராக மாரத்தான் ஓடி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ்கள், மாட்டு வண்டி பந்தயங்கள் எவ்வளவு பிரசித்திபெற்றதோ, அதேபோல் சேவல் சண்டையும் பிரசித்திபெற்றதாகக் கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் எப்படி அலங்காநல்லூர் சிறப்போ, அப்படிதான் சேவல் சண்டைக்கு தமிழக அளவில் கரூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்வலசு சிறப்பு பெற்றதாக விளங்கியது. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு இங்கு சேவல் சண்டையின்போது ஒரு சேவலில் கத்தி வைத்து கட்டி மோதவிட்ட சம்பவத்தில் எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தால் இங்கு சேவல் சண்டை அனுமதி மறுத்தது. கடந்த மூன்று வருடங்களாகப் பூலாம்வலசு கிராமத்தினரை சேவல் சண்டை நடத்தவிடாமல், கரூர் மாவட்டக் காவல்துறை ஏக கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக மக்கள் புலம்பி வந்தனர்.

`இந்த வருடம் பொங்கலையொட்டி சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும்' என்று நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் அனுமதி தரவில்லை. இதனால், கொதித்துப்போன சமூக ஆர்வலர்கள் பலர், கரூர் பேருந்து நிலையம் முன்பு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் பாரம்பர்ய சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு அமைதி வழியில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கோரி மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சேவல் சண்டைக்கு புகழ்பெற்ற கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பக்கம் உள்ள பூலாம்வலசு பகுதியிலிருந்து கரூர் பேருந்து நிலையம் வரை 30 கிலோ மீட்டர் தொலைவை ராஜ்மோகன் என்ற இளைஞர் தனி ஒருவராக சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் மூலம் கரூரில் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தார்.

இதுகுறித்து, ராஜ்மோகன் கூறுகையில், ``கடந்த முறை ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது, இதேபோல ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி நெடுந்தூர ஓட்டத்தின் மூலம் வலியுறுத்தினேன். அதேபோல, நாட்டுக் கோழி இனத்தைப் பாதுகாக்க சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மாரத்தான் ஓட்டத்தில் கரூர் வந்தடைந்தேன். ஜல்லிக்கட்டுக்காகத் தமிழர்கள் அனைவரும் திரண்டதைப்போல, இந்த சேவல் சண்டைக்காகவும் திரளணும். நாட்டுக்கோழி இனத்தை அழிக்கவே இந்த அரசு சேவல் சண்டைக்கு அனுமதி தர மறுக்கிறது. சேவல் சண்டை நடத்த அனுமதி தரலன்னா, அதற்காக சென்னை வரை மாரத்தான் ஓடுவேன்’’ என்றார் அதிரடியாக!