Published:Updated:

56 மாட்டுவண்டிகள்... 112 மாடுகள்... தூத்துக்குடி சாலையில் சீறிப்பாய்ந்த காளைகள்!

56 மாட்டுவண்டிகள்... 112 மாடுகள்... தூத்துக்குடி சாலையில் சீறிப்பாய்ந்த காளைகள்!
56 மாட்டுவண்டிகள்... 112 மாடுகள்... தூத்துக்குடி சாலையில் சீறிப்பாய்ந்த காளைகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில், 56 மாட்டு வண்டிகளும் 112 காளை மாடுகளும் கலந்துகொண்டன.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயம் சிறப்பு பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும் மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் இன்று நடைபெற்றது. சில நாள்களுக்கு முன்பாகவே தங்கள் மாடுகளுக்கு சத்தான உணவுகள் கொடுத்து தயார் செய்துவந்தனர். பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.

இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பெரியமாட்டுவண்டி பிரிவில் 12 மாட்டுவண்டிகளும், சிறிய மாட்டுவண்டிப் பிரிவில் 18 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பிரிவில் 26 வண்டிகள் என மொத்தம் 56 மாட்டு வண்டிகளும், 112 காளைகளும் போட்டியில் கலந்துகொண்டன. செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டிக்கு 14 கி.மீ தூரமும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிக்கு 8 கி.மீ தூரமும் போட்டிக்கான எல்லையாக அறிவிக்கப்பட்டது. பந்தயம் தொடங்குவதற்கு முன்னர், விவசாயிகள் தங்கள் காளைகளை வண்டியில் பூட்டி, கற்பூர ஆரத்தி காட்டி தயார்  நிலையில் நிறுத்திவைத்திருந்தனர்.  காளைகளும் 'நாங்கள் போடிக்குத் தயார்' என்பது போல கழுத்தை ஆட்டி மணிகளை ஒலிக்கச்செய்தன.  

முதலில் பெரிய மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறிய மாட்டுவண்டிப் பந்தயமும், இறுதியாக பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயமும்  நடைபெற்றது. பந்தய எல்லைகளை வந்தடைந்த முதல் மூன்று மாட்டு வண்டிகளின் வீரர்கள், வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல் பரிசாக ரூ.16,019ம், இரண்டாம் பரிசாக ரூ.14,019-ம், மூன்றாம் பரிசாக ரூ.12,019ம் வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல்பரிசாக ரூ.10,019ம், இரண்டாம் பரிசாக ரூ.9,019ம், மூன்றாம் பரிசாக ரூ.8,019ம் வழங்கப்பட்டது. இதேபோல, பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல்பரிசாக ரூ.6,019ம், இரண்டாம் பரிசாக ரூ.5,019ம், மூன்றாம் பரிசாக ரூ.4,019ம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாடு வளர்ப்பவர்களிடம் பேசினோம். ''எங்க கிராமம் மாட்டுவண்டிப் பந்தயத்துக்குப் பெயர் பெற்றது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மாடுகளை உழவுப் பணிகளுக்கோ, வண்டிகட்டிச் செல்வதற்கோ ஈடுபடுத்தாமல், பந்தயத்துக்கு தயார் செய்தோம். இதற்கென, காளை மாடுகளை தினமும் அதிகாலை, கண்மாய்களில் நீச்சல் அடிக்க  வைத்தோம்.  உளுந்து, பிண்ணாக்கு, பேரீச்சம்பழம், நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை உணவாகக் கொடுத்தோம்.

 மாடுகளின் கால்கள் வலிமையாக இருக்க, ஆறவைத்த ஆட்டுக்கால் சூஃப் கொடுத்து தயார்செய்தோம். மானாவாரி விவசாயம் சூழ்ந்த இப்பகுதியில் கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்றவற்றுக்கு போதிய விளைச்சலும் இல்லை, விளைபொருளுக்கு விலையும் இல்லை. இந்த நிலையிலும், காளைகளை மாட்டுவண்டிப் பந்தயத்துக்கு தயார்படுத்தினோம். காளைகளும் களத்தில் சீறிப்பாய்ந்து ஓடின” என்றார். பந்தயத்தைக் காண சாலைகளின் இரண்டு ஓரங்களிலும் மக்கள் கைதட்டியும், இளைஞர்கள் விசில் அடித்தும் ஆரவாரம் எழுப்பியபடியே பார்த்து ரசித்தனர். பந்தயத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலுதவி ஏற்பாடுகளும், காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.