Published:Updated:

முடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம்! மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்!

முடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம்! மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்!
முடிவுக்கு வரும் 66 ஆண்டுகால போராட்டம்! மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் வழித்தட பணிகள் தொடக்கம்!

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாகத் தூத்துக்குடி செல்வதற்கு, தற்போது நான்கு வழிச்சாலை உள்ளது. இதனால், முன்பை விடப் பயண நேரம் மிகவும் குறைந்துள்ளது. ஆனால், பல கிராமங்களுக்கான பேருந்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைதூரப் பேருந்துகள், பல ஊர்களுக்குள் வருவதில்லை என்பதால், இரவாகி விட்டால் எந்தப் போக்குவரத்து வசதிகளுமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த வழித்தடத்தில், ரயில் வழித்தடம் அமைக்க வேண்டுமென்பது, 66 ஆண்டுக் கால போராட்டமாகவுள்ளது. கடந்த 1999 - 2000ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், மதுரை-  தூத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், புதூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி, மதுரை ரயில் நிலைய  சந்திப்பில் இருந்து திருப்பரங்குன்றம், பாரப்பட்டி, ஆவியூர்,  காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர்,  நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர், வாலசமுத்திரம்,  சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான் வழியாகத் தூத்துக்குடி  ரயில் நிலையம் வரை 143.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய அகல ரயில்பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் முடிந்தன.

பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட இந்தப் பணி, இப்போது துவங்கியுள்ளது. தற்போது, மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை ரயில்பாதை அமைக்கும் பணி, தனியார் மின்நிறுவனத்தின் ரூ.100 கோடி பங்களிப்பு மற்றும் மத்திய அரசின் ரூ.20 கோடி என மொத்தம் ரூ.120 கோடி  திட்ட மதிப்பீட்டில் வேகமாக நடந்து வருகிறது. இப்படி, ஒரு பகுதியில் மட்டும் ரயில் தடத்தை அமைக்காமல், முழுமையாக அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் ‘விளாத்திகுளம், குளத்தூர்,  நாகலாபுரம், புதூர்’ ஆகிய இடங்களில் ரயில்நிலையங்கள் அமைக்கப்படும் என்று  தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு அப்பகுதி மக்கள்,  விவசாயிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியிலுள்ள கிராமப்புற மானாவாரி நிலங்களில் அதிகமான அளவில் விளையும் மக்காச்சோளம், மிளகாய் வத்தல், மல்லி போன்ற விளைபொருட்களை விவசாயிகள், வணிகர்கள் வெளியூர்களுக்குக் கொண்டு சென்று  விற்பனை செய்ய, இந்த ரயில் பாதை மிகவும் வசதியாக இருக்கும். அத்துடன், மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை,  விளாத்திகுளம் வழியாகத் தூத்துக்குடிக்கு கூடுதலாக ரயில் சேவையும் எளிதில்  கிடைக்கும். இதற்கு வரும் பட்ஜெட்டில் பெருமளவு நிதி ஒதுக்க வேண்டுமென்பதே, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு.