Published:Updated:

கரூரில் 14 டன் குட்கா பறிமுதல்! - பின்னணியில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

துரை.வேம்பையன்
கரூரில் 14 டன் குட்கா பறிமுதல்! - பின்னணியில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!
கரூரில் 14 டன் குட்கா பறிமுதல்! - பின்னணியில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

கரூரில், சுமார் 74 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 14 டன், 843 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. இதற்குத் தொடர்புடையவர்களாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் என்பதால், கரூர் மாவட்டமே பரபரத்துக்கிடக்கிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் இந்த குட்கா விவகாரம் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டம், கீழாம்பூர் சுங்கச்சாவடியில் போலீஸாரால் நடத்தப்பட்ட சோதனையில், பெங்களூருவில் இருந்து கரூருக்கு வந்த கன்டெய்னர் லாரியில், 3,563 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதன்படி, அந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில், கரூர் சின்ன ஆண்டான்கோயில் எஸ்.கே.எஸ் காலனியைச் சேர்ந்த தங்கராஜ், ராயனூர் கே.கே.நகர் செல்வராஜ் ஆகியோரின் மளிகைக் கடைக்கு ஏற்றிச் செல்வதாகத் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த இரண்டு நாள்களாக கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் உத்தரவின் பெயரில், ராயனூர் மற்றும் வெள்ளக்கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த இரண்டு குடோன்களில், 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 டன் மற்றும் 843 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுசம்பந்தமாக, திருச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலசுப்பிரமணியம், கரூர் ராயனூரைச் சேர்ந்த செல்வராஜ், சின்ன ஆண்டாங்கோவில் ஏ.கே.சி காலனியைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய மூவரையும் போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும், குடோன்களை வாடகைக்கு எடுத்து மளிகைப் பொருள்களை இருப்பு வைப்பதாகக் கூறி, சட்டவிரோதமான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களைப் பதுக்கியதாக கரூரைச் சேர்ந்த கொங்கு மணி என்கிற சுப்பிரமணியை போலீஸார் முதல் குற்றவாளியாக  வழக்குப்பதிவுசெய்து தேடிவருகின்றனர்.

மேலும், குட்கா பான் மசாலா சட்டவிரோத விற்பனை தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என கரூர் தான்தோன்றிமலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள தங்கராஜும், போலீஸாரால் தேடப்படும் கொங்கு மணியும், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர்கள். சமீபத்தில் செந்தில்பாலாஜி ஸ்டாலின் முன்னிலையில் 30425 பேரோடு தி.மு.க-வில் இணைந்தபோது, இவர்கள் இருவரும் தி.மு.க-வில் இணைந்தனர். இந்நிலையில், இருவர் மீதும் குட்கா கடத்தியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பதன் பின்னணியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கைங்கர்யம் இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் சிலர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சிலர், "செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு போயிருப்பதால், அவரால் கரூர் மாவட்ட அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால், செந்தில்பாலாஜிக்கு பல்வேறு வகையில் அமைச்சர் தரப்பு நெருக்கடி கொடுத்துவருகிறது. கொங்கு மணி மற்றும் மற்ற இரண்டு பேரும், நெடுங்காலமாக இந்த குட்கா விற்பனையை கரூர் மாவட்டம் முழுக்க செய்துவருகிறார்கள். ஏற்கெனவே அ.தி.மு.க-வில் இவர்கள் இருந்தார்கள். குட்காவை கரூருக்குக் கொண்டு வர கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையைத்தான் பயன்படுத்திவந்தார்கள். போலீஸாருக்குத் தெரிந்தேதான் இது நடப்பதாகச் சொல்வார்கள்.

ஆனால், திடீர்னு இப்போ, குட்கா விசயத்தில் போலீஸார் மூக்கை நுழைத்திருப்பதன் பின்னணியில், அமைச்சர் இருப்பதாகச் சொல்கிறார்கள். செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள், தி.மு.க புள்ளிகள் குட்கா விசயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், விஷயம் பெரிதானால், அதன்மூலம் செந்தில்பாலாஜிக்கு மிகப்பெரிய நெருக்கடியைத் தந்து, அரசியலில் பின்னடைவை ஏற்படுத்த முடியும் என்கிற கணக்கில்தான் அமைச்சர் தரப்பு போலீஸாரை நடவடிக்கை எடுக்கவைக்க பணித்ததாகச் சொல்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் குட்கா ஏற்றி வந்த லாரியை மடக்கியிருந்தால், இதன் பின்னே தாங்கள் இருப்பது தெரிந்துவிடும் என்பதால், நாமக்கல் மாவட்டத்தில் லாரியை மடக்கவைத்து, அதன்பிறகு கரூர் மாவட்ட போலீஸாரை வைத்து செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்மீது அமைச்சர் தரப்பு நடவடிக்கை எடுக்கவைத்திருப்பதாக மாவட்டம் முழுக்க பேசிக்கொள்கிறார்கள்.

அதேநேரம், வெள்ளக்கவுண்டனூரில் குட்கா பதுக்கிவைக்கப்பட்டிருந்த குடோன் அ.தி.மு.க கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக இருக்கு வி.சி.கே.ஜெயராஜுக்கு சொந்தமானது. அவர், தனது குடோனை தங்கராஜுக்கு லீஸுக்கு விட்டிருக்கிறாராம். ஆனால், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளைப் பதுக்கிவைத்திருந்த குடோனின் உரிமையாளர் என்கிற முறையில் ஜெயராஜ் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அவரை விசாரிக்கக்கூட இல்லை. இதற்குக் காரணமும் அமைச்சர்தான் என்கிறார்கள்" என்றார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினால், "இது நாமக்கல், கரூர் மாவட்டங்களில் போலீஸார் நடத்திய சோதனையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. இதற்கும் அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செந்தில்பாலாஜி குட்கா, பான்மசாலா விற்பவர்களைப் பக்கத்தில் வைத்திருந்ததால், தி.மு.க-வில் நினைத்த பதவியைப் பெற முடியாது என்கிற பயத்தில், அமைச்சர் மீது பிரச்னையைத் திசைதிருப்பிவிட்டு, இதை அரசியலாக்குகிறார்" என்றார்கள்.