ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் மூடப்படுகிறது. எனவே நகரப்பேருந்து நிறுத்தத்திற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பை அரசு போக்குவரத்துக்கழக மதுரைக்கோட்டம் வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரை நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வழித்தடப் பேருந்துகளின் தற்காலிக நிறுத்தங்கள் பின்வருமாறு.
தடம் எண் 48, 48A, 48Y திருமங்கலம் மற்றும் 76, 47 காரியாபட்டி வழித்தடப்பேருந்துகளுக்கு KPS ஹோட்டல் அருகிலும், தடம் எண் 75 மேலூர், 66 திருவாதவூர் வழித்தடப் பேருந்துகளுக்குக் கோட்டை அருகே நேதாஜி ரோட்டிலும்,அலங்காநல்லூர், சோழவந்தான், தடம் எண் 71 வாடிப்பட்டி, பாலமேடு வழித்தடப்பேருந்துகளுக்கு மதுரை ரயில்வே சந்திப்பின் மேற்கு நுழைவாயில் பகுதி அமைந்துள்ள மகபூப்பாளையத்திலும், தடம் எண் 99 திருப்புவனம் வழித்தடப்பேருந்துகளுக்குக் கிரைம் பிராஞ்ச் பகுதியிலும், தடம் எண் 55 செக்கானூரணி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி வழித்தடப்பேருந்துகளுக்கு எல்லீஸ்நகர்ப் பகுதியிலும், தடம் எண் 700 எம்ஜிஆர் நிலையம், 3 அண்ணா நிலையம் வழித்தடப்பேருந்துகளுக்கு நடராஜ் தியேட்டர் அருகிலும் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் பொதுமக்கள் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பயணிகளுக்கு உதவிபுரிய அந்தந்த இடங்களில் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அலுவலர்களும், கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பேருந்து நிலையப் பணிகள் நிறைவடையும்வரை இந்த மாற்று ஏற்பாடு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.