Published:Updated:

`அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல்; மஞ்சு விரட்டு' - மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் கண்டிபட்டி மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல்; மஞ்சு விரட்டு' - மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் கண்டிபட்டி மக்கள்!
`அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல்; மஞ்சு விரட்டு' - மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் கண்டிபட்டி மக்கள்!

`அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல்; மஞ்சு விரட்டு' - மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் கண்டிபட்டி மக்கள்!

தமிழர் விழாக்கள், வீரத்தை மட்டுமில்லாது ஒற்றுமை, ஈகை, கலாசாரம் போன்ற பண்புகளைக் கட்டிக்காக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக, கண்டிபட்டி கிராம மக்கள் கொண்டாடும் மஞ்சுவிரட்டுத் திருவிழாவைக் குறிப்பிடலாம்.

மஞ்சுவிரட்டுக்குப் புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிராமம்தான் கண்டிபட்டி. இங்கு நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டிகள், சுற்றுவட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்திபெற்றது. இதைப் பார்க்க, வண்டி கட்டிக்கொண்டு காலங்காலமாக மக்கள் வந்து செல்கின்றனர். முன்பெல்லாம், மாட்டுவண்டிகளில் அணிவகுத்த திரள், இன்று டாட்டா எஸ், மினி வேன், இருசக்கர வாகனங்களுக்கு மாறிவிட்டன.

லட்சக்கணக்கான மக்கள் கூடும் திடலுக்கு, பாரம்பர்ய விளையாட்டை ரசிக்க நாமும் சென்றோம்.  யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த தோப்பு, பனைமரங்கள், தென்னை மரங்களுக்கு இடையே அமைந்திருந்தது அந்த விரிந்த பொட்டல். கண்டிபட்டி பழைய அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் வைக்கப்பட்டு, கலந்துகொள்ள வந்த மாடுகளுக்கு மரியாதைசெலுத்தும் வகையில், அங்கிருந்து வேட்டியும் துண்டும் கொண்டுவரப்படுகின்றன. 

வழக்கமாக, கிராமத்து இந்துக் கோயில்களில்தான் வழிபாடு நடைபெறும். இங்கு, புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாடுகள் தொடங்குவது ஆச்சர்யத்தையும் சமத்துவ உணர்வையும் ஏற்படுத்துகிறது. தொழுவத்தில், மாடுகளும் வீரர்கள் பெயரும் பதிவு செய்யப்படுகின்றன. வருவாய் அலுவலர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், சிறப்புப் படையினர், மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவப் பணியாளர்கள் என மாவட்ட நிர்வாகமே அணிவகுத்து நின்றன. அமைக்கப்பட்ட வாடியில், மஞ்சுவிரட்டு தொடங்குவதற்கு முன்பாகவே கட்டு மாடுகளை அவிழ்க்கத் தொடங்கிவிட்டனர்.

முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் கட்டுமாடுகளை ஆங்காங்கு அவிழ்த்துவிடும்போது, மக்கள் நெரிசலில் மாடுகள் மிரள்கின்றன. மூர்க்கமான மாடுகள் தாக்கவும்செய்கின்றன. இதனால் பார்வையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க, அரசு இன்னமும் மெனக்கெட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 91 மாடுகள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டவை. ஆனால், 300-க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடு அவிழ்ப்பில் பங்குபெற்றிருக்கக் கூடும். மொத்தம் 46 மாடுபிடி வீரர்கள். முன்னரே அவிழ்க்கப்பட்ட மாடுகளினால் காயமடைந்த 51 பேரில் 14 பேர், மேல்சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நல்லிணக்கப் பொங்கல்...

மதங்களைக் கடந்த பொங்கல் விழாகுறித்து சாத்தரசன்பட்டி பங்குத்தந்தை அருள் ஜோசப்பிடம் பேசினோம், ‘காலங்காலமாக இந்துக்களும் கிறிஸ்துவர்களும் சேர்ந்து அந்தோணியார் கோயிலில் கொடியேற்றிப் பொங்கல் வைத்த பிறகுதான் மஞ்சுவிரட்டு தொடங்கும். இதுவரைக்கும் இதில் எந்தப் பிரச்னையும் நடந்ததில்லை. தை 4-ம் நாள் திருப்பலி, சப்பர விழாவிற்குப் பிறகு, தை 5-ம் நாள் பொங்கல் வைப்போம். மஞ்சுவிரட்டுக்கு வருகிறவர்களுக்கு, கிராம மக்கள் கூப்பிட்டு விருந்து கொடுப்பார்கள். இதில் சாதி, மதம்ங்கிறதெல்லாம் பார்க்கிறதில்லை’ என்றார்.

சைவ விருந்து

மஞ்சுவிரட்டு காண வருகிற மக்களை அங்கிருக்கும் கிராமத்து மக்கள் சாப்பிடாமல் செல்ல அனுமதிப்பதில்லை. யாருனே தெரியாதவர்களா இருந்தாலும், ஒரு வாய் சாப்பிட்டுதான் போகணும் என அன்புக் கட்டளையிட்டு, வீட்டுக்கு அழைத்துப் பரிமாறியது நெகிழ வைத்தது. முன்பு அசைவ விருந்தாக இருந்து, ஒருகட்டத்தில் சைவ விருந்தாகச் சுருங்கியது. 

மனசையும் வயிறையும் நிறைச்ச அந்த ஊர் பெண்மணி வாசி சந்திரனிடம் பேசினோம், ‘நான் பிறந்தது பக்கத்துல உள்ள சின்ன ஊரு. சின்னப் பிள்ளையிலிருந்து இந்த ஊருக்கு மஞ்சுவிரட்டு பாக்க வருவோம். இந்த ஊருக்கு வாக்கப்படத்துல இருந்து இங்க வர்றவங்களுக்கு சமைச்சுப் போடுறேன். இதே ஊருல இருந்தாலும், இப்பலாம் மஞ்சுவிரட்டு பார்க்கப் போக முடியல. இருந்தாலும், வரவங்களுக்கு சமைச்சுப் போடுறதுல கிடைக்கிற சந்தோஷமே போதுமப்பா’ என்றார். இந்தப் பக்கமா போனா, கண்டிப்பா வீட்டுக்கு வந்துட்டுதான் போகணும் என்ற அவரின் பாசாங்கற்ற உபசரிப்பில்  மகிழ்ந்து திரும்பினோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு