Published:Updated:

`நீங்களே ஓரமா போட்டுக்கோங்க!’ - விளைச்சலில் கல்லைப்போடும் பொதுப்பணித்துறை

`நீங்களே ஓரமா போட்டுக்கோங்க!’ - விளைச்சலில் கல்லைப்போடும் பொதுப்பணித்துறை
`நீங்களே ஓரமா போட்டுக்கோங்க!’ - விளைச்சலில் கல்லைப்போடும் பொதுப்பணித்துறை

வாடிப்பட்டி சித்தாலங்குடி மயானக்கோட்டைக்குச் செல்லும் சாலையில், ரோடு போடுவதற்காகச் சில நாள்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லிக் கற்களைக் கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர் பொதுப்பணித் துறையினர். இன்னும் அவை அப்படியே கிடக்கின்றன. இதனால், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை இந்தப் பாதையில் கொண்டுசெல்ல முடியாமல் அறுவடைப்பணிகள் பாதித்துள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். 

இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டதற்கு, `நீங்களே வண்டி வச்சு அள்ளி ஓரமாப் போட்டுக்கங்க' என மெத்தனமாகப் பதிலளிப்பதாய் வேதனையோடு சொல்கின்றனர் விவசாயிகள். இதுகுறித்து விவசாயி பா.தங்கப்பாண்டி கூறுகையில்,``5 வருஷமா விவசாயத்தை விட்டிருந்தேன். இந்த வருஷம்தான் லோன் போட்டு, கையிலிருந்த காசெல்லாம் செலவு பண்ணி வெளச்சல் எடுத்தேன். எல்லாமே வீணாப் போகுதேய்யா. கைக்கு எட்டினது வாயிக்கு எட்டாத கதையா ஆச்சுதுங்களே’’ எனத் தேம்புகிறார். 

``மாணிக்கம் எம்.எல்.ஏ-விடம் புகார் செய்தோம். உடனே கவனிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. கேட்டதற்கு, `நீங்களேகூட ஏற்பாடு செய்து கற்களைச் சமப்படுத்திவிடுங்கள். பணி முடிந்ததும் அதற்கு உண்டான பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறியதாகச் சொல்கின்றனர் விவசாயிகள். எம்.எல்.ஏ-விடம் பேசினோம். ``இப்போதுதான் இந்த விஷயம் என் கவனத்துக்கு வந்திருக்கு. உத்தரவிட்டிருக்கிறேன். நிச்சயம் நாளை சரி செய்திடுவோம்’’ என்றார். கடந்த 22-ம் தேதியே எழுத்துபூர்வப் புகாரை எம்.எல்.ஏ-வின் உதவியாளரிடம் அளித்துள்ளதாகத் தெரிவித்தனர் விவசாயிகள். உதவியாளர் தகவலைச் சேர்ப்பிக்கவில்லையா? அல்லது அறிந்தும் அறியாததுபோல் இருக்க எம்.எல்.ஏ-வுக்கு `உதவி’ புரிந்திருக்கிறாரா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இந்தப் பணிகளுக்கான கான்ட்ராக்டராக நியமிக்கப்பட்டுள்ள பஷீர்கானிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தும் பலனில்லை. மாறாக, புகாருக்குப் பிறகுதான் இன்னும் கூடுதலாய் கற்களைக் கொட்டிச் சென்றனர் என்கிறார்கள். கான்ட்ராக்டரைத் தொடர்புகொண்டோம். ``எம்.எல்.ஏ அண்ணன் சொல்லிட்டாருங்க. நாளைக்கு சரி பண்ணிடலாம்" என்று அலட்சியமாகப் பதிலளித்தார். பொறியாளர் துர்காவிடம் பேசினோம். ``ஏ.டி சென்னைக்குப் போயிருக்கிறார். நாளை வந்திருவார். வந்ததும் மீதி தூரத்தை அளந்து முடிச்சிட்டு எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம். நாளை சரி ஆயிடும்’’ என்று கட் காபி பேஸ்ட்டாகப் பதில் வந்தது. விவசாயம் மறைந்து வரும் இந்தக் காலகட்டத்திலும் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பிப் போட்ட காசைக்கூட எடுக்க முடியாமல் இருக்கும் அந்த விவசாய மக்களின் கதறல்களுக்கும் தவிப்புக் குரல்களுக்கும் நாளை எனக் காலம் தள்ளாமல் அதிகாரிகள் விரைவாகச் செவிமடுத்தால் நல்லது.