Published:Updated:

கரூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் - அதிகாரிகள் ஆய்வு!

கரூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் - அதிகாரிகள் ஆய்வு!
கரூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் மையம் - அதிகாரிகள் ஆய்வு!

கரூர் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தைத் தேர்ந்தெடுப்பது குறித்துத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் ஆய்வு நடத்தினார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியைக் கரூர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாகத் தேர்ந்தெடுப்பது குறித்தும், அதற்கான பாதுகாப்பு மற்றும் பிற வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜசேகரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்குத் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும் இடம் தேர்வுசெய்வது குறித்த ஆய்வு நடைபெற்றது.


 

இதில் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியை வாக்கு எண்ணும் மையமாக அமைக்கத் தேவையான பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாக்குப்பெட்டிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குத் தேவையான வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய வசதிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து தலைமை தேர்தல் அலுவலருக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட உள்ளது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் அனுமதி கிடைக்கப்பெற்ற உடன் வாக்கு எண்ணும் மையமாக எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு அது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1,23,254 ஆண் வாக்காளர்களும், 1,26,953 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 5 பேரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 95,542 ஆண் வாக்காளர்களும், 1,01,641 பெண் வாக்காளர்களும், கரூர் சட்டமன்றத் தொகுதியில் 1,08,262 ஆண் வாக்காளர்களும், 1,17,811 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 2 பேரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 98,123 ஆண் வாக்காளர்களும், 1,01,706 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 43 பேரும், மணப்பறை சட்டமன்றத் தொகுதியில் 1,31,666 ஆண் வாக்காளர்களும், 1,35,347 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 5 பேரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் 1,02,058 ஆண் வாக்காளர்களும், 1,01,283 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 3 பேரும் உள்ளனர்.

மொத்தம் ஆண் வாக்காளர்கள் 6,58,905 பேரும், பெண் வாக்காளர்கள் 6,58,905 பேரும், இதர வாக்காளர்கள் 58 பேரும் என 13,43,704 வாக்காளர்கள் உள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பின்னர் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான சிறப்பு முகாம்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் அடங்கிய இறுதி வாக்காளர் பட்டியல் 31.01.2019 அன்று வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.