Published:Updated:

`சாக்கில் சுற்றப்பட்டு மூலையில் கிடக்கும் மொழிப்போர் தியாகி சிலை’ - கரூரில் நிகழ்ந்த அவலம்!

`சாக்கில் சுற்றப்பட்டு மூலையில் கிடக்கும் மொழிப்போர் தியாகி சிலை’ - கரூரில் நிகழ்ந்த அவலம்!
`சாக்கில் சுற்றப்பட்டு மூலையில் கிடக்கும் மொழிப்போர் தியாகி சிலை’ - கரூரில் நிகழ்ந்த அவலம்!

இந்தி எதிர்ப்புப் போரில் தமிழுக்காகத் தன் உயிரை மாய்த்துக்கொண்ட தியாகி ஒருவரது சிலை பா.ஜ.க-வினரின் முட்டுக்கட்டையால் சாக்கில் சுற்றப்பட்டு மூலையில் கிடப்பதாகத் தமிழ் ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25 அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழுக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் விதமாக, ஆளும் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் ம.தி.மு.க உள்ளிட்ட மூன்று கட்சிகளும் மாவட்டந்தோறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்கள். ஆனால், அப்படி தமிழுக்காகத் தன் உயிரை மாய்த்துக்கொண்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பன் என்ற தியாகியின் சிலையை அமைக்கவிடாமல் பா.ஜ.க-வினரும் ஆளுங்கட்சியினரும் முட்டுக்கட்டை போட்டு வருவதாக ஊர்மக்கள் வெடிக்கிறார்கள். கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம்பாளையத்தில்தான் இந்த அவலம்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய அந்த ஊரைச் சேர்ந்த புலவர் கருப்பையா என்பவர், ``1965-ம் வருடம் மற்றும் அதற்கு முன்பிருந்தே இந்தி திணிப்புக்கு எதிராகத் திரண்ட தமிழர்களும் திராவிடக் கட்சிகளை சேர்ந்தவர்களும் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அந்தப் போராட்டத்தில், தமிழ்மொழியைக் காப்பதற்காக 56 தியாகிகள் தங்கள் இன்னுயிர்களை நீத்து, அந்தப் போராட்டத்தின் வெற்றி நெருப்புக்கு தங்களது தேக நெய்யை வார்த்தார்கள். அதில் ஒருவர்தான் ஆசிரியர் வீரப்பன். ஆசிரியர் வீரப்பனுக்குச் சொந்த ஊர் இதே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடையார்பட்டி. எங்க ஊர்ல வேலை பார்த்தார். தமிழ் மொழிக்காக 11.02.1965 அதிகாலையில் வீட்டில் இருந்தே எடுத்து வந்த 5 லிட்டர் மண்ணெண்ய்யை உடம்பில் ஊற்றிக்கொண்டு தமிழுக்காக உயிர் நீத்தார். அதில் இருந்து ஒவ்வொரு வருடமும் எங்க ஊரில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த ஆரம்பிச்சோம். எங்க ஊரைச் சேர்ந்த புலவர் மணிமாறன் 2015-ம் வருஷம், `இப்படி ஒரு வரலாற்று நாயகனைப் பற்றி காலகாலத்துக்கு நம் ஊர் சந்ததியினர் நினைத்து பார்க்கணும்’ என்றபடி,வீரப்பனுக்கு எங்க ஊர்ல ஊர் சார்பாக மணிமண்டபமும் வெண்கல சிலையும் அமைக்கணும்னு முடிவு பண்ணினோம். அதற்காக, நிதி திரட்டி அவர் உயிர்நீத்த இடத்துக்கு அருகிலேயே நாலு லட்ச ரூபாயில் மணிமண்டபம் அமைத்தோம். ஒரு லட்சத்துக்கு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து அவரது மார்பளவு வெண்கல சிலையை செய்தோம். கடவூர் காவல்துறையில் இதை அமைக்க அனுமதியும் வாங்கினோம்.


 

கடந்த 30.01.2016 அன்று மணிமண்டபத்தை திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியனையும்,வீரப்பன் சிலையை திராவிடக் கழக தலைவர் கி.வீரமணியையும் வைத்து திறக்க ஏற்பாடு செய்தோம். அவர்களும் வந்து மணிபண்டபத்தையும்,சிலையையும் திறக்க போன நேரத்தில்,இங்கிருந்த பா.ஜ.க ஆட்கள் கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் கைலாசம்,கடவூர் ஒன்றியத் தலைவர் அண்ணாவி இருவரும் காவல்துறைக்கு போன் போட்டு வரவழைச்சுட்டாங்க. `நாத்திகம் பேசுபவர்களை வைத்து மணிமண்டபத்தையோ சிலையோ திறக்க வைக்கக் கூடாது' என்று பிரச்னை பண்ணினார்கள். இதனால், போலீஸ், `அரசாங்கத்திடம் அனுமதி வாங்கிட்டு, மணிமண்டபத்தையும் சிலையையும் திறங்க'ன்னு சொல்லி தடுத்துட்டாங்க. இதனால், சும்மா பேசிட்டு மட்டும் கி.வீரமணியும் சுப.வீயும் போனாங்க. என்னன்னவோ பண்ணியும் பா.ஜ.வினரும் ஆளுங்கட்சியினரும் வீரப்பன் சிலையை அமைக்க மறுக்கிறாங்க" என்றார்.


 

'வீரப்பன் சிலை திறக்க பா.ஜ.க கட்சியினர் தடையாக இருக்கிறார்களா?' என்று பா.ஜ.க கரூர் மாவட்டத் தலைவர் முருகானந்தத்திடம் கேட்டோம். ``பா.ஜ.க மாவட்டப் பொதுச் செயலாளர் கைலாசமும் ஒன்றியத்தலைவர் அண்ணாவியும் வீரப்பன் சிலை அமைக்க நிதியெல்லாம் கொடுத்திருக்காங்க. ஆனால், நாத்திகம் பேசுபவர்களை வைத்து சிலையைத் திறக்கப் பார்த்ததும், கடுப்பாகி கூட்டத்தில் இருந்து அப்போ எழுந்து போயிருக்காங்க. மத்தபடி சிலையைத் திறக்க முட்டுக்கட்டையாகவெல்லாம் இல்லை. இப்போதும், வீரப்பனின் சிலை, மணிமண்டபத்தைத் திறக்க நாங்க எதிராக இல்லை. ஆனால், நாத்திகம் பேசுபவர்களை வைத்து வீரப்பன் சிலையைத் திறப்பதை அந்த ஊர் மக்களே விரும்பலை" என்றார்.