Published:Updated:

`ஜெயலலிதா அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றுங்கள்!’ - குறைதீர் கூட்டத்தில் பொங்கிய விவசாயிகள்

`ஜெயலலிதா அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றுங்கள்!’ - குறைதீர் கூட்டத்தில் பொங்கிய விவசாயிகள்
`ஜெயலலிதா அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றுங்கள்!’ - குறைதீர் கூட்டத்தில் பொங்கிய விவசாயிகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியபோது, ``திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 244 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் ஹைட்ரோகார்பன் எடுக்கக் கடந்த 7-ம் தேதி மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விளைநிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுத்தால் எங்களுடைய விளைநிலங்கள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்" எனக் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுவதுமாகத் தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர், விவசாயிகள் வெளிநடப்பு செய்து வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசியபோது, ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என் உயிர் உள்ளவரை விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டேன் என்று 2016 சுதந்திர தின உரையில் உறுதியுடன் கூறியிருந்தார். அவர் வழியைப் பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு திருக்காரவாசல் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்துக்கு நிரந்தர தடை விதித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

அதுமட்டுமல்ல காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்து விளை நிலங்களையும் விவசாயிகளையும் பாதுகாத்திட வேண்டும். திருக்காரவாசல் கிராமத்தில் 200 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன. இதை ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்துக்கு எடுத்துக்கொள்ள மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதை உடனடியாகத் தடுத்து நிறுத்தி நிலத்தை விவசாயிகளுக்கே உறுதியாக்கிட வேண்டும். காவிரி டெல்டா கடற்கரையோரம் ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டம் மேற்கொள்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து கடல் மீன்வளத்தைப் பாதுகாத்து, மீனவர்கள் நலனையும் பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்து கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளோம்’’ எனக் கூறினர்.