Published:Updated:

`மக்களின் குடிநீர்த் தேவைக்கே முன்னுரிமை!’ - ஸ்ரீவைகுண்டம் அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

`மக்களின் குடிநீர்த் தேவைக்கே முன்னுரிமை!’ - ஸ்ரீவைகுண்டம் அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்
`மக்களின் குடிநீர்த் தேவைக்கே முன்னுரிமை!’ - ஸ்ரீவைகுண்டம் அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கர் விவசாய நிலங்கள் தாமிரபரணி ஆற்றின் மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. குடிநீருக்கு தாமிரபரணி ஆற்றை நம்பியே இப்பகுதி மக்கள் உள்ளனர். இந்த நிலையில், சட்ட விதிமுறைகளை  காற்றில் பறக்க விட்டுவிட்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியிலிருந்து 20 எம்.ஜி.டி. திட்டத்தின் மூலமாக தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் (20 மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுப்பதற்குக்கூட எந்தவிதமான அனுமதியும் இல்லை. இந்நிலையில்தான் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் விதிமுறைகளைப் பின்பற்றாமல், இந்தத் திட்டத்தை செயல்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாகப் பசுமை தீர்ப்பாயத்தில் தி.மு.க மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்தப் பொதுநல வழக்கில் தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் கடந்த 28.11.2018 அன்று ``ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையிலிருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்கக்கூடாது, அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும்’’ என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்ககோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திர சூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கெனவே இடைக்கால உத்தரவு வழங்கிய நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. தி.மு.க சார்பில் மூத்த வழக்கறிஞர் அனிதா செனாய் ஆஜராகி வாதாடினார்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையிலிருந்து பொதுமக்களின் குடிநீர் தேவைக்குப் போகத் தண்ணீர் மீதமிருந்தால் மட்டுமே 20 எம்.ஜி.டி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட மற்ற தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும், குடிநீர் தேவைக்குமேல் தண்ணீர் இல்லாவிட்டால் எக்காரணம் கொண்டும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று நிபந்தனையுடன் கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வடிகால் வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் இதர அரசுத்துறையினர் கலந்தாலோசித்து அதன் அடிப்படையில் குடிநீருக்கு போகத் தாமிரபரணி தண்ணீர் மீதம் இருந்தால் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும். அதோடு 15 நாள்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் அணையின் தண்ணீர் இருப்பைத் தவறாமல் கண்காணித்திடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தினர், 20 எம்.ஜி.டி திட்டத்துக்கு தமிழக அரசு எங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறினர், தமிழக அரசு சார்பில் அரசுத்துறை அதிகாரிகள் இதுதொடர்பான விண்ணப்பித்தை ஏற்கெனவே மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவிட்டதாக தெரிவித்தனர், வனத்துறை அமைச்சகம் இதுதொடர்பான விண்ணப்பம் தங்களுக்கு இதுவரை வரவில்லை என்று பதில் அளித்தனர்.

இதைக்கேட்ட நீதிபதிகள், இன்னும் 3 வார காலத்துக்குள் தமிழக அரசு 20 எம்.ஜி.டி திட்டத்துக்கு அனுமதி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திட வேண்டும். இந்த விண்ணப்பத்தின் பேரில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ``ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் எடுப்பதற்குச் சட்டவிதிமுறைகளின்படி வழிமுறை இருந்தால் மட்டுமே தண்ணீர் எடுப்பதற்கான உத்தரவை 2 வார காலத்துக்குள் அளித்திட வேண்டும்'' என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க-வின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயலிடம் பேசினோம். ``பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் பலவருட காலமாக விவசாயிகள் வேதனையில் வாழ்ந்து வந்தனர். அந்த மக்களின் துயர் துடைக்கவும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், வருங்கால சந்ததியினர் இயற்கையோடு வளமாக வாழ்வதற்கும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இதற்கு நிரத்தரத் தீர்வு கிடைக்கும் வரை நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் நாங்கள் இறுதிவரை தொடர்ந்து போராடுவோம்'' என்றார்.