Published:Updated:

`5 மணி நேரம் ஆட்டோவில் அலைக்கழிப்பு; பண மோசடி!’ - ஒரேநாளில் இந்தியாவை விட்டு வெளியேறிய பெல்ஜியப் பயணி

ராம் பிரசாத்
`5 மணி நேரம் ஆட்டோவில் அலைக்கழிப்பு; பண மோசடி!’ - ஒரேநாளில் இந்தியாவை விட்டு வெளியேறிய பெல்ஜியப் பயணி
`5 மணி நேரம் ஆட்டோவில் அலைக்கழிப்பு; பண மோசடி!’ - ஒரேநாளில் இந்தியாவை விட்டு வெளியேறிய பெல்ஜியப் பயணி

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் நாட்டுப் பெண், இங்கு சிலர் கொடுத்த தொந்தரவால் ஒரே நாளில் திரும்பிச் சென்றுள்ளார். பெல்ஜியம் சென்றதும், நடந்த சம்பவம்குறித்து அந்நாட்டு தூதரகத்திடம் கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அதை காவல் துறையினருக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் நாட்டு சுற்றுலாப் பயணி எழுதிய கடிதத்தில், கடந்தஃ டிசம்பர் மாதம் 6-ம் தேதி டெல்லியில் வந்து இறங்கினேன். அங்கு ஒரு சிம் கார்டை வாங்கிவிட்டு, அங்கிருந்து புதுடெல்லி பகுதிக்குச் செல்வதற்காக ஆட்டோவில் ஏறினேன். இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளும் முன்பே அங்கு தங்குவதற்கான ஹோட்டல்களைத் தேர்வுசெய்து புக் செய்திருந்தேன். நான் தங்கவேண்டிய ஹோட்டலுக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தேன். சிம் கார்டு ஆக்டிவேட் ஆகாததால், என்னால் யாரையும் தொடர்புகொள்ள முடியாத சூழல் இருந்தது. அப்போது இருவர், நான் சென்ற ஆட்டோவை வழிமறித்து போலீஸ் அதிகாரிகள் என  ஐடி கார்டை காண்பித்தனர். 

இந்தப் பகுதியில் போராட்டம் நடைபெறுவதால், இந்த வழியாகச் செல்ல முடியாது எனக்கூறினர். நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு அவர்கள் ஒரு முகவரியைக் கொடுத்து, சுற்றுலா போலீஸாரிடம் அனுமதி வாங்கிவாருங்கள் என்றனர். நான் சென்ற ஆட்டோ, அந்த இடத்திற்குச் சென்றது. சிறிது நேரத்தில் 6 நபர்கள் சீருடையில் வந்தனர். அவர்களிடம் நடந்தவற்றைக் கூறி அனுமதிகேட்டேன். நான் தங்கவேண்டிய பகுதிக்குச் செல்ல முடியாது என்றும், உடனடியாக புதுடெல்லியை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தினர். போராட்டம் நடைபெறும் வீடியோ ஒன்றைக் காட்டி, அந்தப் பகுதியில் எடுக்கப்பட்டது; அங்கு செல்வது நல்லதல்ல என்றனர். 

அப்போது அவர்களில் ஒருவர், நீங்கள் அணிந்திருக்கும் நகைகள் தங்கமா என்று கேட்டார். உடனடியாக நகைகளைக் கழற்றிவிடுங்கள் என்றனர். அவர்கள் கூறியது எனது விரல்களை வெட்டுவதுபோல இருந்தது. நான் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு போன்செய்து கொடுத்தனர். நான் புக் செய்திருந்த அறைகளை ரத்துசெய்யப்பட்டுவிட்டதாகக் கூறினர். இதனால், செய்வதறியாமல் திகைத்து நின்றேன். அப்போது, வெளியில் காத்திருந்த ஆட்டோவுக்கு அழைத்துச்சென்றனர். இவர் மத்திய டெல்லிக்கு செல்ல வேண்டும் என ஆட்டோ ஓட்டுநரிடம் கூறினார். அவர் ஒரு டிராவல் ஏஜென்சிக்கு அழைத்துச்சென்றார். அங்கு, ஹோட்டல் புக் செய்து தருவதாகக் கூறினார்கள்.

எனக்கு அப்போதுதான் சூழல் புரிய ஆரம்பித்தது. நான் களைப்பாக இருந்தேன். ஏறக்குறைய 5 மணிநேரம் இந்த ஆட்டோ பயணத்தில் சென்றுவிட்டது. அவர்கள் காண்பித்த ஹோட்டல்கள் எனக்குப் பிடிக்கவில்லை. விலை மிகவும் அதிகமாக இருந்தது. இதையடுத்து, ஒரு காரில் வலுக்கட்டாயமாக இரண்டு பெண்களுடன் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இறுதியில், ஒரு ஹோட்டலைத் தேர்வு செய்தேன். அதற்காக, 40 டாலர்களை வழங்க ஒப்புக்கொண்டேன். அந்த கார் ஓட்டுநர் வரவேற்பு தளத்தில் இருந்த பெண்ணிடம் ஏதோ பேசினார். அதையடுத்து, அவர்கள் என்னை மூன்றாம் தளத்திற்கு அழைத்துச்சென்றனர். அந்த அறையில் ஜன்னல்கள் இல்லை. இண்டர்நெட் வசதியும் இல்லை எனக் கூறினார்கள். நான் கதவை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தேன். சிலர் அவ்வப்போது வந்து கதவுகளைத் தட்டினர். ஆனால் நான் திறக்கவில்லை. சிறிது நேரத்தில் எனது சிம்கார்ட் ஆக்டிவேட் ஆனது.

உடனடியாக ரிஷிகேஷில் எனக்குத் தெரிந்த ஒருவரை தொடர்புகொண்டு, நடந்ததை விவரித்தேன். அவர் உடனடியாக நான் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு தொடர்புக்கொண்டு விசாரித்தார். அப்போது எனது புக்கிங் ரத்துசெய்யப்படவில்லை என்று பதிலளித்தனர். இதையடுத்து, நான் புக் செய்திருந்த ஹோட்டலைச் சேர்ந்தவர்கள் வந்து என்னை  அழைத்துச்சென்றனர். அடுத்த நாளே முதல் விமானத்தில் இந்தியாவை விட்டுக் கிளம்பிவிட்டேன்’’ என இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்துள்ள புகாரில், பெல்ஜியம் நாட்டுப் பெண் ஆட்டோ ஓட்டுநர், டிராவல் ஏஜென்ஸி, ஹோட்டல் மற்றும் போலி போலீஸார் மூலம் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இந்தியா மீதான மதிப்பைக் கெடுத்துவிடும். இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருவதற்கு விரும்ப மாட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பேசியுள்ள டெல்லி போலீஸார்,  'இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; அந்தப் பெண் கூறிய இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளனர்.